பெட்ரோல் விலையுடன் டூவீலர்களின் விலையும் உயர்கிறது... வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சிக்கல்!
இந்தியாவில் வாகனங்களின் விலை உயர்வு தொடர்பான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ மோட்டோராட் (BMW Motorrad) நிறுவனம், ஜி 310 ஆர் (G 310 R) மற்றும் ஜி 310 ஜிஎஸ் (G 310 GS) ஆகிய இரண்டு பிரபலமான பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த 2 பைக்குகளின் விலைகளையும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் இந்தியா நிறுவனம் தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளின் விலையும் 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலை தற்போது 2.65 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கின் விலை 3.05 லட்ச ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் இந்த 2 பைக்குகளின் விலைகளையும் அதிரடியாக உயர்த்தியிருந்தது. சுமார் 8 மாத காலத்தில் மீண்டும் ஒரு முறை தனது 2 முன்னணி பைக்குகளின் விலைகளையும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய 2 பைக்குகளிலும் ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. அது 313 சிசி, லிக்யூட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34 ஹெச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு இன்றுடன் (மார்ச் 31) முடிவடையவுள்ளது. அடுத்த நிதியாண்டு நாளை (ஏப்ரல் 1) பிறக்கிறது. இந்த சூழலில் இந்தியாவில் தற்போது வாகனங்களின் விலை அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. விலை உயர்வு தொடர்பான அறிவிப்புகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தை போலவே, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் தனது இரு சக்கர வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களின் விலைகளை 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தவுள்ளது.

வரும் ஏப்ரல் 5ம் தேதி இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல்வேறு இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வடைய தொடங்கியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் இரு சக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் இரு சக்கர வாகன நிறுவனங்கள் மட்டுமல்லாது, கார் நிறுவனங்களும் தற்போது விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இதில், ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார் நிறுவனங்களும், டொயோட்டா நிறுவனமும் இங்கே குறிப்பிடத்தக்கவை. இந்த நிறுவனங்களுடைய கார்களின் விலை வரும் ஏப்ரல் 1ம் தேதி (நாளை) முதல் உயரவுள்ளது. எனவே புதிய நிதியாண்டில் புதிய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்குவதாக இருந்தால், நீங்கள் சற்று கூடுதல் தொகையை செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

விலை உயர்வு காரணமாக, புதிய வாகனங்களை வாங்கும் முடிவை தற்காலிகமாக பலர் தள்ளி போடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், வாகனங்களின் விற்பனை சற்று மந்தமாகதான் இருந்து வருகிறது.

பல்வேறு நிறுவனங்கள் விற்பனையில் வீழ்ச்சியை கண்டு வருகின்றன. இந்த சூழலில்தான் வாகனங்களின் விலைகளையும் உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு பல்வேறு நிறுவனங்களும் தள்ளப்பட்டுள்ளன. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால்தான் வாகனங்களின் விலைகளை உயர்த்த வேண்டியிருப்பதாக பல்வேறு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








