கொரோனாவிற்கு மத்தியிலும் கிட்டத்தட்ட 20 லட்ச ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை!! மகிழ்ச்சியில் ஹோண்டா...
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர் மாடல்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்க ஆரம்பித்ததில் இருந்து தான் கடந்த நிதியாண்டும் (2020 ஏப்ரல் 1) துவங்கியது. இதனால் குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் எந்தவொரு வாகனமும் விற்பனை செய்யப்படவில்லை.

மொத்த ஆட்டோமொபைல் துறையின் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியம் என அப்போது குறிப்பிடப்பட்டது. இதனால் இந்த செய்தியில் பார்க்கவுள்ள ஸ்கூட்டர்கள் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்டவைகளே ஆகும்.

இதன் காரணமாக பெரும்பான்மையான ஸ்கூட்டர்கள் இதற்கு முந்தைய 2019- 2020 நிதியாண்டை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு சில மாடல்கள் மட்டுமே ஊரடங்குகளையும் தாண்டி சற்று அதிகமாக விற்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பிரபலமான ஸ்கூட்டர் மாடல் என்றால் அதில் எப்போதுமே ஹோண்டா ஆக்டிவா தான் முன்னிலையில் இருக்கும் என்பது எல்லாருக்கு தெரியும். கடந்த நிதியாண்டில் மட்டும் 19,39,640 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில் கிட்டத்தட்ட 26 லட்ச ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டு இருந்தன. முதலிட இருக்கையில் அமர்ந்திருந்தாலும், இந்த வகையில் ஹோண்டா ஆக்டிவாவின் விற்பனை சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது.

அதாவது 4ல் ஒரு பகுதி குறைந்துள்ளது. இந்த அளவிற்கு குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டிருந்தால் வேறெதாவது மாடலாக இருந்தால் அடுத்த இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும். ஆனால் ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தை இறுக்கி பிடித்துள்ளது.
| Rank | Models | FY2021 | FY2020 | Growth (%) |
| 1 | Honda Activa | 19,39,640 | 25,91,059 | -25 |
| 2 | TVS Jupiter | 5,40,466 | 5,95,467 | -9 |
| 3 | Honda Dio | 3,14,417 | 4,39,799 | -29 |
| 4 | TVS Ntorq | 2,51,491 | 2,65,016 | -5 |
| 5 | Hero Pleasure | 2,03,594 | 1,55,329 | 31 |
| 6 | Hero Destini 125 | 1,44,332 | 1,13,944 | 27 |
| 7 | Yamaha Ray | 1,30,648 | 1,07,485 | 22 |
| 8 | Yamaha Fascino | 1,08,496 | 1,66,491 | -35 |
| 9 | Hero Maestro | 95,533 | 94,533 | 1 |
| 10 | TVS Pep+ | 89,147 | 90,309 | -1 |
Source: Autopunditz

ஏனெனில் இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கைக்கும் ஆக்டிவாவின் விற்பனை எண்ணிக்கைக்கும் சுமார் 14 லட்சம் அளவில் வித்தியாசம் உள்ளது. அப்படியென்றால் ஒவ்வொரு மாதத்திலும் எந்த அளவிற்கு ஆக்டிவா ஸ்கூட்டர்களை இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்கிறது என்பதை சற்று நினைத்து பாருங்கள்.

டிவிஎஸ் ஜூபிட்டரின் கடந்த நிதியாண்டு விற்பனை எண்ணிக்கை 5,40,466 ஆகும். 2020 ஏப்ரல் மாதத்தை தவிர்த்து மற்ற அனைத்து மாதங்களிலும் வழக்கம்போலவே குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது இதன் முந்தைய நிதியாண்டுடனான ஒப்பிடுகையில் தெரிய வருகிறது.

ஆக்டிவாவிற்கு அடுத்து ஹோண்டாவின் பிரதான ஸ்கூட்டர் மாடலான டியோ கடந்த நிதியாண்டில் 3,14,417 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவாவை போல் இதன் விற்பனையும் 29 சதவீதம் அளவில் குறைந்துள்ளது.

டிவிஎஸ் எண்டார்க், ஹீரோ ப்ளஷர், ஹீரோ டெஸ்டினி உள்ளிட்டவை 4வது, 5வது மற்றும் ஆறாவது இடங்களில் கிட்டத்தட்ட 50,000 யூனிட்களின் வித்தியாசங்களுடன் உள்ளன. இதில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை கவனிக்கத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

7வது மற்றும் 8வது இடங்களை யமஹா ஸ்கூட்டர்களான ரே மற்றும் ஃபேஸினோ ஆக்கிரமித்துள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் ஹீரோ மேஸ்ட்ரோ மற்றும் டிவிஎஸ் பெப்+ ஸ்கூட்டர் மாடல்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








