குறிப்பிட்ட கவாஸாகி பைக்குகளுக்கு பணம் தள்ளுபடி சலுகைகள் அறிவிப்பு!! இந்த ஏப்ரல் மாதம் வரையில் கிடைக்கும்
குறிப்பிட்ட சில கவாஸாகி பைக்குகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகி பிராண்டில் இருந்து 1000சிசி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் மற்றும் ரெட்ரோ-ஸ்டைல் கவாஸாகி டபிள்யூ800 விலைமிக்க மோட்டார்சைக்கிள்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இவற்றின் விலைகளை சற்று குறைக்கும் விதத்தில் சில தள்ளுபடிகளை கவாஸாகி நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விபரங்கள் இந்த ஜப்பானிய மோட்டார்சைகிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றின்படி, கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் மற்றும் டபிள்யூ800 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி வெர்ஸஸ் 650 பைக்கையும் ரூ.30,000 பண தள்ளுபடி உடன் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அதேநேரம் கவாஸாகியின் க்ரூஸர் மோட்டார்சைக்கிளான வல்கன் எஸ்-ல் ரூ.20,000 வரையில் சேமிக்க முடியும்.

மேலும், பொது சாலைகளில் பயன்படுத்த முடியாத ஆஃப்-ரோடு வாகனங்களுக்கும் பணம் தள்ளுபடியை கவாஸாகி வழங்கியுள்ளது. இவை ரூ.30,000-ல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.50,000 வரையில் உள்ளன.

இந்த சலுகைகள் இந்த ஏப்ரல் மாதம் (1- 30) வரையில் மட்டுமே அமலில் இருக்கும். இதனால் இந்த இரு கவாஸாகி பைக்குகளை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால், அதற்கு சரியான நேரம் இதுவே. இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை அறிய அருகில் உள்ள கவாஸாகி டீலர்ஷிப் மைத்தினை அணுகவும்.

இதற்கிடையில் கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் தான் அதன் சில மோட்டார்சைக்கிள்களின் விலைகளை அதிகரித்து இருந்தது. அதனை சரிக்கட்டும் நோக்கத்திலேயே தற்போது இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை அதிகரிப்பிற்கு பிறகு கவாஸாகி 1000எஸ்எக்ஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.11.29 லட்சமாக உள்ளது. இதில் பொருத்தப்படுகின்ற 1043சிசி இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் டிஒஎச்சி மற்றும் 16 வால்வுகளை கொண்டுள்ளது.

ரெட்ரோ-ஸ்டைல் மோட்டார்சைக்கிளான டபிள்யூ800 ரூ.7.19 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மெட்டாலிக் மேட் கிராபைட் க்ரே உடன் ஃப்ளாட் ஸ்பார்க் ப்ளாக் என்ற ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த பைக்கில் 773சிசி செங்குத்தான இரட்டை-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

649சிசி என்ஜின் உடன் வழங்கப்படுகின்ற கவாஸாகி வெர்ஸஸ் 650 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.79 லட்சமாகவும், வல்கன் எஸ் க்ருஸர் டைப் மோட்டார்சைக்கிளின் விலை ரூ.5.79 லட்சமாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








