விலை குறைந்த டிரையம்ப் பைக்... ட்ரைடெண்ட் 660 இந்தியாவில் விற்பனைக்கு வரும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...
டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 (Triumph Trident 660) மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் வரும் ஏப்ரல் 6ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிரையம்ப் நிறுவனம் தனது சமூக வலை தள பக்கங்களில் இந்த தகவலை தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. எனவே டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 பைக்கிற்காக காத்திருப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

டிரையம்ப் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் எண்ட்ரி-லெவல் ஸ்ட்ரீட் நேக்கட் பைக்தான் ட்ரைடெண்ட் 660. இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள டிரையம்ப் நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த நேக்கட் மோட்டார்சைக்கிளாக ட்ரைடெண்ட் 660 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிகேடி வழியில் இந்த மோட்டார்சைக்கிளை டிரையம்ப் இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது.

ஆனால் ட்ரைடெண்ட் 660 பைக்கின் விலையை டிரையம்ப் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும் இங்கிலாந்தில் இந்த பைக் 7,195 பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால், இந்திய சந்தையில் ட்ரைடெண்ட் 660 பைக்கின் விலையை டிரையம்ப் நிறுவனம் 7 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தைகளில், கவாஸாகி இஸட்650, யமஹா எம்டி-07 மற்றும் ஹோண்டா சிபி650 ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில், டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பைக்குகளில், கவாஸாகி இஸட்650 மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலை 6.04 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 பைக்கில், 660 சிசி, இன்லைன்-மூன்று-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 81 ஹெச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரோடு மற்றும் ரெயின் என இரண்டு ரைடிங் மோடுகளையும் இந்த பைக் பெற்றுள்ளது.

மேலும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ட்ராக்ஸன் கண்ட்ரோல், ரைடு-பை-வயர் ஆகிய வசதிகளும் டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் எடை 189 கிலோ மட்டுமே. அதேசமயம் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள் மிச்செலின் ரோடு 5 டயர்களுடன் விற்பனைக்கு வரும் என்பதை டிரையம்ப் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 பைக் 16 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற சிறப்பான சர்வீஸ் இன்டர்வெல்லை பெற்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. டிரையம்ப் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் ட்ரைடெண்ட் 660 பைக்கின் டீசர் வீடியோவை வெளியிட்டிருந்தது. தற்போது இந்தியாவில் இந்த பைக் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதியை டிரையம்ப் அறிவித்துள்ளது.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிரையம்ப் நிறுவனம் டிஸ்க் பிரேக்குகளை வழங்கியுள்ளது. அத்துடன் 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க்கையும் டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது இந்த புதிய மோட்டார்சைக்கிள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








