இந்த ரேட்டுக்கு சொகுசு காரே வாங்கலாம்... ஹோண்டா களமிறக்கிய புதிய பைக்கின் விலை தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க!
2022 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022 ஹோண்டா கோல்டு விங் டூர் (2022 Honda Gold Wing Tour) மோட்டார்சைக்கிளை, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதற்கு மாறாக, சிபியூ வழியில் நமது சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.

அதாவது முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் 2022 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள்கள்தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் காரணமாக 2022 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிளின் விலை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலையே 39.20 லட்ச ரூபாய் ஆகும். ஆன்ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். 2022 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. இவ்வளவு விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் என்றாலும் கூட, ஒரே ஒரு வண்ண தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. அது கன்மெட்டல் ப்ளாக் மெட்டாலிக் ஆகும்.

2022 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிளில், 1833 சிசி, லிக்யூட்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 126 ஹெச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷன் பணிகளை, 7 ஸ்பீடு டிசிடி கவனித்து கொள்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ரிவர்ஸ் கியர் வசதியும் இருக்கிறது.

அதே நேரத்தில் டூர், ஸ்போர்ட், எகானமி மற்றும் ரெயின் என இந்த மோட்டார்சைக்கிளில் மொத்தம் 4 ரைடிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. 2022 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் விலை உயர்ந்தது மட்டுமல்ல. அதிக எடை கொண்டதும் கூட. இந்த மோட்டார்சைக்கிளின் எடை 390 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலை கொண்டதாக இருந்தாலும், இந்த மோட்டார்சைக்கிளில் நிறைய பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ஏர்பேக் வசதி கூட வழங்கப்படுகிறது என்பது கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயமாகும். அத்துடன் ஹில்-ஸ்டார்ட் அஸிஸ்ட், ஸ்மார்ட் கீ, க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் இந்த மோட்டார்சைக்கிளில் முழு எல்இடி லைட்டிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆன் போர்டு ஆடியோ மற்றும் நேவிகேஷன் வசதியும் இந்த மோட்டார்சைக்கிளில் இடம்பெற்றுள்ள வசதிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதுதவிர 7 இன்ச் முழு கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் ஆகிய வசதிகளையும் 2022 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

2022 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெலிவரி பணிகள் எப்போது தொடங்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த புதிய மோட்டார்சைக்கிளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை அடுத்த ஒரு சில வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிளின் எரிபொருள் டேங்க் 21 லிட்டர்கள் கொள்ளளவு கொண்டது. ஹோண்டா நிறுவனம் இவ்வளவு அதிகமான விலை கொண்ட மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கும் செய்தியை போல், சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்காக ஒருவர் 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவு செய்திருக்கும் தகவலும் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

சண்டிகரை சேர்ந்த அந்த நபர் ஃபேன்ஸி நம்பருக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டுள்ளார். பொதுவாக விலை உயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகளுக்குதான் அதிக பணத்தை செலவிட்டு, ஃபேன்ஸி நம்பர் வாங்குவார்கள். ஆனால் இந்த நபர் சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்காக, 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவு செய்து, அனைவரது கவனத்தையும் கவர்ந்து விட்டார்.


Click it and Unblock the Notifications








