இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மத்திய அரசு தடை? பரபரப்பு தகவல்கள்!
விளக்கம்: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், தீ விபத்து சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை, புதிய எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக நிறுவனங்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மத்திய அரசு தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்ட தொடங்கியுள்ளனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இந்த சூழலில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது, மத்திய அரசின் முயற்சிகளுக்கு தடையாக அமைந்துள்ளது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த சம்பவங்கள் தொடர்பான விசாரணை முடியும் வரை, புதிய வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டாம் என, எலெக்ட்ரிக் டூவீலர் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ET Auto செய்தி வெளியிட்டுள்ளது. எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக தீப்பிடித்து வருவது குறித்து விவாதிப்பதற்காக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சமீபத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியது.

அப்போதுதான் புதிய எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டாம் என எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், தீ விபத்துக்களுக்கு என்ன காரணம்? என்பது உறுதியாக தெரியும் வரையிலும், இதுபோன்ற தீ விபத்துக்களை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வரையிலும், புதிய எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டாம் என உற்பத்தி நிறுவனங்களுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

அத்துடன் தீ விபத்து ஏற்படக்கூடிய அபாயமுள்ள எலெக்ட்ரிக் டூவீலர்களை 'ரீகால்' செய்ய வேண்டும் எனவும், இந்த கூட்டத்தின்போது தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தற்போது பல்வேறு எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்கள் தொடர்ச்சியாக 'ரீகால்' அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஓலா எலெக்ட்ரிக், ப்யூர் இவி மற்றும் ஒகினவா போன்ற பல்வேறு நிறுவனங்கள் தற்போது 'ரீகால்' அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதற்கிடைய எலெக்ட்ரிக் டூவீலர்களை எப்படி பாதுகாப்பாக சார்ஜ் செய்வது? என்பது குறித்தும், தீ விபத்துக்கள் நடைபெறாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் எலெக்ட்ரிக் டூவீலர் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நடைபெற்ற ஒரு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்துக்களில் உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டுள்ளன. எனவே எலெக்ட்ரிக் டூவீலர்கள் தற்போது பொதுமக்கள் பலரின் நம்பிக்கையை இழந்துள்ளன. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், பொதுமக்களில் பலர் எலெக்ட்ரிக் டூவீலர்களை வாங்கும் முடிவை கைவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சமீப காலமாகதான் எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை மிக சிறப்பான வகையில் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் நடைபெற்று வரும் தீ விபத்து போன்ற சம்பவங்கள், விற்பனை சரிவுக்கு காரணமாக அமைந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் இதன் காரணமாக மக்கள் மீண்டும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

எனவே பிரச்னைகளை முழுமையாக தீர்க்கும் வரையில், மேற்கொண்டு எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்பட்டு விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, புதிய எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டாம் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மத்திய அரசிடம் இருந்தோ அல்லது எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்தோ இதுவரை இந்த உத்தரவு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுதொடர்பான சந்தேகங்களை மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








