Revolt RV 400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் பணிகளை தொடங்க திட்டம்... இந்த முறை 70 நகர வாசிகள் புக் செய்யலாம்!
ரிவோல்ட் ஆர்வி 400 (Revolt RV 400) மின்சார பைக்கிற்கு மீண்டும் புக்கிங் பணிகளை தொடங்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த முறை புதிதாக 64 புதிய நகரங்கள் புக்கிங் செய்வதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகையால், 70 நகர வாசிகள் ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கை புக் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்மிக்க எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலாக ரிவோல்ட் ஆர்வி 400 மாடல் இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கே நிறுவனம் மீண்டும் புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முறை 70 நகரங்களில் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது. முன்னதாக இப்பைக் நாட்டின் ஆறு குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்தது. இதனை தற்போது நிறுவனம் விரிவாக்கம் செய்யும் பணியில் களமிறங்கியிருக்கின்றது.

ஆம், மேலும் புதிதாக 64 நகரங்களில் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு அந்தந்த நகரங்களில் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட இருப்பதாக நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கின்றது.

வரும் அக்டோபர் 21ம் தேதி, மதியம் 12 மணி முதல் புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. தற்போது வரை சென்னை, டெல்லி, மும்பை, புனே, அஹமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மிக விரைவில் நாட்டின் பிற முக்கிய நகரங்களான பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்பூர், சூரத், சண்டிகர், லக்னோ, என்சிஆர் உள்ளிட்ட நகரங்களிலும் எலெக்ட்ரிக் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இதற்கான பணிகளில் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. விற்பனையகங்களை திறத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி பார்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றை நிறுவனம் செய்ய தொடங்கியுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் ஓர் முழுமையான சார்ஜில் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ வேகம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 3கிலோவாட் மிட்-டிரைவ் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கான மின்சார திறனை 3.24kWh லித்தியன் அயன் பேட்டரி வழங்கும்.

இந்த எலெக்ட்ரிக் பைக்கின் சில அம்சங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரத்யேக 'மைரிவோல்ட்' எனப்படும் செயலி வழங்கப்படுகின்றது. ஜியோ ஃபென்சிங், ஒலியை கட்டுப்படுத்தும் வசதி, எலெக்ட்ரிக் பைக் குறித்து அறியும் தொழில்நுட்பம், பேட்டரி நிலை, பயண வரலாறு உள்ளிட்ட முக்கிய தகவல்களை இதன் வாயிலாக பெற முடியும்.

தொடர்ந்து, மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன. ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களே அவை ஆகும். மேலும், சிறந்த இயக்க அனுபவத்திற்காக இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் அப்சைடு டவுண் ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில், முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








