பல்சர் என்எஸ்160 பைக்கிற்கு புதிய இரட்டை-நிற பெயிண்ட் தேர்வு!! ஷோரூமில் இருந்து வீடியோ வெளிவந்தது!
பஜாஜ் பல்சர் 160 என்எஸ் வெள்ளை நிற மோட்டார்சைக்கிளுக்கு புதியதாக கருப்பு நிற அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அப்டேட்டினை உறுதிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடையாளம் என்றால், அது பல்சர் பிராண்ட் தான். வேறு சில மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் இருந்தாலும், கடந்த 15 வருடத்திற்கும் மேலாக பஜாஜின் நம்பிக்கைக்குரிய தயாரிப்புகளாக பல்சர் பைக்குகள் விளங்குகின்றன. இதனாலேயே முடிந்தவரையில் பல்சர் பைக்குகள் வரிசையை விரிவுப்படுத்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரும்புகிறது.

அதேநேரம் விற்பனையில் உள்ள பல்சர் பைக்குகளையும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. குறைந்தப்பட்சம் கூடுதல் வசதிகளையாவது அல்லது புதிய பெயிண்ட் தேர்வையாவது வழங்கிவிடுகிறது. இந்த வகையில் பல்சர் என்எஸ்160 வெள்ளை நிற பைக்கிற்கு புதியதாக ட்யூல்-டோன் தேர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பெயிண்ட் தேர்வில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் கலந்ததாக என்எஸ்160 பைக் காட்சியளிக்கிறது. பைக்கின் பெட்ரோல் டேங்க், பிகினி பேனல்கள் வெள்ளை நிறத்தில் உள்ளன. அதேநேரம் பின்பக்க துணை ஃப்ரேம்கள் மற்றும் முன்பக்க ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் பகுதியிலும் வெள்ளை நிறத்தை காண முடிகிறது. இவை தவிர்த்து என்எஸ்160 பைக்கின் மற்ற பாகங்கள் அனைத்தும் கருப்பு நிறத்திலேயே உள்ளன.

என்எஸ்160 பைக்கின் இருக்கை அமைப்பு மற்றும் என்ஜின் அமைப்பு எப்போதுமே கருப்பு நிறத்தில்தான் வழங்கப்படுபவை. ஆனால் இந்த புதிய ட்யூல்-டோன் பெயிண்ட் தேர்வில் பைக்கின் அலாய் சக்கரங்கள் கூட கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. முன்பு பல்சர் என்எஸ்160 வெள்ளை நிற பைக்கிற்கு வெள்ளை நிறத்தில் அலாய் சக்கர ரிம்கள் வழங்கப்பட்டு வந்தன. இது தற்போது கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இது உண்மையில் பல்சர் என்எஸ்160 பைக்கின் ஸ்போர்டியான தோற்றத்தினை மேலும் மெருக்கேற்றி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த புதிய பெயிண்ட் தேர்விலும் இந்த பல்சர் பைக்கின் தோற்றத்தில் ஆங்காங்கே சிவப்பு நிற ஹைலைட்கள் தொடரப்பட்டுள்ளன. குறிப்பாக என்ஜினின் அடிப்பகுதியை பாதுகாக்கும் விதத்தில் வழங்கப்படும் பாதுகாப்பானில் சிவப்பு, வெள்ளை & கருப்பு என 3 நிறங்களும் கொடுக்கப்படுவது இளம் வாடிக்கையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் இந்த சிவப்பு நிறத்தில் தான் என்எஸ்160 பைக்கின் பின்பக்க சஸ்பென்ஷன் யூனிட் பெயிண்ட் செய்யப்படுவது வழக்கம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் என்எஸ்160 பைக்கின் வழக்கமான கிராஃபிக்ஸ் ஸ்டைலிலும் எந்த மாற்றமும் இல்லை. பல்சர் என்எஸ்160 பைக்கின் பெட்ரோல் டேங்கிற்கு கீழே நீட்டிப்பு பேனல்களில் '160' என்கிற கிராஃபிக்ஸ் அளவில் பெரியதாக வழங்கப்படுகிறது.

புதிய பெயிண்ட் தேர்வை தவிர்த்து என்எஸ்160 பைக்கில் வேறெந்த அப்டேட்டும் இல்லை. பல்சர் என்எஸ்160 பைக்கில் 160சிசி சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 15.3 பிஎச்பி மற்றும் 14.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

சஸ்பென்ஷன் பணியை இந்த பைக்கில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், வாயு மூலமாக இயங்கக்கூடிய மோனோஷாக் பின்பக்கத்திலும் கவனித்து கொள்கின்றன. பிரேக்கிற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன. இதனுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-உம் என்எஸ்160 பைக்கில் வழங்கப்படுகிறது.

இவற்றுடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஹலோஜன் ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், சைடு-ஸ்டாண்ட் எச்சரிப்பான் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன் உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்களையும் இந்த பல்சர் பைக் பெறுகிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி, யமஹா எம்டி15 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் உள்ளிட்ட பைக்குகளின் போட்டியினை சமாளித்துவரும் பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்கின் விலை தற்சமயம் ரூ.1.19 லட்சமாக உள்ளது.

வெள்ளை நிற பெயிண்ட் தேர்வு என்எஸ்160 பைக் மட்டுமின்றி, பல்சர் 150 மற்றும் பல்சர் 180 பைக்குகளுக்கும் கடந்த ஆண்டில் டாகர் எட்ஜ் எடிசன் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, சமீபத்திய அறிமுகமான பல்சர் எஃப்250 பைக்கிற்கு புதியதாக நீல நிறத்தேர்வை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








