2022 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு முன்பதிவு துவக்கம்!! ஆரம்ப விலை ரூ.16 லட்சம்
2022 ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கான முன்பதிவுகளை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா (HMSI) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இதுகுறித்தும், இந்த புதிய ஹோண்டா அட்வென்ச்சர் பைக் குறித்தும் முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்போர்ட்ஸ், க்ரூஸர் & ஸ்க்ராம்ப்ளர் உள்ளிட்ட உடலமைப்பை கொண்ட பைக்குகளுக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதுபோல், அட்வென்ச்சர் பைக்குகளை விரும்புவதற்கும் தனி பைக் ஆர்வலர்கள் உள்ளனர். அத்தகையவர்களுக்காகவே இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 2022 ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கான முன்பதிவுகள் HMSI-இன் பிக்விங் டீலர்ஷிப் மையங்களில் துவங்கப்பட்டுள்ளன.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இது சிகேடி முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதாவது வெளிநாட்டில் இருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள HMSI-இன் தொழிற்சாலையில் முழு பைக்காக உருவாக்கப்பட்டு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது. ஆனால் பொதுவாக இவ்வாறான விலைமிக்க பைக்குகள் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு நேரடியாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படுவதே வழக்கம்.

இருப்பினும் இம்முறை இறக்குமதி வரிகளை குறைப்பதற்காக HMSI இவ்வாறான நடவடிக்கையில் இறங்கியுள்ளது என நினைக்கிறோம். ஹோண்டாவின் இந்த புதிய பிரீமியம் தர அட்வென்ச்சர் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.16,01,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் இந்த பைக்கின் மேனுவல் வெர்சன் கிடைக்கும். இந்த வேரியண்ட்டினை பேர்ல் க்ளார் வெள்ளை ட்ரைகலரில் பெறலாம்.

அதுவே இந்த பைக்கின் இரட்டை க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17,55,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு மேட் பாலிஸ்டிக் ப்ளாக் மெட்டாலிக் நிறத்தேர்வாக வழங்கப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் ரக பைக் என்பதால், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மட்டுமின்றி, தொலைத்தூர பயணங்களுக்கும் 2022 ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கினை கொண்டு செல்லலாம்.

இந்த பைக்கில் 1082.96சிசி லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக், 8-வால்வு இணையான இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட் (OHC) வகையை சார்ந்த வால்வு அமைப்புடன் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 73 கிலோவாட்ஸ் மற்றும் 6000 ஆர்பிஎம்-இல் 103 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜின் அமைப்பில் 270-கோணத்தில் பொருத்தப்பட்டுள்ள க்ராங்க்ஷாஃப்ட் சிறந்த இழுவையையும், உடனடி முடுக்கத்தையும் வழங்கக்கூடியது.

தொழிற்நுட்ப அம்சங்களாக புதிய ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கில் 6-அச்சு ஐஎம்யு, 2-சேனல் ஏபிஎஸ், ஹோண்டா தேர்ந்தெடுக்கக்கூடிய டார்க் கண்ட்ரோல் மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த பைக்கின் மேனுவல் & ஆட்டோமேட்டிக் என இரு வேரியண்ட்களிலும் டூர், அர்பன், கிராவல் மற்றும் ஆஃப்-ரோடு என 4 விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் உரிமையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து கொள்ள இரு ரைடிங் மோட் அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பயணத்தின் போது தேவையான விபரங்களை காட்ட தெளிவான பார்வை கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது அட்வென்ச்சர் பைக் ஆர்வலர்களிடம் இருந்து கிடைக்க பெற்ற கருத்துகளுக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக HMSI சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரையானது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ என இரு விதமான சாதனங்களையும் ஏற்கக்கூடியதாக கொண்டுவரப்பட்டுள்ளது. என்ஜினை தாங்கி பிடித்து கொள்ள செமி இரட்டை தொட்டில் இரும்பு சட்டகத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், ப்ரோ-லிங்க் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

2022 ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் மற்ற அம்சங்களாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கை, ராலி ஸ்டைலில் பாசிட்டிவ் எல்சிடி வண்ண திரை, டிஆர்எல்கள் & கார்னரிங் விளக்குகளுடன் இரட்டை எல்இடி ஹெட்லைட்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இந்த அட்வென்ச்சர் பைக்கின் பெட்ரோல் டேங்க் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ப 24.5 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது.

2022 ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அட்சுஷி ஒகாடா கருத்து தெரிவிக்கையில், "ஆப்பிரிக்கா ட்வின் ட்ரைப் அதன் டக்கார் ரேலி டிஎன்ஏ உடன் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இப்போது 2022 ஆப்பிரிக்கா ட்வின் உடன் அட்வென்ச்சர் பைக் கலாச்சாரம் மேலும் வளரும்" என்றார்.


Click it and Unblock the Notifications








