போலீசாருக்கு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்குகள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!
காவல் துறைக்கு எலெக்ட்ரிக் பைக்குகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனம் கபீரா மொபிலிட்டி. இந்த நிறுவனத்தின் கேஎம்3000 மற்றும் கேஎம்4000 ஆகிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில், கேஎம்3000 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் விலை 1.27 லட்ச ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் கேஎம்4000 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் விலை 1.37 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் 4 நாட்களிலேயே இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தது கவனம் பெற்றது.

தங்களது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை கபீரா மொபிலிட்டி நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவல் துறைகளுக்கு தங்களது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை டெலிவரி செய்யவுள்ளதாகவும் கபீரா மொபிலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கோவா காவல் துறைக்கு கேஎம்3000 மற்றும் கேஎம்4000 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கபீரா மொபிலிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் வாங்கப்படும் மொத்த வாகனங்களில், இரு சக்கர வாகனங்களின் பங்கு 50 சதவீதத்திற்கும் மேல் ஆகும்.

கோவா மாநிலத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு காவல் துறையினர் மாறுவது, பொதுமக்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு ஊக்குவிப்பதாக அமையும்'' என கூறப்பட்டுள்ளது.

இது உண்மை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தற்போது இந்தியாவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் காவல் துறையினர் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது, பொதுமக்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு ஊக்குவிப்பதாக அமையும்.

கேஎம்3000 எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் கேஎம்4000 எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு மணிக்கு 120 கிலோ மீட்டர்களாக உள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்குகளின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 150 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் பைக்காக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. இந்தியாவில் தற்போது கிடைக்க கூடிய எலெக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் பெட்ரோல் விலை உயர்வு, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் காரணமாக வரும் காலங்களில் நிறைய எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








