புதிய அடர் நீல நிறத்தில் பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்!! வேகமா ட்ரெண்ட் ஆக போகுது!
பிரத்யேகமான நீல நிறத்தேர்வில் பஜாஜ் பல்சர் 250 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பல்சர் பைக்குகளின் வரிசையை விரிவுப்படுத்தும் விதமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் என்250 மற்றும் எஃப்250 பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இவற்றிற்கான அறிமுக விலையாக ரூ.1.38 லட்சம் மற்றும் ரூ.1.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.

இவை இரண்டிற்கும் ரேசிங் சிவப்பு மற்றும் டெக்னோ க்ரே என்கிற இரு நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெயிண்ட் தேர்வு ஒரே மாதிரியாக இருந்தாலும், கிராஃபிக்ஸில் என்250 மற்றும் எஃப்250 பைக்குகள் வித்தியாசப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களை மேலும் கவரும் விதமாக பல்சர் எஃப்250 பைக்கிற்கு புதிய நீல நிறத்தேர்வை பஜாஜ் ஆட்டோ வழங்கியுள்ளது.

பல்சர் என்எஸ்200, 220எஃப், பல்சர் 150, என்எஸ்125, பிளாட்டினா 110இஎஸ் மற்றும் சிடி110 என இந்தியாவில் வேறு சில பஜாஜ் பைக்குகளுக்கும் நீல நிறத்தேர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றுடன் ஒப்பிடுகையில், எஃப்250 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள நீல நிறத்தேர்வு வித்தியாசமானது ஆகும். ஏனெனில் இந்த புதிய பெயிண்ட் சற்று அடர் நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இது நிச்சயம் வாடிக்கையாளர்களை, குறிப்பாக இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இத்தகைய நீல நிறத்தில் வேறெந்த பைக்கையும் நீங்கள் சாலையில் பார்க்காமல் கூட இருக்கலாம். அதுமட்டுமின்றி பல்சர் எஃப்250 பைக்கில் இந்த புதிய பெயிண்ட் ஆனது அதிக பகுதிகளை கவர் செய்ததாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் பைக்கின் முன்பக்க கௌல், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பெட்ரோல் டேங்க் மட்டுமின்றி, முன்பக்க மட்கார்ட், என்ஜின் மூடி மற்றும் பின்பக்க இறுதிமுனை பேனல்களும் நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர்கள் எஃப்250 பைக்கின் ஸ்போர்டியான தோற்றத்தை மேலும் மெருக்கேற்றுகின்றன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். பைக்கின் பெரும்பான்மையான பகுதி நீலம் & கருப்பு நிறங்களில் இருக்க, என்ஜின் பகுதியில் மட்டும் ஹைலைட்டாக சில்வர் நிறம் பளிச்சிடுகிறது. இவ்வாறு இந்த புதிய நீல நிற பெயிண்ட் தேர்வில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதால், இந்த பெயிண்ட் வேகமாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மிக விரைவில் இந்த புதிய பெயிண்ட் தேர்வை மற்றொரு 250சிசி பல்சர் பைக்கான என்250 -யிலும் எதிர்பார்க்கிறோம். எஃப்250 என்ற செமி-ஸ்போர்ட்ஸ் பைக்கின் நாக்டு வெர்சன் தான் என்250 ஆகும். தோற்றத்தில் இவை இரண்டும் சற்று வேறுப்பட்டாலும், பெரும்பான்மையான உடல் பேனல்களை இவை பகிர்ந்து கொள்கின்றன. ஆதலால் இந்த புதிய நீல நிற பெயிண்ட் தேர்வு என்250 -க்கும் மிக எடுப்பாக இருக்கும்.

புதிய பெயிண்ட் தேர்வை தவிர்த்து பல்சர் எஃப்250 பைக்கில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. பல்சர் 250 பைக்குகளில் 249.07சிசி, சிங்கிள்-சிலிண்டர், 2-வால்வு, SOHC, ஆயில் கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 24.5 பிஎஸ் மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 21.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ப்ரேக்கிங் பணியை கவனிக்க இவற்றில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் ப்ரேக்குகள் இரு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் நைட்ரக்ஸ் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. இவற்றின் 17-இன்ச் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன.

இவை இரண்டுடன் நிறுத்தி கொள்ளாமல், எதிர்காலத்தில் 500சிசி வரையில் பல்சர் பைக்குகளை கொண்டுவர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், இவற்றில் பொருத்தப்பட உள்ள புதிய 490சிசி இணையான-இரட்டை என்ஜினை கேடிஎம் உடன் இணைந்து பஜாஜ் தயாரித்து வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ட்வின்னர்' என்கிற பெயரை தனது புதிய தயாரிப்பிற்காக பஜாஜ் ஆட்டோ பதிவு செய்து கொண்டுள்ளது. இந்த பெயர் புதிய 500சிசி பல்சர் பைக்குகளுக்கு பயன்படுத்தப்படலாம்.


Click it and Unblock the Notifications








