ஏத்தர் ஜென்3 450எக்ஸ் மற்றும் 450பிளஸ் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்! விலை, புதிய மாற்றங்கள் பற்றி அறியலாம் வாங்க!
ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அதன் ஜென்3 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் ஜென்3 450 எக்ஸ் மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. அறிமுகமாக ஜென் 3 450 எக்ஸ் மாடலுக்கு ரூ. 1.39 லட்சமும், ஏத்தர் 450 பிளஸ் மாடலுக்கு ரூ. 1.17 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய விலையைக் காட்டிலும் ரூ. 1000 அதிகம் ஆகும். இந்த அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ஏத்தர் நிறுவனம் இந்த புதிய ஜென் 3 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் மாடல்களில் பெரியளவில் மாற்றங்களை மேற்கொள்ளவில்லை. அதேவேலையில், முன்னதாக பயன்படுத்தப்பட்டு வந்த சிறிய பேட்டரிகளுக்கு பதிலாக தற்போது பெரிய பேட்டரி பேக்குகளை அது பயன்படுத்தியிருக்கின்றது.

இத்துடன், புதிய டயர் மற்றும் ஓஆர்விஎம் ஆகியவற்றையும் புதிய மாற்றங்களின் கீழ் ஏத்தர் எனெர்ஜி புதிய மாடல்களில் வழங்கியிருக்கின்றது. தற்போது, எம்ஆர்எஃப் நிறுவனத்தின் டயர்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பேட்டரி பேக்கில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள்:
பேட்டரி பேக்கின் அளவு மாற்றப்பட்டிருப்பதாக மேலே குறிப்பிட்டிருந்தோம். அது, முன்பைக் காட்டிலும் 25 சதவீதம் பெரியளவு கொண்டதாக தற்போது வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக பேட்டரின் லைஃப் டைம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 3.7kWh பேட்டரி பேக்கே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களில் 2.9 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைக்காட்டிலும் அதிகம் ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக்காக புதிய பேட்டரி பேக் இருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 146 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அளவு பெரியதாக்கப்பட்டிருப்பதால் பேட்டரியின் எடையும் கூடியிருக்கின்றது. பேட்டரியின் எடை மட்டுமே சுமார் 19 கிலோவாக உள்ளது. ரியல் உலகில் நிறுவனம் தெரிவித்ததைவிட சற்று குறைவான ரேஞ்ஜை புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வழங்கும் என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, டிராஃபிக் நிறைந்த சாலையில் ஈகோ மோடில் பயணிப்போம் எனில் 105 கிமீ வரை மட்டுமே அது ரேஞ்ஜை வழங்கும்.

அராய் அமைப்பும் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றது. அது, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரியல் உளகில் 108 முதல் 100 கிமீ தூரம் வரை மட்டுமே ரேஞ்ஜ் தரும் என தெரிவித்துள்ளது. இதேபோல், 450 பிளஸ் மாடல் ரியல் உலகில் 85 கிமீ வரை மட்டுமே ரேஞ்ஜ் தரும் என தெரிவித்துள்ளது.

இதுவே நாம் வாகனத்தை அடித்து விரட்டி ஓட்டினோம் என்றால் இன்னும் பல மடங்கு ரேஞ்ஜ் திறன் குறைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அதேவேலையில், மணிக்கு 20 கிமீ முதல் 40 கிமீட்டருக்கு உள்ளான வேகத்தில் மட்டும் வாகனத்தை இயக்கினோம் என்றால் அதன் ரேஞ்ஜ் திறன் பல மடங்கு அதிகரித்துக் காணப்படும். நிறுவனம் கூறியதைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜ் திறனைக் கூட நம்மால் பெற முடியும் என்பதைக் கடந்த காலங்களில் மின்சார இருசக்கர வாகன பயன்பாட்டாளர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

பேட்டரி பேக்கின் எடை அதிகரித்திருப்பதால் இருசக்கர வாகனங்களின் எடையும் அதிகரித்துள்ளது. முன்பு 108 கிலேவாக இருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை தற்போது 111 கிலோவாக அதிகரித்துள்ளது. ஏத்தர் நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்களின் திறன் வெளிப்பாட்டிலும் மாற்றத்தைச் செய்திருக்கின்றது.

இந்த மாற்றத்தால் 450 எக்ஸ் மாடல் 6.2 கிலோவாட் பவரையும், 450 பிளஸ் மாடல் 5.4 கிலோவாட் திறனையும் வெளியேற்றக் கூடியவை மாறியிருக்கின்றன. ஸ்கூட்டரின் டயர்கள் மாற்றப்பட்டிருப்பதாகவும் மேலே கூறியிருந்தோம். அந்தவகையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்போது முன் பக்கத்தில் 90/90-12 அளவுள்ள டயரும், பின் பக்கத்தில் 100/80-12 அளவுள்ள டயரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இரண்டும் சூப்பரான இயக்க அனுபவத்தை நாட்டின் அனைத்து விதமான சாலைகளிலும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், ஸ்கூட்டரின் அழகை அதிகப்படுத்தும் வகையில் சிங்கிள் காஸ்ட், அலுமினியம் ரக கண்ணாடிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் கவர்ச்சியான லுக்கை ஸ்கூட்டர்களுக்கு வழங்கும் வகையில் உள்ளது.

இதுமட்டுமின்றி, ஸ்கூட்டரில் உள்ள திரையின் ரேம் ஸ்பேஸையும் நிறுவனம் அதிகரித்திருக்கின்றது. முன்பு 1ஜிபி மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 2 ஜிபியாக மாற்றப்பட்டிருக்கின்றது. புதுமுக ஜென் 3 450 எக்ஸ் மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகை ஓலா எஸ்1 ப்ரோ, பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








