பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு வாகனமே தேவை.. இது பெட்ரோலால் மட்டுமல்ல பேட்டரியிலும் ஓடும்!
பெட்ரோல் மட்டுமில்ல மின்சாரத்தாலும் இயங்கக்கூடிய வகையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இந்திய இளைஞர்கள் மாற்றியமைத்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய இளைஞர்களின் மிகவும் பிரியமான இருசக்கர வாகனங்களில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் ஒன்று. இந்த ஸ்கூட்டரையே மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நிறுவனம், பெட்ரோல் மற்றும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவை கிரியேட்டிவ் சயின்ஸ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரு வித்தியாசமான சக்தியால் இயங்கக்கூடிய வாகனத்தையே ஹைபிரிட் வாகனம் என்றழைப்பர். இந்த திறனை இதுவரை உயர் ரக கார்களில் மட்டுமே தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், முதல் முறையாக ஸ்கூட்டருக்கு இத்திறன் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இதனை தனியார் நிறுவனம் ஒன்று வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹைபிரிட் திறன் கொண்ட வாகனமாக மாற்றுவதற்காக ஆக்டிவா 5ஜி மாடலையே இளைஞர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த மாற்றத்திற்கு தேவையான அனைத்து கூறுகளையும் அவர்கள் முன்னதாகவே தயார்படுத்தியிருந்ததை வீடியோ காட்டுகின்றது. ஸ்விட்ச்கள், வீலுடன் பொருத்தக்கூடிய மின் மோட்டார், உலோக பிளேட், இரு முனைக் கொண்ட ஆக்சலரேட்டர் கேபிள் ஆகியவற்றையே அவர்கள் தயார்நிலையில் வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்தே, ஆக்டிவா ஸ்கூட்டரை ஹைபிரிட் வாகனமாக மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கின. முன்னதாக, ஸ்கூட்டரின் அனைத்து பேனல்களும் கழற்றப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, இரு முனைக் கொண்ட (மின்சாரம் மற்றும் பெட்ரோல் எஞ்ஜினைக் கட்டுப்படுத்தக்கூடிய) ஆக்சலரேட்டர் கேபிள் மாற்றப்படுகின்றது. இதில், ஒரு முனை பெட்ரோல் எஞ்ஜினிலும், மறு முனை மின் மோட்டாரிலும் இணைக்கப்பட்டன.

இதையடுத்து, மின்சார மோட்டாரைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப ஓர் ஸ்விட்ச் சாவி போடும் பகுதியில் புதிதாக நிறுவப்படுகின்றது. இதற்கான, கன்ட்ரோலும் சாவியிலேயே வழங்கப்படுகின்றது. அதாவது, சாவி போடவில்லை இல்லை என்றால் அந்த ஸ்விட்சை ஆன் செய்ய இயலாது. சாவி போட்டு ஆன் செய்யும்பட்சத்தில், நேரடியாக வீலில் பொருத்தப்படும் மின் மோட்டாருக்கு மின்சாரம் செலுத்தப்படும்.

இது ஸ்கூட்டரை இயக்க உதவும். ஆமாங்க, வீலை இயக்குவதற்கான மின் மோட்டார் உலோக உருளை அமைப்பில் நேரடியாக ஸ்கூட்டரின் பின் வீலிலேயே பொருத்தப்படுகின்றது. இதற்கு தேவையான மின்சாரத்தை வழங்கக் கூடிய பேட்டரி, ஸ்கூட்டரின் ஸ்டோரேஜ் பகுதியில் நிலை நிறுத்தப்படுகின்றது. இதனை ஆன்-ஆஃப் செய்வதற்கு ஏதுவாக ஓர் ஸ்விட்சும் வழங்கப்படுகின்றது.

பின் வீலில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாரினால் எக்சாஸ்ட் சிஸ்டத்திற்கு எந்த இடைஞ்சலும் ஏற்படவில்லை என்பது தனி சிறப்பு. இதற்காக மிக மெல்லிய மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் அதிகபட்ச வேகம் பற்றிய தகவல் தெரியவில்லை. இருப்பினும், சோதனையோட்டத்தின் போது மின்சார மோட்டார் மணிக்கு சுமார் 50 கிமீ வரையிலான வேகத்தில் பயணித்ததை நம்மால் காண முடிகின்றது.

தொடர்ந்து கரடு முரடான சாலையைக் கூட அது மிகவும் சுலபமாக கடப்பதையும் மாடிஃபிகேஷன் குழுவினர் வீடியோவில் காண்பித்திருக்கின்றனர். இவ்வாறு, வாகனங்களை ஹைபிரிட் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியும். குறிப்பாக, தற்போது மலையளவு உயர்ந்து நிற்கும் பெட்ரோல் விலையுயர்வில் இருந்து நம்முடைய பாக்கெட்டைப் பத்திரப்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும், கணிசமாக காற்று மாசுபாட்டைக் குறைப்பிலும் நம்மால் பங்கு கொள்ள முடியும். இந்த ஹைபிரிட் மாற்றம் வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் தூண்டியிருக்கின்றது. ஆகையால், விரைவில் நாட்டின் சாலையில் இதுபோன்ற ஹைபிரிட் திறன் கொண்ட வாகனங்களைக் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாடிஃபிகேஷன் குழுவினர் இந்த செயலினை சோதனையோட்டத்தின் அடிப்படையில் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








