பெட்ரோல் விலை உயர்ந்தால் என்ன? அதான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கே... மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியானது!
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான பாவிஷ் அகர்வால் இந்த தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், எத்தனை மணிக்கு ஓலா எலெக்ட்ரிக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது? என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி மதியம் 2 மணிக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் டூவீலர் தொழிற்சாலை தற்போது மிக வேகமாக கட்டமைத்து வருகிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த தொழிற்சாலையில்தான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் நடக்கவுள்ளன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து விட்டனர். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது? என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

முன்பதிவு தொகை மிகவும் குறைவு என்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. வெறும் 499 ரூபாயை செலுத்தி, தற்போதே நீங்கள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த தொகை மிகவும் குறைவு என்பதால், பலர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியாவின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகள் குவிந்துள்ளன. பாவிஷ் அகர்வால்தான் இந்த தகவலையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மற்ற ஒரு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போல் அல்லாமல், முதல் நாளிலேயே நாடு முழுவதும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

மற்ற ஒரு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெரிய நகரங்களில் மட்டுமே முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. அதன்பின்னர் படிப்படியாகதான் மற்ற பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதல் நாளில் இருந்தே நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும்.

தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவாக இருக்கும்? என்பதுதான் வாடிக்கையாளர்களின் பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால் இந்த கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால், ஆகஸ்ட் 15ம் தேதி மதியம் 2 மணி வரை நாம் காத்திருக்க வேண்டும்.

குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிச்சயமாக இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் எரிபொருள் விலை உயர்வு பிரச்னை காரணமாக பொதுமக்கள் பலர் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் விலை அதிகம், ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைப்பது போன்ற பிரச்னைகளால் பலரால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க முடிவதில்லை. இந்த பிரச்னைகளை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சரி செய்யும்பட்சத்தில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதில் பொதுமக்களுக்கு எந்தவிதமான தயக்கமும் இருக்காது.

அத்துடன் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியா முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன் வசதிகளையும் மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தவுள்ளது. எனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் பற்றிய கவலையும் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது என நம்பலாம். ஆகஸ்ட் 15ம் தேதி மதியம் 2 மணிக்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு முழுமையாக தெரியவரும்.


Click it and Unblock the Notifications








