அமோ ஜான்டி ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! பிரஷ்லெஸ் டிசி மோட்டார், ஃபாஸ்ட் சார்ஜ் வசதியுடன் வந்திருக்கு
பிரஷ்லெஸ் டிசி மோட்டார் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளுடன் புதிய அமோ ஜன்டி பிளஸ் (Amo Jaunty Plus) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் அமோ (Amo) நிறுவனத்தின் மின்சார இரு சக்கர வாகனம் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஜான்டி ப்ளஸ் (Jaunty Plus) எனும் பெயரிலேயே அமோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றது.

அறிமுகமாக விலையாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 1,11,460 எனும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். கவர்ச்சியான தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதிக சிறப்பம்சங்கள் என இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சூப்பரான தயாரிப்பாக நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ஜான்டி ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பம் அடங்கிய 60 V/40 திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிக ரேஞ்ஜ் திறனை வெளிப்படுத்தும் வசதிக் கொண்டதாகும். ஒரு முழுமையான சார்ஜில் 120 கிமீ வரை பயணித்துக் கொள்ள முடியும். மேலும், இதனை 100 சதவீதம் சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்களே போதும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, சூப்பர் ஃபாஸ்ட் (அதி-வேக) திறனை வழங்குவதற்காக பிரஷ்லெஸ் டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடைய அதிகபட்ச வேகம் என்ன என்பது பற்றிய தகவலை நிறுவனம்வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது ஓர் அதி-வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக சாலையில் செயல்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

மேலும், ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதைக் கொண்டு சார்ஜ் செய்யும்போது மிக மிக அதிக வேகத்தில் நூறு சதவீதம் சார்ஜை எட்டிவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், துள்ளியமாக எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பது பற்றிய தகவலை இப்போது வெளியிடவில்லை. இதுகுறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

ஜான்டி ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன மாதிரியான சிறப்பு தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவலை அமோ நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இ - ஸ்கூட்டரில் சைடு ஸ்டாண்டு சென்சார், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், செல்போன் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல் ஸ்விட்ச், எலெக்ட்ரானிக் அசிஸ்டட் பிரேக்கிங் சிஸ்டம், ஆண்டி தெஃப்ட் அலாரம் என பன்முக அதி-நவீன தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி, டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன், முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக், டிஆர்எல் லைட்டுகள், எஞ்ஜின் கில் ஸ்விட்ச் போன்ற கவர்ச்சிகரமான அம்சங்களும் ஜான்டி ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஃபிக்ஸ்ட் மற்றும் போர்டபிள் பேட்டரி பேக் தேர்வும் வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அன்றைய நாளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று வருடங்கள் வாரண்டி மற்றும் ஐந்து நிற தேர்வுகளை வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு அமோ நிறுவனம் வழங்க இருக்கின்றது.

சிவப்பு - கருப்பு (Red - Black), சாம்பல் - கருப்பு (Grey - Black), நீலம் - கருப்பு (Blue - Black), வெள்ளை - கருப்பு (White - Black) மற்றும் மஞ்சள் - கருப்பு (Yellow - Black) ஆகிய நிற தேர்வுகளிலே அமோ ஜான்டி ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

அமோ ஜான்டி ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் குறித்து நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுஷாந்த் குமார் கூறியதாவது, "எங்களின் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஜான்டி ப்ளஸ் இ-ஸ்கூட்டரை இந்திய வாகன சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சுற்றுச் சூழலுக்கு நட்பாக விளங்கும் வகையிலும், இவி மின் வாகன உலகில் சிறந்த தயாரிப்பாக விளங்கும் வகையிலும் இது இருக்கும். ஸ்டைலான வடிவமைப்பு, டிஜிட்டல் டிஸ்ப்ளே, அதிக பாதுகாப்பு அம்சங்கள், சூப்பரான வேகம் மற்றும் அதிகபட்ச ரேஞ்ஜ் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது இரு சக்கர வாகன விரும்பிகளை நிச்சயம் கவரும்" என்றார்.


Click it and Unblock the Notifications








