வெளியில இருக்கும்போதுதான் பத்திக்குதுன பாத்தா கண்டெய்னர்ல இருக்கும்போதுமா! தீயிற்கு இரையாகிய 20 இ-ஸ்கூட்டர்கள்
20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீயிற்கு இரையாகிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தொடர்ச்சியாக மின்சார இருசக்கர வாகனங்கள் தீ விபத்தைச் சந்திக்கும் நிகழ்வு நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், மின்சார வாகனங்களின் பாதுகாப்பு தரம் குறித்த விவாதம் மக்கள் மத்தியில் சூடுபிடித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, மின் வாகன விபத்தால் தந்தை-மகள் உயிர் பறிபோன விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் இன்னும் பல தீ விபத்து நிகழ்வுகள் மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையிலேயே டீலர்ஷிப்பிற்காக ஏற்றி வரப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் தீயிற்கு இரையாகிய சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீயிற்கு இரையாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் நாசிக்கில் உள்ள ஜிதேந்திரா இவி நிறுவனத்திற்கு சொந்தமானவை என கூறப்படுகின்றது. கடந்த 9ம் தேதி அன்று கன்டெய்னர் லாரி மூலம் 40 மின்சார ஸ்கூட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றிலேயே 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசமாகியிருக்கின்றது. இரண்டு அடுக்குகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் வாகனங்களில் மேல் அடுக்கில் இருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே தீயிற்கு இரையாகியிருக்கின்றன.

இரு அடுக்குகளுக்கும் இடையில் உலோக தகரம் இருந்த காரணத்தினால் கீழ் அடுக்கில் இருந்த வாகனங்கள் அதிர்டவசமாக தீயில் சிக்காமல் தப்பித்திருக்கின்றன. தொடர்ந்து, தீ விபத்தினால் யாருக்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்ற மகிழ்ச்சியளிக்கும் தகவலும் வெளியாகியிருக்கின்றது.
தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவனம் சார்பிலும் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகையால், மிக விரைவில் தீ விபத்திற்கான காரணங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பு குறித்த விபரம் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்வு மட்டுமின்றி மிக மிக சமீபத்தில் ஒகினவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியது.

ஸ்கூட்டரின் பேட்டரியில் பிடித்த தீ இருசக்கர வாகனத்தை விழுங்க ஆரம்பிப்பதற்கு முன்னரே, சாதூர்யமாக செயல்பட்ட அவ்வாகனத்தின் உரிமையாளர் பேட்டரியை மட்டும் தனியாக கழட்டி வெளியேற்றியினார். இதனால், வாகனம் சேதமடையாமல் காப்பாற்றப்பட்டிருக்கின்றது. திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே இந்த சம்பவம் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

தொடர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தீ விபத்து எதிரொலியாக இந்திய அரசு மின் வாகனங்களில் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்துமாறு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றது. இந்த தகவல் வெளியாகிய சில நாட்களிலேயே பிரபல மின்வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி ஃபையர் ப்ரூஃப் பேட்டரியை தன்னுடைய மின்சார வாகனங்களில் விரைவில் பயன்படுத்த இருப்பதாக வாக்குறுதி அளித்தது.

நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மின்சார வாகன பிரியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மின்சார வாகனங்கள் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் அதே வேலையில், விற்பனையில் அவை நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

குறிப்பாக, இரண்டாண்டுகளில் இல்லாத அளவில் 2021-22 நிதியாண்டில் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியை அவை பெற்றிருக்கின்றன. சுமார் 2,31,338 யூனிட் எலெக்ட்ரிக் வாகனங்கள் சென்ற ஆண்டில் விற்பனையாகியிருக்கின்றன. ஆனால், இதற்கு முந்தைய ஆண்டில் வெறும் 41,046 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: 7 முதல் 11 வரையிலான படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்ட ஜிதேந்திரா இவி வாகனங்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








