மீண்டும் ஹிமாலயன் பைக்கிற்கு குவியும் வரவேற்பு!! அதிகரிக்கும் ராயல் என்பீல்டின் விற்பனை!
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்ட்களுள் ஒன்றாக விளங்கும் ராயல் என்பீல்டு 10 சதவீத வளர்ச்சி உடன் கடந்த பிப்ரவரி மாத விற்பனையை முடித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை குறித்த விபரங்களை சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி மொத்தமாக 69,659 மோட்டார்சைக்கிள்களை இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்தும், இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தும் உள்ளது. இந்த எண்ணிக்கை 2020 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் சுமார் 10 சதவீதம் அதிகமாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 63,536 என்றே இருந்தது. இதில் ராயல் என்பீல்டின் உள்நாட்டு விற்பனை மட்டுமே 65,114 ஆகும். ஆனால் 2020 பிப்ரவரியில் 61,188 மோட்டார்சைக்கிள்களையே இந்த நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் உள்நாட்டு விற்பனையில் 6 சதவீத முன்னேற்றத்தை இந்த சென்னை மோட்டார்சைக்கிள் நிறுவனம் கண்டுள்ளது. அதேநேரம் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2,348 மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்திருந்த இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் சுமார் 94 சதவீதம் அதிகமாக 4,545 யூனிட் பைக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது.

இவ்வாறு விற்பனை தொடர்ந்து அதிகரித்துவருவதற்கு ராயல் என்பீல்டின் அடையாளங்களான கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகள் தான் மிக முக்கிய காரணம் என்றாலும், சமீபத்திய அறிமுகங்களான மீட்டியோர் 350 மற்றும் புதிய தலைமுறை ஹிமாலயன் பைக்குகளும் பெரிய அளவில் உதவிகரமாக இருந்துள்ளன.

குறிப்பாக இந்தியா உள்பட ஐரோப்ப்பா மற்றும் யுகே நாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2021 ஹிமாலயன் நமது அண்டை மாநிலமான கேரளாவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதிலும் ஒரே நாளில் 100 புதிய ஹிமாலயன் பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டது மிகுந்த கவனத்தை ஈர்த்தது.

இதனால்தான் இவ்வாறு புதிய புதிய மாடல்களை அடுத்த ஏழு வருடங்களுக்கு, 3 மாதத்திற்கு ஒரு பைக் என அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி அடுத்ததாக புதிய 650சிசி க்ரூஸர் பைக்கை விற்பனைக்கு கொண்டுவர இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








