ஸ்பெஷல் எடிசனின் வருகையால் ஒரேடியாக எகிறிய ஸ்பிளெண்டரின் விற்பனை!! திடீரென பரபரப்பாக விற்பனையாகும் சிபி ஷைன்
கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. ரஷ்லேன் செய்திதளம் பதிவிட்டுள்ள அவற்றில் முதல் 10 வாகனங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனை என்றாலே அதில் பெரும்பாலும் ஹீரோ மோட்டோகார்பின் ஸ்பிளெண்டர் பைக் மாடல் தான் முதலிடத்தை பிடிப்பது வழக்கம். அது கடந்த 2021 பிப்ரவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

அதிலும் 100 மில்லியன் எடிசன் போன்ற புதிய அறிமுகங்களினால் ஸ்பிளெண்டரின் விற்பனை 2020 பிப்ரவரியை காட்டிலும் 14.98 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2,15,196 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த மாதத்தில் 2,47,422 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்கப்பட்டுள்ளன.

இந்த ஹீரோ பைக்கிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலான ஹோண்டா ஆக்டிவா 2,09,389 என்ற விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளது. ஆனால் இதன் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.09 சதவீதம் குறைந்துள்ளது.

| Rank | Model | Feb-21 | Feb-20 | Growth (%) |
| 1 | Hero Splendor | 2,47,422 | 2,15,196 | 14.98 |
| 2 | Honda Activa | 2,09,389 | 2,22,961 | -6.09 |
| 3 | Hero HF Deluxe | 1,26,309 | 1,75,997 | -28.23 |
| 4 | Honda CB Shine | 1,15,970 | 50,825 | 128.18 |
| 5 | Bajaj Pulsar | 81,454 | 75,669 | 7.65 |
| 6 | TVS Jupiter | 52,189 | 31,440 | 66.00 |
| 7 | TVS XL Super | 51,445 | 55,802 | -7.81 |
| 8 | Suzuki Access | 48,496 | 50,103 | -3.21 |
| 9 | Bajaj Platina | 46,264 | 33,799 | 36.88 |
| 10 | Royal Enfield Classic 350 | 36,025 | 41,786 | -13.79 |
இன்னும் சொல்லப்போனால் 2020 பிப்ரவரியில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனமாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான் 2,22,961 யூனிட்களின் விற்பனை எண்ணிக்கை உடன் முதலிடத்தை பிடித்திருந்தது.

கடந்த மாதத்தில் 1,26,309 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் எச்எஃப் டீலக்ஸின் இந்த விற்பனை எண்ணிக்கை 1,75,997 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட 2020 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 28.23% குறைவாகும்.

இந்த டாப்-10 லிஸ்ட்டில் நான்காவது இடத்தை வழக்கமாக பஜாஜ் பல்சர் பைக்குகள் தான் பிடிக்கும். ஆனால் இந்த முறை ஹோண்டா சிபி ஷைன் பைக் மாடலின் விற்பனை 2020 பிப்ரவரியை காட்டிலும் ஒரேடியாக 128.18% அதிகரித்து 1.15 லட்சத்தை கடந்தது மட்டுமில்லாமல் 4வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

இதனால் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பஜாஜ் பல்சர் பைக்குகள் மொத்தமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 81,454 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனையும் கடந்த ஆண்டு உடன் ஒப்பிடுகையில் 7.65 சதவீதம் அதிகரித்துள்ளது.

6வது மற்றும் 7வது இடங்களை டிவிஎஸ் மோட்டார்ஸின் ஸ்கூட்டர் மாடலான ஜூபிட்டர் மற்றும் கமர்ஷியல் வாகனமான எக்ஸ்எல் சூப்பர் பெற்றுள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை முறையே 52,189 மற்றும் 51,445 ஆகும்.

இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி மூன்று இடங்களை சிறந்த மைலேஜ் தரக்கூடிய ஸ்கூட்டராக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படும் சுஸுகி ஆக்ஸஸ், பஜாஜ் பிளாட்டினா மற்றும் ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் ஒரே ஒரு யமஹா தயாரிப்பு வாகனம் கூட இல்லாதது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








