350சிசி-யில் தொடர்ந்து முத்திரை பதிக்கும் கிளாசிக் 350!! ஒரே மாதத்தில் 30 ஆயிரம் யூனிட்கள் விற்பனை
இந்தியாவில் ஒரு காலத்தில் 100சிசி மோட்டார்சைக்கிள்களே அதிகளவில் விரும்பி வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்சமயம் குறைந்தப்பட்ச மோட்டார்சைக்கிள் சிசி-ஆகவே 110சிசி தான் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் 125சிசி-யில் பைக்கை வாங்கவே இப்போதெல்லாம் விரும்புகின்றனர்.

அதேநேரம் இளம் வாடிக்கையாளர்களின் விருப்பம் 200சிசி-யில் இருந்து 350சிசி-க்கு மாறி வருகிறது. இதனை வெளிக்காட்டும் விதத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 350சிசி பைக்குகளை பற்றிய விபரங்கள், அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டின் ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்களாக 350சிசி பைக்குகளே உள்ளன. இதனாலேயே தற்போதைக்கு இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவரும் 5 350சிசி பைக்குகளில் 4 மாடல்கள் ராயல் என்பீல்டுடையதாக உள்ளது. இந்திய சந்தையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 49,788 350சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 48,452 350சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.76% அதிகம் என்றாலும், சுமார் 65,438 350சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த 2021 பிப்ரவரியை காட்டிலும் 23.92% குறைவாகும். இந்தியாவில் 350சிசி பைக்குகள் பிரிவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிளாக கடந்த பல வருடங்களாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 விளங்குகிறது.

கடந்த 2021இல் புதிய தலைமுறை அப்கிரேடை பெற்றிருந்த கிளாசிக் 350 கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 30,082 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய ஜனவரி மாதத்தை காட்டிலும் 12.35% அதிகம் ஆகும். ஏனெனில் இந்த வருடத்தின் முதல் மாதத்தில் 26,775 கிளாசிக் 350 பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் உண்மையில் இந்த பிப்ரவரி மாதத்தை காட்டிலும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 16.50% அதிக கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

2021 பிப்ரவரியில் கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 36,025 ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட 350சிசி பைக்குகளில் கிளாசிக் 350 மாடலின் பங்கு மட்டுமே 60.42% ஆகும். கிளாசிக் 350-க்கு அடுத்து அதிகளவில் விற்பனையாகக்கூடிய 350சிசி பைக்காக தற்போதைக்கு மீட்டியோர் 350 விளங்குகிறது. ராயல் என்பீல்டின் சமீபத்திய அறிமுக மாடல்களுள் ஒன்றான இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 6,749 ஆகும்.

ஆனால் 2022 ஜனவரி, 2021 பிப்ரவரியில் மீட்டியோர் 350-இன் விற்பனை எண்ணிக்கை முறையே 8,460 மற்றும் 8,624 ஆக பதிவாகி இருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது இந்த 350சிசி பைக்கின் விற்பனை மாதம்-மாதம் ஒப்பிடுகையிலும், வருடம்-வருடம் ஒப்பிடுகையிலும் முறையே 20.22% மற்றும் 21.74% குறைந்துள்ளது. மீட்டியோர் 350-ஐ நெருக்கமாக பின்தொடர்ந்தவாறு புல்லட் 350 3வது இடத்தில் உள்ளது.

நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 6,432 ஆகும். ஆனால் 2021 பிப்ரவரியில் இதனை காட்டிலும் 41.76% அதிகமாக 11,044 புல்லட் 350 பைக்குகளும், கடந்த ஜனவரியில் 12.54% அதிகமாக 7,354 புல்லட் 350 பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ராயல் என்பீல்டின் மற்றொரு 350சிசி பைக்கான எலக்ட்ரா 350 3,426 யூனிட்களின் விற்பனை உடன் 4வது இடத்தில் உள்ளது.

எலக்ட்ரா மாடலின் விற்பனை கடந்த சில வருடங்களாகவே சுமாராகவே இருந்து வருகிறது. கடந்த ஜனவரியிலும் 2,651 எலக்ட்ரா 350 பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இதன் விற்பனை ஓரளவிற்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் 2021 பிப்ரவரியில் 6,477 எலக்ட்ரா 350 பைக்குகள் விற்பனையாகி இருந்தன.

ராயல் என்பீல்டிற்கு அடுத்து 350சிசி-யில் பைக்கை விற்பனை செய்யும் மற்றொரு நிறுவனம் என்றால், அது ஹோண்டா ஆகும். ஹோண்டா ஹைனெஸ் சிபி350 கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,099 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2022 ஜனவரியிலும், 2021 பிப்ரவரியிலும் சிபி350-இன் விற்பனை எண்ணிக்கை 3,200-ஐ கடந்திருந்தது. இந்த வகையில் இந்த 350சிசி ஹோண்டா பைக்கின் விற்பனை முறையே 3.52% மற்றும் 5.17% குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








