2021 கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் இப்படியொரு பாதுகாப்பு வசதியா?! யாருமே எதிர்பார்க்கல..
2021 கேடிஎம் ட்யூக் 390 பைக் ரேடார் சார்ந்த க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பெற்றுவரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வசதியினால் என்ன பயன்?, இந்த செய்தியில் பார்ப்போம்.

தயாரிப்புகளில் அடுத்ததாக தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கவுள்ள தொழிற்நுட்பங்களை பற்றி அவற்றின் காப்புரிமை படங்கள் அல்லது முன்னோட்ட படங்கள் மூலமாக அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இவ்வாறு புதிய புதிய தொழிற்நுட்பங்களை ஆராய்ச்சி செய்து, கண்டுப்பிடித்து தயாரிப்புகளில் வழங்குவதை ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் பிராண்டும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த வகையில் கேடிஎம் நிறுவனம் அதன் 390சிசி சூப்பர்மோட்டோ பைக்கிற்கு ரேடார் சார்ந்த க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டத்தை வழங்க பணியாற்றி வருகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காப்புரிமை படங்களில் இந்த தொழிற்நுட்பம் கேடிஎம் 390 ட்யூக்கில் பொருத்தப்பட்டுள்ளதை தெளிவாக பார்க்க முடிகிறது. இதே மாதிரியான க்ரூஸ் கண்ட்ரோல் தொழிற்நுட்பம்தான் போஸ்ச் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 2021 பிஎம்டபிள்யூ ஆர்1250ஆர்டி மற்றும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்திற்காக தயாரிப்பு மாடல்களில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை கொண்டுவரும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக கேடிஎம் நிறுவனம் கடந்த ஆண்டில் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து 1290 சூப்பர் அட்வென்ச்சர் பைக் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே வித்தியாசமான சிஸ்டத்துடன் சோதனையில் உட்படுத்தப்பட்டது.

இதனால், இந்த தொழிற்நுட்பம் 2021ஆம் அப்கிரேடாக புதிய 1290 சூப்பர் அட்வென்ச்சர் பைக்கின் மூலம் அறிமுகமாகலாம். ஆனால் அது இன்னும் நமக்கு உறுதியாக தெரியவில்லை. தற்போது வெளியாகியுள்ள காப்புரிமை படங்களின் மூலமாக 2021 கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் இந்த தொழிற்நுட்ப வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என்பது மட்டும்தான் தெரியவந்துள்ளது.

மேலும், என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்பதையும், பெட்ரோல் டேங்க், துணை ஃப்ரேம் மற்றும் சேசிஸ் போன்றவை புதியதாக வழங்கப்பட்டுள்ளதையும் பெனெட்ஸ் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இந்த காப்புரிமை படங்கள் மூலமாக அறிய முடிகிறது.

அதேபோல் சக்கரத்தின் டிசைனும் அலாய்-இல் இருந்து வயர் ஸ்போக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதையும் சிலர் இந்நேரம் பார்த்திருப்பீர்கள். ரேடார் சென்சாரின் செயல்பாட்டிற்காக ஹெட்லேம்பின் டிசைனும் சற்று மாற்றப்பட்டிருப்பதையும் இந்த படங்கள் வெளிக்காட்டுகின்றன.

நிமிர்ந்த தோற்றம் கொண்ட 390 ட்யூக் போன்ற சூப்பர்மோட்டோ பைக்குகளில் ரேடார் சென்சாரை பொருத்துவது கேடிஎம் நிறுவனத்திற்கு சவாலானதாக இருக்காது. ஆனால் 1290 சூப்பர் அட்வென்ச்சர் போன்ற அட்வென்ச்சர் பைக்குகளில் இதனை பொருத்த ஹெட்லேம்பின் வடிவத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு இந்த நிறுவனம் உள்ளாகியுள்ளது.

இதனால் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா பைக்குகளிலும் ரேடார் சார்ந்த க்ரூஸ் கண்ட்ரோல் வசதி எதிர்காலத்தில் கொண்டுவரப்படலாம். 390 ட்யூக் இந்தியாவிலும் விற்பனையில் உள்ளதால் இந்த தொழிற்நுட்ப வசதி இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








