சூப்பர்... இளசுகள் காத்து கிடந்த பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது யமஹா... விலை எவ்ளோனு தெரியுமா?
2022 யமஹா எம்டி-15 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேம்படுத்தப்பட்ட புதிய 2022 யமஹா எம்டி-15 (2022 Yamaha MT-15 V2.0) பைக் ஒரு வழியாக இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யமஹா எம்டி-15 வெர்ஷன் 2.0 பைக்கிற்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இந்த சூழலில், தற்போது இந்த புதிய மாடல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2022 யமஹா எம்டி-15 வெர்ஷன் 2.0 பைக்கின் விலை 1,59,900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். பழைய மாடலின் 'ஷார்ப்' ஆன 'ஃஸ்ட்ரீட்-ஃபைட்டர்' டிசைனை புதிய மாடல் அப்படியே தக்க வைத்துள்ளது. டிசைனை பொறுத்தவரையில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.

2022 யமஹா எம்டி-15 வெர்ஷன் 2.0 பைக்கின் முன் பகுதியில், தங்க திறத்தில் 37 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பாக்ஸ்-செக்ஸன் ஸ்விங்ஆர்முக்கு (Box-section Swingarm) பதிலாக, புது அலுமினியம் ஸ்விங்ஆர்ம் (Aluminium Swingarm) வழங்கப்பட்டுள்ளது. இது மோட்டோஜிபி-யை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாகும்.

ஆனால் டெல்டாபாக்ஸ் ஃப்ரேம் (Deltabox Frame), யமஹா நிறுவனத்தால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. சேஸிஸில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, புதிய மாடலின் ஸ்திரத்தன்மை மற்றும் கையாளுமை ஆகியவை மேம்பட்டுள்ளது. அதேபோல் 2022 மாடலின் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், புதிய முழு டிஜிட்டல் எல்சிடி யூனிட் ஆகும்.

ஒவ்வொரு முறை இக்னீஷனை 'ஆன்' செய்யும்போது 'வெல்கம் மெசேஜ்' ஒன்றை இது காண்பிக்கும். இந்த 2022 மாடலில், 155 சிசி, லிக்யூட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.4 பிஎஸ் பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷன் பணிகளை பொறுத்தவரை, 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கவனித்து கொள்கிறது.

அத்துடன் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் 282 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது.

அதே நேரத்தில் 2 புதிய வண்ண தேர்வுகளை, இந்த 2022 மாடல் பெற்றுள்ளது. அவை சியான் ஸ்ட்ரோம் (Cyan Storm) மற்றும் ரேஸிங் ப்ளூ (Racing Blue) ஆகியவை ஆகும். இதுதவிர ஐஸ் ஃப்ளூ-வெர்மிலன் (Ice Fluo-Vermillion) மற்றும் மெட்டாலிக் ப்ளாக் (Metallic Black) ஆகிய வண்ண தேர்வுகள், இந்த பைக்குடன் தொடர்ந்து வழங்கப்படும்.

ஆனால் இந்திய சந்தையில் யமஹா எம்டி-15 வெர்ஷன் 2.0 பைக்கிற்கு நேரடி போட்டி என எந்த பைக்குமே இல்லை. இருப்பினும் கேடிஎம் 125 ட்யூக் (KTM 125 Duke), டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (TVS Apache RTR160 4V) ஆகிய பைக்குள், யமஹா எம்டி-15 வெர்ஷன் 2.0 பைக்கிற்கு நெருக்கமான போட்டியாளர்களாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் யமஹா எம்டி-15 பைக் ஏற்கனவே மிகவும் பிரபலமான மாடலாக இருக்கிறது. இந்த பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல், இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த புதிய மாடல் எப்போது விற்பனைக்கு வரும்? என பலரும் ஆவலாக காத்து கொண்டிருந்தனர்.

இந்த சூழலில்தான் யமஹா எம்டி-15 பைக்கின் புதிய வெர்ஷன் அதிகாரப்பூர்வமாக தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய வெர்ஷன் காரணமாக எம்டி-15 பைக்கின் விற்பனை இந்தியாவில் அதிகரிக்கும் என யமஹா நிறுவனம் எதிர்பார்க்கிறது. யமஹா நிறுவனத்தின் இந்த எதிர்பார்ப்பிற்கான பதில், வரும் மாதங்களில் விற்பனை எண்ணிக்கை மூலமாக நமக்கு தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications








