செம கெத்து... வெளி நாடுகளில் சக்கை போடு போடும் நம்ம ராயல் என்பீல்டு பைக்குகள்... யாருக்குதான் பிடிக்காது?
கடந்த ஜூன் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் எவ்வளவு பைக்குகளை விற்பனை செய்துள்ளது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 43,048 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையாகும். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ராயல் என்பீல்டு பைக்குளின் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 38,065 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உள்நாட்டு சந்தையை பொறுத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 35,815 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் 36,510 மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 2 சதவீதம் குறைந்துள்ளது. எனினும் கடந்த ஜூன் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 1,555 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஜூன் மாதம் 7,233 மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரை, இது மிகவும் சிறப்பான வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை குறைந்திருப்பதற்கு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முதல் அலையை போல் இம்முறை ஒன்றிய அரசு நாடு தழுவிய ஊரடங்கை பிறப்பிக்கவில்லை.

அதற்கு பதிலாக அந்தந்த மாநில அரசுகளே ஊரடங்கை பிறப்பித்து கொண்டன. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாகவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை சரிவை சந்தித்திருக்கும் என கருதப்படுகிறது. எனினும் இந்தியா தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் பிடியில் இருந்து மீண்டு வருகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டு விட்டன. எனவே ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை இனி மீண்டும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வரும் காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஏராளமான புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதில், புதிய தலைமுறை கிளாசிக் 350 மிகவும் முக்கியமானது. புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் சாலை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. வெகு விரைவாகவே இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 350 சிசி செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








