புதியதாக 2 நிறங்களை பெற்ற நிஞ்சா 400!! மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி!
2021 கவாஸாகி நிஞ்சா 400 பைக்குகளுக்கு புதியதாக இரு நிறங்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கவாஸாகி நிஞ்சா 400 பைக்கிற்கு 2021ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக வழங்கப்பட்டுள்ள புதிய இரு நிறங்களில் மெட்டல் ட்விலைட் நீலம் ம்ற்றும் மெட்டல் அடர் க்ரே என்பவை அடங்குகின்றன.

அதேநேரம் முந்தைய நிறத்தேர்வுகளான கேஆர்டி லைம் க்ரீன் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் கருப்பு நிறத்திலும் வாடிக்கையாளர்கள் பைக்கை வாங்க முடியுமாம். புதிய பெயிண்ட் தேர்வுகளை தவிர்த்து பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

முன்பக்கத்தில் இரட்டை எல்இடி விளக்குகளையும், கருப்பு நிறத்தில் எதிர் காற்று தடுப்பு கண்ணாடியையும் கொண்டுள்ள இந்த கவாஸாகி பைக்கில் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் ஸ்போர்டியான வடிவத்தில் வழங்கப்படுகின்றன.

பைக்கின் காக்பிட்டில் பல-செயல்பாடுகளை கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக கியர் பொசிஷன் போன்ற பல்வேறு விதமான விபரங்களை பெற முடியும்.

இதனுடன் பைக்கை மிகவும் ஸ்டைலாக காட்டும் விதத்தில் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார், தாழ்வான இருக்கை மற்றும் மேம்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவையும் நிஞ்சா 400-இல் பொருத்தப்படுகின்றன.

இவற்றினால் பைக்கின் காற்று இயக்கவியல் பண்பு மிகவும் சிறப்பானதாக உள்ளது. கவாஸாகி நிஞ்சா 400 பைக்கில் 399சிசி இணையான இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது. சீனாவில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9600 ஆர்பிஎம்-இல் 46 பிஎஸ் மற்றும் 8000 ஆர்பிஎம்-இல் 37.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் நிஞ்சா 400 பைக்கை 2018ல் கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அறிமுகமான சமயத்தில் மற்ற 400சிசி பைக்குகளுக்கு தலைமை மாடல் போல் விளங்கினாலும், இந்த பைக் பெரியளவில் விற்பனையாகவில்லை.


Click it and Unblock the Notifications








