ஒரே மாதத்தில் 40 ஆயிரம் அப்பாச்சி பைக்குகளை விற்றுள்ள டிவிஎஸ்!! பஜாஜ் பல்சரை முந்தி விற்பனையில் முதலிடம்
கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் விற்பனையாகியுள்ள 150சிசி- 200சிசி மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குறைக்கடத்தி சிப்களின் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக அனைத்து பிரிவுகளிலும் வாகனங்களை விற்க முடியாமல் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவித்து வருகின்றன. உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை நீங்கினால், இந்த நிலை சரியாகிவிடும் என்றே தெரிகிறது.

150சிசி- 200சிசி மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 90,821 யூனிட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,82,075 யூனிட்களாக இருந்தது. இந்த வகையில் இந்த பிரிவில் மோட்டார்சைக்கிளின் விற்பனை சுமார் 50.12% குறைந்துள்ளது.

இருப்பினும் 2021 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த செப்டம்பர் மாத 150சிசி- 200சிசி பைக்குகளின் விற்பனை 13.57% அதிகரித்துள்ளது. இந்த பிரிவில் அதிகப்பட்சமாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் அப்பாச்சி மோட்டார்சைக்கிள்களை சுமார் 40,661 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது.

உண்மையில் அப்பாச்சி பைக்குகளின் விற்பனை 2020 செப்டம்பரை காட்டிலும் 7.60% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பரில் 37,788 அப்பாச்சி பைக்குகளை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. 2020 செப்டம்பர் மாதமாவது பரவாயில்லை, 2021 ஆகஸ்ட்டில் வெறும் 16,423 அப்பாச்சி பைக்குகளையே டிவிஎஸ் விற்பனை செய்தது.

இதன்படி மாதம்-மாதம் ஒப்பிடுகையில் அப்பாச்சி பைக்குகளின் விற்பனை சுமார் 147.59% உயர்ந்துள்ளது. 150சிசி- 200சிசி பிரிவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளில் அப்பாச்சி ஆர்டிஆர்160 & 160 4வி, அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஏபிஎஸ், அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி உள்ளிட்டவை அடங்குகின்றன. இதேபோன்று அதிக எண்ணிக்கையில் பைக்குகளை கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

வருடம்-வருடம் ஒப்பிடுகையிலும், மாதம்-மாதம் ஒப்பிடுகையிலும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், 2020 செப்டம்பரில் சுமார் 46,041 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த செப்டம்பரில் வெறும் 14,785 யூனிட்களே விற்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் மாதத்துடனான ஒப்பிடுகையிலும் 48.89 சதவீதம் குறைவாகும்.

இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை யமஹாவின் ஆர்15 மாடல் பிடித்துள்ளது. யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் சமீபத்தில் தான் ஆர்15 வி4 மற்றும் ஆர்15 வி4 எம் பைக்குகளை அறிமுகப்படுத்தி இருந்தது. இவற்றின் உதவியுடன் கடந்த மாதத்தில் யமஹா ஆர்15 பைக்குகளின் விற்பனை 11 ஆயிரத்தை கடந்து, 11,792 என உள்ளன.

அதுவே 2020 செப்டம்பரில் வெறும் 4,696 ஆர்15 பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன. நான்காவது இடத்தில் உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்-இன் கடந்த 2021 செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கை (5,996) 2020 செப்டம்பரை காட்டிலும் கிட்டத்தட்ட 53.63% குறைந்துள்ளது என்றாலும், 2021 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் 79.31% அதிகரித்துள்ளது.

5வது மற்றும் 6வது இடங்களில் மீண்டும் யமஹா & ஹீரோ மோட்டோகார்பின் மோட்டார்சைகிள்களாக எஃப்.இசட் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 முறையே 4,550 யூனிட்கள் மற்றும் 3,375 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு சமயத்தில் பிரபலமாக இருந்த யமஹா எஃப்.இசட் பைக்குகளின் விற்பனை கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்து வருகிறது.

மறுப்பக்கம் ஹீரோவின் மலிவான அட்வென்ச்சர் பைக்காக விளங்கும் எக்ஸ்பல்ஸ்200-இன் விற்பனை மெல்ல மெல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. அதேபோல் இவற்றிற்கு அடுத்த இந்த வரிசையில் 7வது இடத்தை பிடித்துள்ள யமஹா எம்டி-15 பைக்கின் விற்பனை கடந்த ஆண்டில் இருந்தே ஏற்றமும், இறக்கமுமாய் இருந்து வருகிறது. ஆர்15 மோட்டார்சைக்கிளின் நாக்டு வெர்சனாக பார்க்கப்படும் எம்டி-15 கடந்த மாதத்தில் 2,514 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் யூனிட்களுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்ட கடைசி 150சிசி-200சிசி மோட்டார்சைக்கிளாக கேடிஎம் 200 வரிசை பைக்குகள் உள்ளன. ட்யூக் 200 & ஆர்சி200 என்பவை அடங்கும் இந்த வரிசையில் மொத்தம் 2,326 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி200 பைக் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications








