அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் விலையை உயர்த்தியது டிவிஎஸ்... தெரிஞ்சிருந்த போன மாசமே வாங்கியிருக்கலாமே!!
டிவிஎஸ் நிறுவனம் அதன் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் விலையை அதிரடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன தயாரிப்புகளில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கும் ஒன்று. இந்த பைக்கின் விலையையே நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் இப்பைக்கின் விலையை நிறுவனம் உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

அப்போது, ரூ. 45 வரை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது மீண்டும் இப்பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்பைப் போன்றில்லாமல் இந்த முறை சற்று பெரிய தொகை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 1,250 வரை விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, ட்ரம் மற்றும் டிஸ்க் ஆகும். இரண்டின் விலையிலுமே ரூ. 1,250 அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால், தற்போது ட்ரம் பிரேக் வேரியண்ட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் விலை ரூ 1,08,565-மாக உயர்ந்துள்ளது. இதேபோன்று, டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலை ரூ. 1,11,615-ஆக உயர்ந்துள்ளது. இனி இந்த புதிய விலையிலேயே டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

விலையுயர்வு எந்த காரணமும் கூறப்படவில்லை. அதேசமயம், எந்த அப்கிரேட்டும் இப்பைக்கில் வழங்கப்படவில்லை. ஆகையால், அதே பழைய ஸ்டைல் மற்றும் எஞ்ஜினிலேயே அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் காட்சியளிக்கின்றது.

160சிசி திறன் கொண்ட பிஎஸ்-6 எஞ்ஜினே இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 17.4 பிஎச்பி மற்றும் 14.73 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இப்பைக்கின் ஒட்டுமொத்த எடை 145 கிலோ ஆகும். இது, முந்தைய மாடலைக் காட்டிலும் இரண்டு கிலோ எடை குறைவு என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய விலையுயர்வால் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் சற்று காஸ்ட்லியான பைக்காக மாறியுள்ளது. இந்த பைக் இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த 2021 மார்ச் மாத விற்பனை நிலவரப்படி டிவிஎஸ் நிறுவனம் 2020 மார்ச் மாதத்தை விட 123 சதவீத அதிக விற்பனையைப் பெற்றது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் கணிசமான விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டிவிஎஸ் அதன் புகழ் பெற்ற அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் விலையை உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








