இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்கு வரும் 5 பிரீமியம் ரக பைக்குகள்!! ஆர்சி390-இல் இருந்து டைகர் 1200 வரையில்...
இந்திய சந்தையில் இந்த வருடத்தில் ஏகப்பட்ட புதிய மோட்டார்சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் பல புதிய மாடல்கள் விற்பனைக்குவர உள்ளன. இதனால் நடப்பு 2022ஆம் வருடம் பைக் ஆர்வலர்களுக்கு ஏற்ற வருடம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வகையில் இந்திய இளம் தலைமுறையினரை கவரும் வகையில் இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5 பிரீமியம் பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி390
கேடிஎம் பிராண்டில் இருந்து அடுத்ததாக மிக விரைவில் புதிய தலைமுறை ஆர்சி390 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக வெளியாகி இருந்த விபரங்களின்படி பார்க்கும்போது, வழக்கமான 373.27சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினைதான் புதிய ஆர்சி390-யும் பெற்றுவர உள்ளது.

அதிகப்பட்சமாக 43.5 பிஎஸ் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. புதிய ஆர்சி390-இல் சிறப்பம்சமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக முன் & பின்பக்க சஸ்பென்ஷன், டிராக்ஷன் கண்ட்ரோல், இரட்டை-சேனல் கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் ப்ளூடூத் இணைப்புடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350
சந்தையில் அறிமுகப்படுத்துவதற்காக, ராயல் என்பீல்டு நிறுவனம் மோட்டார்சைக்கிள்கள் பலவற்றை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தி வருகிறது. இதில் ஒன்று ஹண்டர் 350 ஆகும். மற்றொரு 350சிசி பைக்காக கொண்டுவரப்படும் ஹண்டர் 350 ஆனது சந்தையில் குறைவான விலையிலான ஆரம்ப-நிலை ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளாக விளங்கவுள்ளது.

மீட்டியோர் 350 மற்றும் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்குகளில் வழங்கப்பட்டுள்ள அதே 349சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினே புதிய ஹண்டர் 350-லும் பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதனுடன் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவிலேயே மலிவான ராயல் என்பீல்டு பைக்காக ஹண்டர் 350 விளங்கும் என கூறப்படுகிறது.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வருகிற மார்ச் 29ஆம் தேதி 2022 டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. புதிய டைகர்660-இல் 660சிசி, லிக்யுடு-கூல்டு, இன்லைன்-3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 81 பிஎஸ் மற்றும் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இதனுடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

தோற்றத்தை பொறுத்தவரையில், டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 ஆனது செமி-ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளாகும். நீளமான எதிர்காற்று தடுப்பு கண்ணாடியை இது கொண்டுள்ளது. முன் இரட்டை ஹெட்லைட்கள் மற்றும் பின் டெயில்லைட் எல்இடி யூனிட்டாக கூர்மையான வடிவில் வழங்கப்பட்டுள்ளன. பல-வண்ணங்களில் வழங்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ப்ளூடூத்தை ஏற்கக்கூடியதாக உள்ளது.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650
ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து தற்போதைக்கு இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 என்ற இரு 650சிசி பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுடன் விரைவில் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை இணைக்கும் முயற்சியில் இந்த சென்னை மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

பெயருக்கேற்ப தற்போதைய மீட்டியோர் 350 பைக்கை அடிப்படையாக கொண்டதாக சூப்பர் மீட்டியோர் மாடல் இருக்கும். இதனால் தற்போதுள்ள 650சிசி ராயல் என்பீல்டு பைக்குகளை காட்டிலும் முற்றிலும் மாறுப்பட்டதாக க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளாக இது இருக்கும். ஆனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே 648சிசி, காற்று/ஆயில்-குளிர்விப்பான், சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் தொடரப்படும்.

டிரையம்ப் டைகர் 1200
பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் பிராண்டான டிரையம்ப் அதன் பிரதான அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஆனால் இது மேலுள்ளவைகளை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக இருக்கும். இதில் 1,160சிசி 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 130 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

முந்தைய மாடலை காட்டிலும் புதிய 2022 டைகர் 1200 அட்வென்ச்சர் பைக் புதிய, இலகுவான சேசிஸை பெற்றுவரவுள்ளது. மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க கண்ணாடி, 7-இன்ச் டிஎஃப்டி வண்ண திரை, ரைடிங் மோட்கள், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவைகளை சொல்லலாம்.


Click it and Unblock the Notifications








