350 சிசி செக்மெண்ட்டில் தொடரும் ராயல் என்பீல்டு ஆதிக்கம்... விற்பனையில் முதல் இடத்தில் இருப்பது எந்த பைக்?
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 350 சிசி மோட்டார்சைக்கிள்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 350 சிசி மோட்டார்சைக்கிள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 40,872 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 40,834 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் சிறிய வளர்ச்சியை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பதிவு செய்துள்ளது. சரியாக சொல்வதென்றால் இது 0.09 சதவீத வளர்ச்சியாகும். விற்பனை வளர்ச்சி சதவீதம் சிறிதுதான் என்றாலும், இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை நிலைநாட்டியுள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை ராயல் என்பீல்டு புல்லட் 350 பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 11,570 புல்லட் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் இந்த எண்ணிக்கை 9,559 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 21.04 சதவீத வளர்ச்சியை புல்லட் 350 பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தையும் ராயல் என்பீல்டு தயாரிப்புதான் பிடித்துள்ளது. அது எலெக்ட்ரா 350 ஆகும். நடப்பாண்டு ஜனவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 5,431 எலெக்ட்ரா 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு ஜனவரியில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்த எலெக்ட்ரா 350 பைக்குகளின் எண்ணிக்கை 5,869. இது 7.46 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பதும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புதான். புதுவரவான ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்தான் 4வது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் 5,073 மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்தாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட முடியாது. தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மாடல் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமாகி வருகிறது.

இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை மற்றொரு புதுவரவான ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் 3,543 ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பானது, மீட்டியோர் 350 மாடலுக்கு சற்று முன்னதாகதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது கடந்தாண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட முடியாது. நாங்கள் வழங்கியுள்ள இந்த டாப்-5 பட்டியலின் மூலம் 350 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் தொடர்வதை உணர்ந்து கொள்ளலாம்.

இதை முறியடிக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து பார்த்தும் கொஞ்சம் கூட பலன் கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு 350 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் வலுவாக காலூன்றியுள்ளது. எனினும் ராயல் என்பீல்டு நிறுவனத்தை அசைத்து பார்க்க ஹோண்டா தற்போது முயற்சிகளை தொடங்கியுள்ளது. இது பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








