கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் அடிப்படையிலான, பிராபஸ் 1300ஆர்!! ஐரோப்பாவில் வெளியீடு!
கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் பைக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பிராபஸ் 1300ஆர் (Barbus 1300R) மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்திறன்மிக்க பைக்கை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜெர்மனியை சேர்ந்த கஸ்டமைஸ்ட் நிறுவனமாக விளங்கும் பிராபஸ் இதற்குமுன் பல வாகனங்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொடுத்துள்ளது. இந்த வகையில் தான் தற்போது கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் எவோ பைக்கை அடிப்படையாக கொண்ட பிராபஸ் 1300ஆர் என்கிற பெயரிலான ஹைப்பர்-நாக்டு மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

2022 பிராபஸ் 1300ஆர் மோட்டார்சைக்கிளை உருவாக்குவதற்காகவே கேடிஎம் நிறுவனமும், இந்த ஜெர்மன் கஸ்டமைஸ்ட் நிறுவனமும் கூட்டணி சேர்ந்துள்ளன. இந்த கூட்டணியின் மூலமாக, கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், தனக்கென்று தனித்துவமான தோற்றத்தினை புதிய பிராபஸ் 1300ஆர் பைக் கொண்டுள்ளது.

இதனால் இந்த இரு பைக்குகளையும் ஒன்றாக நிற்க வைத்து பார்த்தாலும், பெரியதாக எந்தவொரு வித்தியாசத்தை காண முடியாது. குறிப்பாக, பைக்கின் மேல்பகுதி (ஹேண்டில்பார், பெட்ரோல் & இருக்கை அமைப்பு) கேடிஎம் சூப்பர் ட்யூக்கில் இருந்து முற்றிலுமாக வேறுப்பட்டதாக பிராபஸ் 1300ஆர் பைக்கில் காட்சியளிக்கிறது.

முன்பக்கத்தில் இந்த பிராபஸ் சூப்பர் பைக் வட்ட வடிவில் ஹெட்லேம்ப் அமைப்பினை கொண்டுள்ளது. அதுவே சூப்பர் ட்யூக் 1290 பைக்கில் இந்த பகுதி அதிகளவில் கூர்மையான லைன்களுடன் வழங்கப்படுவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் தற்கால மாடர்ன் கேடிஎம் ட்யூக் பைக்குகளில் சுற்றிலும் கூர்மையான லைன்கள் வழங்கப்படுவது வழக்கமானதாக பின்பற்றப்படுகிறது.

புதிய பிராபஸ் 1300ஆர் -இல் பெட்ரோல் டேங்க் பகுதியில் விங்லெட்களுடன் அளவில் பெரிய காற்று ஏற்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய அமைப்பு நமக்கு டுகாட்டியின் டயவெல் பைக்குகளை ஞாபகப்படுத்துகிறது. இந்த கஸ்டமைஸ்ட் பைக்கில் அனைவரையும் அசரடிக்கும் அம்சமாக பெரும்பான்மையான பாகங்கள் கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

மற்றொரு பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி, சிஎன்சி பிரேக் & க்ளட்ச் லிவர்கள் மற்றும் 9-ஸ்போக் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை பிராபஸ் 1300ஆர் பைக்குடன் நன்கு ஒன்றிபோய் உள்ளன. 1290 சூப்பர் ட்யூக்கில் கேடிஎம் வழங்கும் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி கொண்ட 5-இன்ச் முழு-வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பிராபஸ் 1300ஆர் பைக்கிற்கும் தொடரப்பட்டுள்ளது.

அதேபோல் கேடிஎம் நிறுவனத்தின் 1,301சிசி, இரட்டை-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் இந்த கஸ்டமைஸ்ட் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 180 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த டிரான்ஸ்மிஷன் அமைப்பானது இரு-திசை விரைவு கியர்மாற்றி உடன் செயல்படுகிறது.

இவற்றுடன், டிராக்ஷன் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளிட்ட பயணிகள் பாதுகாப்பு அம்சங்களையும் பிராபஸ் 1300ஆர் பைக்கில் வழங்கியுள்ளனர். சஸ்பென்ஷனுக்கு அபெக்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பு அப்படியே கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக்கில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ப்ரேம்போ ஸ்டைலிமா பிரேக் காலிபர்களும் தொடரப்பட்டுள்ளன.

பிராபஸ் 1300ஆர் மோட்டார்சைக்கிள்கள் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வெறும் 154 யூனிட்கள் மட்டுமே இவை தயாரிக்கப்பட உள்ளன. இந்த செயல்திறன்மிக்க பைக்கின் விலை 34,549 பிரிட்டன் பவுண்ட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.35 லட்சங்கள் ஆகும்.

விலையில் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக்கை காட்டிலும் பிராபஸ் 1300ஆர் அதிகமானதாக உள்ளது. இந்திய சந்தையில் கேடிஎம் நிறுவனத்தின் 1290 சூப்பர் ட்யூக் பைக் விற்பனையில் இல்லை. அறிமுகம் செய்யப்பட்டால் இதன் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.50 லட்சங்களாக நிர்ணயிக்கப்படலாம். பிராபஸ் 1300 ஆர் பைக் தொடர்பான வீடியோவினை சில நாட்களுக்கு முன்பே கேடிஎம் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் -இன் தாய் நிறுவனமான பையர் மொபைலிட்டி புதியதாக 4 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் கூறியிருந்தோம். இதே பையர் மொபைலிட்டி கீழ் செயல்படும் ஹஸ்க்வர்னா பிராண்ட்டில் இருந்து இ-பைலன் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது.


Click it and Unblock the Notifications








