அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - டிவிஎஸ் ஐக்யூப்-ஆ? அல்லது பஜாஜ் சேத்தக்கா?
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை கடந்த சில வருடங்களில் மிக பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதை நாம் பார்த்து கொண்டுதான் வருகிறோம். புதிய அறிமுகங்களாக ஓலா மற்றும் சிம்பிள் இ-ஸ்கூட்டர்கள் வருகை தந்திருப்பது போட்டியை மேலும் கூட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே இந்த பிரிவில் ஹீரோ எலக்ட்ரிக், ஓகினாவா, ஆம்பியர், ஏத்தர், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்டவை முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களாக உள்ளன. இதில் குறிப்பாக பஜாஜ் சேத்தக் & டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர்களின் மீது எப்போதும் ஒரு வித எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ்-இல் இருந்து இவை வெளிவருவதால் அவ்வாறு இருக்கலாம். இதனால் இவை இரண்டிற்கும் இடையே தற்சமயம் போட்டி வலுத்து வருகிறது. இவை இரண்டும் கடந்த 2020ஆம் ஆண்டை காட்டிலும் இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விற்பனையாகி உள்ளன.

இந்த 2021ஆம் வருடத்தில் கடந்த ஜூலை மாதம் வரையில் கிட்டத்தட்ட 1,991 பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் இதனை காட்டிலு சற்று அதிகமாக 2,255 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2020ல் இதே 7 மாதங்களில் வெறும் 332 சேத்தக் ஸ்கூட்டர்களும், 71 ஐக்யூப் ஸ்கூட்டர்களுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் கடந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆரம்பத்தில், அதாவது 2020ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில் சேத்தக்கின் விற்பனையே ஐக்யூப்-ஐ காட்டிலும் அதிகமாக இருந்தது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2020 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒரு ஐக்யூப் இ-ஸ்கூட்டரை கூட டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்யவில்லை.

அதன்பின் 2020 மார்ச் மாத மத்தியில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால், இவை இரண்டின் விற்பனையும் 2020 ஏப்ரல் & மே மாதங்களில் 1 யூனிட் கூட விற்பனையாகவில்லை. அதன்பின் இந்த சூழ்நிலையில் இருந்து சற்று மீண்டுவந்த டிவிஎஸ் ஐக்யூப் 2020 ஜூன் மாதத்தில் 30 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. சேத்தக்கின் விற்பனை 2020 ஜூன் மாதத்திலும் பூஜ்ஜியமே ஆகும்.

ஆனால் அதற்கடுத்த ஜூலை மாதத்தில் ஒரேடியாக எழுச்சியாக, 120 சேத்தக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் இதன்பின் சேத்தக்கின் விற்பனை வேகமாக அதிகரிக்க துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து சேத்தக்கின் முன்பதிவுகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிறுத்தியது.

சேத்தக்கின் வீழ்ச்சி, டிவிஎஸ் ஐக்யூப்பிற்கு அனுகூலமாக அமைந்துவிட்டது. அதுவரையில், 100 யூனிட்களுக்கு உள்ளாகவே விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன்பின் ஒவ்வொரு மாதத்திலும் எளிதாக 200 யூனிட்கள் விற்பனையாக துவங்கியது. இதன்படி இந்த 2021ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஐக்யூப்பின் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 211, 203 மற்றும் 355 ஆகும்.

ஆனால் மறுப்பக்கம் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி கொள்ளப்பட்டதால் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்கள் முதல் 3 மாதங்களில் முறையே 30, 150 மற்றும் 90 யூனிட்கள் மட்டுமே விற்பனையானது. அதன்பின் கடந்த ஏப்ரல் மாதத்தில் சேத்திற்கான முன்பதிவுகள் மீண்டும் ஏற்று கொள்ளப்பட துவங்கப்பட்டதால் அதன் விற்பனை எண்ணிக்கை (508) டிவிஎஸ் ஐக்யூப்-ஐ முந்தியது.

கடந்த ஏப்ரலில் 307 டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டன. 2021 மே மாதத்தில் கொரோனா இரண்டாவது அலையால் வாகன விற்பனை பெரிய அளவில் குறைந்தது. இருப்பினும் இந்த மாதத்தில் 31 சேத்தக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட, ஐக்யூப் இ-ஸ்கூட்டரை ஒரு யூனிட் கூட டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடியவில்லை.

ஆனால் அதற்கடுத்த 2021 ஜூன் மாதத்தில் ஐக்யூப் மாடல் 639 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதத்தில் சேத்தக்கின் விற்பனை எண்ணிக்கை 452 ஆகும். 2021 ஜூலையில் இதுவரையில் இல்லாத அளவிற்கு சுமார் 730 சேத்தக் ஸ்கூட்டர்களை பஜாஜ் விற்பனை செய்துள்ளது. அதேநேரம் டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனையையும் பெரிய அளவில் குறை கூற முடியாது.

ஏனெனில் அந்த மாதத்தில் 540 ஐக்யூப் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன. இவற்றின் விற்பனைக்கு தற்போதைக்கு எதுவும் தடையாக இல்லை என்பதால், இது மேலும் வரும் மாதங்களுக்கும் தொடரும் என்றே தெரிகிறது. பஜாஜ் சேத்தக்கிற்கான முன்பதிவுகள் சமீபத்தில் தான் சென்னை, ஹைதராபாத் நகரங்களில் புதியதாக துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








