2022 ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன்& விட்பிளேன் 401 & 125 பைக்குகள் வெளியீடு- இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கா?
புத்தம் புதிய ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 மோட்டார்சைக்கிள்கள், அப்டேட் செய்யப்பட்ட புதிய ஸ்வார்ட்பிளேன் 125 பைக்குடன் சர்வதேச சந்தைகளில் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ஹஸ்க்வர்னா பைக்குகளை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் பிராண்டை போல், ஸ்வீடனை சேர்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹஸ்க்வர்னாவும் இந்தியாவில் பஜாஜ் ஆட்டோவின் தொழிற்சாலையில் தனது மோட்டார்சைக்கிள்களை தயாரித்து வருகிறது. இந்திய சந்தையில் முதல் ஹஸ்க்வர்னா பைக்குகளாக ஸ்வார்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து உலகளவில் பிரபலமான 401சிசி மற்றும் 200சிசி ஹஸ்க்வர்னா பைக்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தற்போது வரையில் நடந்த பாடில்லை. இந்த நிலையில் தற்போது அப்டேட் செய்யப்பட்ட ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 125 & 401 மற்றும் விட்பிளேன் 401 பைக்குகள் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

பஜாஜின் புனே சாகான் தொழிற்சாலையிலும் உருவாக்கப்பட உள்ள இந்த மூன்று புதிய ஹஸ்க்வர்னா பைக்குகளும் புதிய உடல் கிராஃபிக்ஸை இந்த புதிய அவதாரத்தில் பெற்றுள்ளன. ஹஸ்க்வர்னா பைக்குகளில் கேடிஎம் பைக்குகளின் உட்புற பாகங்களும், இயங்கும் கியரும் ஆரம்பத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருகிறது. அது தற்போது இந்த புதிய மாடல்களிலும் தொடரப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு ஸ்வார்ட்பிளேன் 125 பைக் ஆனது கேடிஎம்-இன் ஆர்சி125 மற்றும் ட்யூக் 125 பைக்குகளின் பாகங்களை பெறுகிறது. இதில் 125சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜினும் அடங்குகிறது. அதிகப்பட்சமாக 14.3 பிஎச்பி மற்றும் 12 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இவ்வளவு ஏன், சஸ்பென்ஷன் & பிரேக்கிங் பாகங்கள் கூட கேடிஎம்-இன் 125சிசி பைக்குகளில் இருந்தே ஸ்வார்ட்பிளேன் 125 -இல் வழங்கப்படுகிறது. இதன்படி, ட்ரெல்லிஸ் சட்டகத்தில் உருவாக்கப்படும் இந்த 125சிசி பைக்குகளில் சஸ்பென்ஷனுக்கு தலைக்கீழான ஃபோர்க்குகள் மற்றும் மோனோ-ஷாக் பொருத்தப்படுகிறது. பிரேக்கிங் பணியை டிஸ்க் ப்ரேக்குகள் கவனிக்கின்றன.

இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. ஆனால் ஸ்டைலிங்கை பொறுத்தவரையில், ஹஸ்க்வர்னா பைக்குகளும், கேடிஎம் பைக்குகளும் பெரிய அளவில் வித்தியாசப்படுகின்றன. கேடிஎம் பைக்குகளை காட்டிலும் ஹஸ்க்வர்னா பைக்குகள் அளவில் சிறியதாக, நறுக்கப்பட்ட வடிவில் வழங்கப்படுகிறது.

ஹஸ்க்வர்னா மாடல்களான ஸ்வார்ட்பிளேன் மற்றும் விட்பிளேனும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன. ஆனால் ஸ்வார்ட்பிளேன் மோட்டார்சைக்கிள் ஆனது சற்று உயரமான க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் மற்றும் சற்று முன்னோக்கி பொருத்தப்பட்ட ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி உள்ளிட்டவற்றுடன் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றதாகவும், விட்பிளேன் ஆனது சற்று தாழ்வான ஹேண்டில்பார் உடன் நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் வடிவமைக்கப்படுகின்றன.

மேலும், ஹஸ்க்வர்னா விட்பிளேன் பைக்குகளில் சிட்டி ரைடிங்கிற்கு ஏற்ப ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி சரியாக மோட்டார்சைக்கிளுக்கு மத்தியில் வழங்கப்படுகிறது. இதனால் ஸ்வார்ட்பிளேன் பைக்குகளை காட்டிலும் விட்பிளேன் பைக்குகளில் ஆக்ரோஷமான பயணத்தை எதிர்பார்க்கலாம். அதுவே ஸ்வார்ட்பிளேன் பைக்குகளில் லாங் ரைடிங்கிற்கு ஏற்ப சவுகரியமான பயண நிலைப்பாடு கிடைக்கிறது.

இதற்கேற்ப ஸ்வார்ட்பிளேன் பைக்குகளில் சற்று மென்மையான டயர்கள் பொருத்தப்படுகின்றன. இவை இரண்டில் குறைந்தப்பட்சமாக 125சிசி-யில் இருந்து அதிகப்பட்சமாக 701சிசி வரையிலான மாடல்கள் சர்வதேச சந்தைகளில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. என்ஜினின் சிசி அதிகமாக, அதிகமாக பைக்கின் தோற்றமும் பெரியதாகும் என்பதை நான் கூற வேண்டி இருக்காது என்றே நினைக்கிறேன்.

புதிய ஸ்வார்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 பைக்குகளில் 373சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 43 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கூடுதல் ஆற்றல்மிக்க பைக்குகளில் சஸ்பென்ஷனுக்கு தலைக்கீழான ஃபோர்க்குகள் மற்றும் WP அபெக்ஸின் மோனோ-ஷாக் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் பணியை கவனிக்க இவற்றில் காலிபர்கள் உடன் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் பாதுகாப்பிற்கு இந்த ஹஸ்க்வர்னா 401 பைக்குகளில் இரட்டை-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த பைக்குகளில் சிறப்பம்சங்களாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் ரைடு-பை-வயர் த்ரோட்டல் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








