பற்றி எரியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்... உயிர்களை காவு வாங்குவதால் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் 4 சம்பவங்கள்!
இந்தியாவில் ஒரே வாரத்தில் 4 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரிந்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தற்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் ஆர்வத்தை, இந்த சலுகைகள் தூண்டுகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களின் வகைகளை பொறுத்தவரை, இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அதிகளவில் விற்பனையாகின்றன. எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் மிக அதிகளவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஒரு சில முன்னணி நிறுவனங்களுடன், பல்வேறு சிறிய நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடிக்கும் நிகழ்வு அதிகளவில் அரங்கேறி வருவது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான நம்பகத்தன்மை சீர்குலைந்துள்ளது.

வேலூர் சின்னஅல்லாபுரம் பலராமன் தெருவை சேர்ந்த துரைவர்மா (49) என்பவரும், அவரது மகள் மோகனபிரீத்தி (13) என்பவரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தனர். துரைவர்மா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வைத்திருந்தார். இவர் இரவு நேரங்களில் வீட்டிற்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போடுவது வழக்கம்.

வீட்டிற்கு வெளியே போதிய இடமில்லாத காரணத்தால், வீட்டிற்கு உள்ளே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி சார்ஜ் போடுவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, துரைவர்மாவும், அவரது மகள் மோகனபிரீத்தியும் வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழக்கம் போல் சார்ஜ் போடப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் வீட்டிற்கு உள்ளே வேறு யாரும் இல்லை. இந்த சூழலில் நள்ளிரவு நேரத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியது. தொடர்ந்து அதிக நேரம் சார்ஜ் ஏறியதால், பேட்டரி சூடாகி வெடித்து சிதறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியதால், வீட்டில் இருந்த மின் ஒயர்களும் தீப்பற்றி எரிய தொடங்கின.

துரைவர்மா மற்றும் மோகனபிரீத்தியால் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. நள்ளிரவு நேரம் என்பதால், அவர்கள் எழுப்பிய சத்தம் மற்றவர்களுக்கும் கேட்கவில்லை. புகை மூட்டம் அதிகளவு இருந்த காரணத்தால், துரைவர்மா மற்றும் மோகனபிரீத்தியால் சுவாசிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதிக நேரம் சார்ஜ் போட்டதால், பேட்டரி வெடித்து ஏற்பட்ட புகை மூட்டத்தில், துரைவர்மாவும், மோகனபிரீத்தியும் மூச்சு திணறி உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீது அச்சத்தை ஏற்படுத்தியது. வேலூர் சம்பவத்தில் பேட்டரி வெடித்து சிதறியது, ஒகினவா (Okinawa) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

வெடித்து சிதறியது, ஒகினவா நிறுவனத்தின் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒகினவா நிறுவனத்திற்கு காவல் துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரியும் வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள், தமிழக தலைநகர் சென்னையில் மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது. சென்னையின் மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள மாத்தூர் டோல் பிளாசாவிற்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது.

சென்னையில் தீப்பிடித்து எரிந்தது ப்யூர் இவி (Pure EV) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். சிகப்பு நிற ப்யூர் இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்னையில் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ப்யூர் இவி நிறுவனமும் தெரிவித்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மணப்பாறை பகுதியிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மணப்பாறை சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் 4 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. ஒரே வாரத்தில் 4 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கும் சென்றுள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தது தொடர்பான விசாரணைக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த துறையின் அமைச்சரான நிதின் கட்காரிதான், இந்திய மக்கள் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மாற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த சூழலில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக தீப்பற்றி எரிவதால், அவற்றின் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை குறையுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட் தற்போதுதான் வேகம் எடுத்து வந்தது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் தீ விபத்து சம்பவங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








