கிட்டத்தட்ட ரூ.28 லட்சத்தில் புதிய பிஎம்டபிள்யூ க்ரூஸர் பைக்குகள்!! முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!
சில விலைமிக்க பிஎம்டபிள்யூ க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் பிரீமியம் தரத்திலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் விளங்குகிறது. குறைந்தப்பட்சமாக ரூ.2.5 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.42 லட்சங்கள் வரையில் விலை கொண்ட இருசக்கர வாகனங்கள் பிஎம்டபிள்யூ பிராண்டில் இருந்து இந்தியாவில் விற்பனையில் உள்ளன.

இதில் பெரும்பான்மையானவை பைக்குகளே ஆகும். ஒரே ஒரு ஸ்கூட்டர்தான், பிஎம்டபிள்யூ சி400 ஜிடி, சமீபத்தில் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிஎம்டபிள்யூ ஆர்1250 ஆர்டி, கே1600 ஜிடிஎல், கே1600 பக்கர் மற்றும் கே1600 கிராண்ட் அமெரிக்கா என்ற விலையுயர்ந்த பைக்குகளுக்கு புக்கிங் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் வருகிற 2022 மே மாதத்தில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. விருப்பப்படும் நபர்கள் இந்த பைக்குகளை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம். இந்த விலையுயர்ந்த பைக்குகளுக்கு எளிமையாக உரிமையாளர் ஆகுவதற்காக தனிப்பயனாக்கப்பட்ட பொருளாதார தீர்வுகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்க துவங்கியுள்ளது.

இந்த தீர்வுகளை பிஎம்டபிள்யூ நிதி சேவைகள் இந்தியா நிறுவனத்தின் மூலம் பெறலாம். தற்போது முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள பைக்குகளில் புதிய ஆர்1250 ஆர்டி ஆனது உலகளாவிய தொலைத்தூர பயணங்களுக்கான மோட்டார்சைக்கிள்களில் சவுகரியத்திலும், பயண நிலைப்பாட்டிலும் புதியதொரு உச்சத்தை தொட்டுள்ளது. இருப்பினும் இதனை காட்டிலும் கே1600 பைக்குகள் கூடுதல் லக்சரியான பயணத்தையும், அதிசெயல்திறனையும் பயணங்களின்போது வழங்கக்கூடியவைகளாக உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ கே1600 ஜிடிஎல், கே1600 பக்கர் மற்றும் கே1600 கிராண்ட் அமெரிக்கா என்கிற மூன்று லக்சரி க்ரூஸர் பைக்குகளும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாக இருந்தாலும், ரைடிங் நிலைப்பாடு மற்றும் பயணிகளுக்கு வழங்கும் சவுகரியம் உள்ளிட்டவற்றில் ஒன்றுக்கொண்டு சற்று வித்தியாசப்படுகின்றன. பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்திற்கு இந்தியாவில் சில குறிப்பிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே பிரீமியம் டீலர் மையங்கள் உள்ளன.

சென்னையில் தேனாம்பேட்டையில் கேயுஎன் மோட்டார்ராட் என்கிற பெயரில் இந்த டீலர் மையங்களுள் ஒன்று செயல்பட்டு வருகிறது. புதிய ஆர்1250 ஆர்டி மற்றும் கே1600 சொகுசு க்ரூஸர் பைக்குகளை வாங்க நினைப்போர் இங்கு சென்று தங்களுக்கான பைக்கை முன்பதிவு செய்யலாம். சென்னையை தவிர்த்து நமக்கு அருகில் உள்ள மற்ற முக்கிய மாநகரங்களான பெங்களூர் (டஸ்கர் மோட்டார்ராட்), கொச்சி (இவிஎம் ஆட்டோக்ராஃப்ட்) மற்றும் ஹைதராபாத் (ஜேஎஸ்பி மோட்டார்ராட்) உள்ளிட்டவற்றிலும் இந்த டீலர்ஷிப் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளில் அப்டேட்கள் என்று பார்த்தால், புத்துணர்ச்சியான நிறத்தேர்வுகள் மட்டுமே புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் பெரிதாக கை வைக்கவில்லை. பிஎம்டபிள்யூ கே1600 பைக்குகளில் 1,649சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 158 பிஎச்பி இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த அதிகப்பட்ச ஆற்றல் முன்பை காட்டிலும் 1000 ஆர்பிஎம்-மிற்கு முன்னதாகவே 6,750 ஆர்பிஎம்-இல் கிடைக்கிறது. அதேபோல் டார்க் திறனையும் சற்று அதிகமாக 179 என்எம் வரையில் என்ஜின் வெளிப்படுத்துகிறது. இவற்றிற்கு காரணம், கே1600 பைக்குகளின் அதே என்ஜின் அமைப்பில் கூடுதலாக இரு க்னாக் சென்சார்கள் மற்றும் 4 லம்ப்டா பிரோப்ஸ் கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கூறியதுதான், புதிய பிஎம்டபிள்யூ கே1600 பைக்குகள் தொழிற்நுட்பங்கள் மிக்கவைகளாக உள்ளன. இதன் மூலமாக இவை அதிசெயல்திறன்களை பெற்றவைகளாக உள்ளன. இந்த பைக்குகளில் நிலையான வசதிகளாக எலக்ட்ரானிக் டிராக்ஷன் கண்ட்ரோல், 3 ரைடிங் மோட்கள் (டைனாமிக், மழை மற்றும் சாலை) மற்றும் செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷனுக்கு இரு அமைப்புகள் (டைனாமிக் & சாலை) உள்ளிட்ட தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் தகவமைத்து கொள்ளக்கூடிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் இரு திரைகளுடன் 10.25-இன்ச் டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றையும் சிறப்பம்சங்களாக இந்த பிஎம்டபிள்யூ க்ரூஸர் பைக்குகள் கொண்டுள்ளன. மற்றப்படி இவற்றின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், ரூ.28 லட்சத்தில் இருந்து இவற்றின் விலைகள் துவங்கலாம்.


Click it and Unblock the Notifications








