டீலர்ஷிப் ஷோரூம்களில் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்குகள்!! பிரத்யேக படங்கள் வெளியீடு!
விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுதொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை பற்றியும், புதிய கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம் -இல் இருந்து சமீபத்தில் தான் 2022ஆம் ஆண்டிற்கான அப்டேட்டை பெற்ற 250 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கேடிஎம் நிறுவனம் புதிய 390 அட்வென்ச்சர் மாடலையும் நம் நாட்டில் களமிறக்க உள்ளது.

இதனை தற்போது டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ள புதிய 390 அட்வென்ச்சர் பைக்குகளின் படங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. மேலும், இந்த படங்களின் மூலமாக அமெரிக்க சந்தைகளில் விற்பனையில் இருக்கும் அதே 390 அட்வென்ச்சர் பைக்குகளை தான் இந்தியாவிற்கும் கேடிஎம் நிறுவனம் கொண்டுவரவுள்ளதையும் உறுதிப்படுத்த முடிகிறது.

Image Courtesy: KTM Khamla Square and Hitesh Ghogalia
இது 2022 390 அட்வென்ச்சர் பைக்குகளின் முதல் தொகுப்பு தான். இந்த பைக்குகள் அனைத்தும் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவில் உருவாக்கப்படும் 390 அட்வென்ச்சர் பைக்குகள் தான் அமெரிக்க சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறதா என்கிற சந்தேகம் எழுகிறது.

2022ஆம் ஆண்டிற்கான அப்டேட்கள் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் தோற்றத்திலும், செயல்படுதிறன்களிலும் வழங்கப்பட்டுள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், டக்கர் போட்டிகளில் வெற்றி பெற்ற கேடிஎம் ஃபேக்ட்ரி ராலி மாதிரிகளுக்கு ஏற்ப புதிய 390 அட்வென்ச்சர் மெருக்கேற்றப்பட்டுள்ளது. மற்றப்படி பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், எந்த மாற்றமும் இல்லை.

அதேபோல் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கே உண்டான முரட்டுத்தனமான தோற்றத்திலும் எந்த மாற்றமும் இல்லை. அப்டேட் செய்யப்பட்ட 390 அட்வென்ச்சர் பைக்கில் க்ரே-கருப்பு மற்றும் நீலம் என்கிற இரு விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இவை இரண்டிலும் ஆரஞ்ச் நிற தொடுதல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய 390 அட்வென்ச்சருக்கு கொடுக்கப்பட்டுள்ள கிராஃபிக்ஸ் ஆனது இதனை காட்டிலும் அளவில் பெரிய கேடிஎம் மாடல்களில் வழங்கப்படுவதற்கு இணையானதாக உள்ளது. உதாரணத்திற்கு 890 அட்வென்ச்சர். புதிய 390 அட்வென்ச்சரின் பெட்ரோல் டேங்க்கை சுற்றிலும் வழங்கப்படும் கூடுதல் பேனல்கள் அனைத்தும் புதியவைகளாக காட்சி தருகின்றன.

அதேபோல் பின்பக்கத்திலும் இருக்கையை காட்டிலும் பக்கவாட்டு பேனல்கள் அகலமானதாக உள்ளன. இவற்றினால் ரைடருக்கும், பின் இருக்கை பயணிக்கும் கூடுதல் பிடிமானம் கிடைக்கும் என நம்புகிறோம். புதிய 390 அட்வென்ச்சரின் முன்பக்கம் அளவில் சற்று சிறியதாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பைக்கின் முன்பக்கத்தின் எடை வெகுவாக குறைந்திருக்கும்.

பெட்ரோல் டேங்க் ரைடருக்கு கூடுதல் சவுகரியம் மற்றும் கண்ட்ரோலை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாறுதல்கள் கொண்டுவரப்பட்டு இருப்பினும், கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு உண்டான பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பு மற்றும் விஸர் உள்ளிட்ட அடையாளங்கள் புதிய 390 அட்வென்ச்சரிலும் தொடரப்பட்டுள்ளன.

அதேபோல் இந்த கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கின் தொழிற்நுட்ப அம்சங்களிலும் பெரியதாக அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளது போல் தெரியவில்லை. முழு-எல்இடி விளக்குகள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, ஸ்மார்ட்போன் இணைப்பு உடன் முழு வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை, கூடுதல் தேர்வாக ஒவ்வொரு திருப்பலுக்குமான நாவிகேஷன் மற்றும் நிலையான 12 வோல்ட் சார்ஜிங் துளை உள்ளிட்டவை 390 அட்வென்ச்சரில் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்களாகும்.

இயக்க ஆற்றலை வழங்க இந்த அட்வென்ச்சர் பைக்கில் பொருத்தப்படும் 373.2சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 42.3 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் இரு-திசை விரைவு கியர்மாற்றி உடன் செயல்படக்கூடிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய 390 அட்வென்ச்சர் பைக்கில் புதிய இலகுவான அலுமினிய அலாய் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளன.

இது 6-ஸ்போக்குகளுக்கு மாற்றாக 5-ஸ்போக்குகளை பெற்றுவர உள்ளது. அத்துடன் நகர்புற சாலை மற்றும் ஆஃப்-ரோடு சாலை என இரு விதமான பயன்பாட்டிற்கும் சேர்த்து டிராக்ஷன் கண்ட்ரோல் அமைப்புகளை கேடிஎம் வழங்க உள்ளது. தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடைய துவங்கியுள்ளதால், புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கான டெலிவிரிகளை விரைவில் எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








