இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான ராயல் என்பீல்டு பைக் எதுன்னு தெரியுமா?
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்கான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளின் பட்டியலில் வழக்கம் போல கிளாசிக் 350 முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் 39,391 பைக்குகளை விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 19,601 ஆக குறைந்துள்ளது. இது 50.2 சதவீத வீழ்ச்சியாகும். அதாவது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

இருப்பினும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு புல்லட் 350 இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 6,513 புல்லட் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 8,733 ஆக உயர்ந்துள்ளது. இது 34 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு 7,031 மீட்டியோர் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 6,775 ஆக குறைந்துள்ளது. இது 3.6 சதவீத வீழ்ச்சியாகும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதுவரவுகளில் மீட்டியோர் 350 பைக்கும் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு இறுதியில்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்தது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 உள்ளிட்ட பைக்குகள் உடன் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிட்டு வருகிறது. தற்போது ஏற்பட்டிருப்பது தற்காலிக வீழ்ச்சியாக கருதப்படுகிறது. வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சிறப்பாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த பட்டியலில் புல்லட் எலெக்ட்ரா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு நவம்பர் மாதம் 4,257 எலெக்ட்ரா பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 3,490 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ராயல் என்பீல்டு புல்லட் எலெக்ட்ரா விற்பனையில் 21.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,550 ஹிமாலயன் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 3,310 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 113.5 சதவீத வளர்ச்சியை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பதிவு செய்துள்ளது.

இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் அட்வென்ஜர் டூரர் பைக் ஆகும். இந்த பைக்கின் அடிப்படையில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஸ்க்ராம் 411 பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கும்.

வரும் 2022ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த பட்டியலில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஆறாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் 1,109 என்ற எண்ணிக்கையில் 650 ட்வின்ஸ் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,154 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள் விற்பனையில் 94.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications








