பைக்குகளின் விலைகளை ரூ.1.05 லட்சம் வரையில் உயர்த்தியது ட்ரையம்ப்!! புதிய விலைகளை தெரிஞ்சிக்கோங்க...
ட்ரையம்ப் நிறுவனம் அதன் ட்ரிபிள் ஆர், ராக்கெட் 3 மோட்டார்சைக்கிள்களின் விலைகளை அதிகப்பட்சமாக ரூ.1.05 லட்சம் வரையில் அதிகரித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த 2020ஆம் ஆண்டு ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனையில் இருந்த ஸ்ட்ரீட் ட்ரிபிள் எஸ் பைக்கிற்கு மாற்றாக ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்குகளின் வரிசையில் ஆரம்ப நிலையில் நிலைநிறுத்தப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் பைக்கிற்கான விலையாக ரு.8.84 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த விலையில் தற்போது ரூ.31,000 அதிகரிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ட்ரையம்ப் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.15 லட்சங்களாக அதிகரித்துள்ளது. இதுதான் தற்போதைக்கு மலிவான ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கின் இந்திய விலை ஆகும்.

ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் பைக்கின் போட்டி மாடலான கவாஸாகி இசட்900 உடன் ஒப்பிடுகையில் இந்த புதிய விலை கிட்டத்தட்ட ரூ.81,000 அதிகமாகும். ஆனால் அதேநேரம் பிஎம்டபிள்யூ எஃப்900 ஆர் பைக் உடன் ஒப்பிடுகையில் இந்த விலை இன்னமும் சற்று குறைவு தான்.

ஏனெனில் இந்த பிஎம்டபிள்யூ பைக்கின் விலை ரூ.10.81 லட்சங்களாக உள்ளது. ராக்கெட் பைக்குகளை பொறுத்தவரையில், இந்த பிரிவில் தான் அதிகப்படியான விலை உயர்வுகளை ட்ரையம்ப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

ராக்கெட் 3 ஆர் பைக்கின் புதிய விலை ரூ.19.35 லட்சங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த பைக்கின் முந்தைய விலையை காட்டிலும் ரூ.85,000 அதிகமாகும். தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ற ராக்கெட் 3 ஜிடி பைக்கின் விலை அதிரடியாக ரூ.1.05 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இதன் விலை ரூ.19.95 லட்சங்களாக உயர்ந்துள்ளது. ட்ரையம்ப்பின் இந்த ராக்கெட் மாடல்கள் இரண்டும் ப்ளாக் வெர்சனிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த ஸ்பெஷல் எடிசன்களை தயாரிப்பு நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

இவற்றில் ராக்கெட் 3ஆர் ப்ளாக் பைக்கின் விலை ரூ.20.35 லட்சங்களாகவும், ராக்கெட் 3 ஜிடி ப்ளாக் பைக்கின் விலை ரூ.20.95 லட்சங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் ப்ளாக் எடிசன் பைக்குகள் இந்தியாவில் 1000 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








