உலகளவில் ஃபேமஸான சுஸுகி ஹயபுஸா பைக் இந்தியா கொண்டுவரப்படுகிறது!! வருகிற 26ஆம் தேதி அறிமுகம்
சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 2021 ஹயபுஸா பைக்கின் இந்திய அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தலைமுறை சுஸுகி ஹயபுஸா உலகளவில் நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பைக் இந்திய சந்தைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அப்போதே செய்திகள் உலாவந்தன.

ஆனால் உறுதியான அறிமுக தேதி எதுவும் வெளியிடப்படாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் புதிய தலைமுறை ஹயபுஸா மோட்டார்சைக்கிள் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தற்போது சுஸுகி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் டுவிட்டர் பதிவை தான் மேலே பார்க்கிறீர்கள். 2021 ஹயபுஸா ஸ்டைலில், தொழிற்நுட்ப அம்சங்களில், இயந்திர பாகங்களில் என அனைத்திலும் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

முந்தைய தலைமுறைகளை காட்டிலும் வளைவான பாடி பேனல்கள் குறைவாகவே புதிய ஹயபுஸாவில் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான வளைவான பேனல்கள் கூர்மையானதாக மாற்றப்பட்டுவிட்டன.

கூர்மையான லைன்கள் பைக்கின் இரு பக்கத்திலும் பொருத்தப்படுகின்ற எக்ஸாஸ்ட் குழாய்களிலும் கூட கொடுக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்பக்கத்தில் விளக்குகள் எல்இடி தரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2021 ஹயபுஸாவில் வழக்கமான 1340சிசி இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் அப்படியே தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பை-டைக்ரஷ்னல் விரைவு-மாற்றி மற்றும் ரைடு-பை-வயர் தொழிற்நுட்பத்தை நிலையாக பெற்றுள்ள புதிய சுஸுகி ஹயபுஸாவின் அதிகப்பட்ச வேகம் 290kmph ஆகும். முந்தைய தலைமுறை ஹயபுஸா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த சூப்பர்பைக்குகளுள் ஒன்றாக விளங்கியது.

இதன் இந்திய வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் எக்ஸ்ஷோரூம் விலை தான். சுஸுகி முந்தைய தலைமுறை ஹயபுஸா பைக்கை ரூ.13.75 லட்சத்தில் விற்பனை செய்தது. மற்ற 1000சிசி பைக்குகளுடன் ஒப்பிடும்போது சுஸுகி ஹயபுஸா பைக்கின் இந்த விலை மலிவானதாக இருந்தது.

வழக்கம்போல் 2021 ஹயபுஸாவும் சிகேடி யூனிட்டாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளதாக சுஸுகி தெரிவித்துள்ளது. இருப்பினும் கவனிக்கத்தக்க அளவில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்களின் பைக்கின் விலை நிச்சயம் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

எங்களுக்கு தெரிந்தவரையில் 2021 சுஸுகி ஹயபுஸாவின் விலை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.17 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம். அதிகாரப்பூர்வ விலையை அறிய ஏப்ரல் 26ஆம் தேதி வரையில் காத்திருங்கள்.


Click it and Unblock the Notifications








