புதிய பைக்கிற்கான பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு!! இளைஞர்களின் கவனத்தை ஈர்க்குமா?
ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்தடுத்ததாக இந்தியாவில் அறிமுகப்படுத்த மோட்டார்சைக்கிள்களை தயார்படுத்தி வருகிறது. இதன் காரணமாகவே ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை அவ்வப்போது சோதனை ஓட்டங்களில் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த சென்னை மோட்டார்சைக்கிள் பிராண்ட், ‘ஷூட்கன்' (shotgun) என்ற பெயருக்கான வர்த்தக முத்திரையை தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய பெயர் எந்த மோட்டார்சைக்கிளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனம் பொது சாலையில் சோதனை செய்யும் மோட்டார்சைக்கிள்களில் இரண்டு 650சிசி பைக்குகளும் அடங்குகின்றன. இதில் ஒன்று தாழ்வான வடிவமைப்பை கொண்ட க்ரூஸர் ரக பைக், மற்றொன்று வழக்கமான ராயல் என்பீல்டு பைக்குகளை போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
Source: Rushlane

ஷூட்கன் என்கிற பெயர் இந்த இரு 650சிசி பைக்குகளில் எதேனும் ஒன்றிற்கு தான் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதேநேரம் இந்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்குகள் மீட்டியோர் 650 மற்றும் கிளாசிக் 650 என்கிற பெயர்களில் வெளிவரலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தற்சமயம் விற்பனையில் உள்ள காண்டினெண்டல் ஜிடி650 மற்றும் இண்டர்செப்டர் 650 பைக்குகளில் பொருத்தப்படும் அதே 648சிசி, காற்று/ஆயில்-கூல்டு, இணையான-இரட்டை என்ஜின் தான் ராயல் என்பீல்டின் புதிய 650சிசி பைக்குகளிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

அதிகப்பட்சமாக 47.65 பிஎஸ் மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜின் மட்டுமின்றி இந்த 650சிசி பைக்குகள் பெரும்பான்மையான பாகங்களை தற்போதைய இண்டர்செப்டர் & காண்டினெண்டல் ஜிடி பைக்குகளில் இருந்து தான் பெற்றுவரும்.

இதன் காரணமாக தயாரிப்பு செலவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பதால், புதிய 650சிசி பைக்குகளின் விலைகளை ரூ.3 லட்சத்தில் எதிர்பார்க்கலாம். இந்த இரு புதிய பைக்குகளில் எது ஷூட்கன் என்கிற பெயரை பெற்றுவரவுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால் 650சிசி பைக்கிற்கு தான் இந்த பெயரை ராயல் என்பீல்டு நிறுவனம் சூட்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இந்த 650சிசி பைக்குகளின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் பல முறை நமக்கு கிடைத்துள்ளன.

அந்த படங்களின் மூலம் மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2021 ஹிமாலயனிலும் வழங்கப்பட்ட ட்ரிப்பர் நாவிகேஷன் வசதியை புதிய 650சிசி பைக்குகளும் பெற்றுவரவுள்ளதை அறிந்திருந்தோம்.

650சிசி பைக்குகள் மட்டுமின்றி ஏற்கனவே கூறியதுபோல் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்சமயம் பல்வேறான மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகிறது. இவற்றில் முதலாவதாக அடுத்த தலைமுறை கிளாசிக் 350 பைக் இன்னும் சில மாதங்களில் வெளிவரவுள்ளது.


Click it and Unblock the Notifications








