160கிமீ ரேஞ்ச் உடன்... புதிய க்ரேயான் என்வி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! இயக்க, லைசன்ஸ் எதுவும் தேவை இல்லை!
2022 க்ரேயான் என்வி (Crayon Envy) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.64 ஆயிரம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் வளர்ந்துவரும் இவி பிராண்ட்களுள் ஒன்றாக க்ரேயான் மோட்டார்ஸ் விளங்குகிறது. முன்னதாக இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்னோ+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த பிராண்டின் தயாரிப்பு மாடல்களின் வரிசை என்வி இவி மூலம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

பிரீமியம் ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கொண்டுவரப்பட்டு இருப்பினும், என்வி ஆனது குறை-வேக ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் க்ரேயான் ஸ்னோ+ மாடலும் குறை-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது. புதிய க்ரேயான் என்வி இ-ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.64,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருக்கைக்கு அடியில் பெரிய இடவசதி, சாவியில்லா ஸ்டார்ட் வசதி மற்றும் ரிவர்ஸ் உதவி உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ரிவர்ஸ் உதவி ஆனது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியிலும் ஸ்கூட்டரை எளிதாக பார்க் செய்வதற்கு உதவியாக இருக்கும். புதிய என்வி ஸ்கூட்டரினை வெள்ளை, கருப்பு, நீலம் மற்றும் சில்வர் என நான்கு விதமான நிறத்தேர்வுகளில் க்ரேயான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் கண்ட்ரோலருக்கு 24-மாத உத்தரவாதத்தை தயாரிப்பு நிறுவனம் வழங்க உள்ளது.

மொத்த ஸ்கூட்டருக்கான உத்தரவாதம் ஆனது நிறுவனத்தின் கொள்கைக்கு ஏற்ப மாறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரேயான் மோட்டார்ஸுக்கு இந்தியா முழுவதும் 100க்கும் அதிகமான பகுதிகளில் சில்லறை விற்பனை மையங்கள் உள்ளன. அவற்றில் என்வி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஸ்கூட்டரை காஸியாபாத்தில் உள்ள தொழிற்சாலையில் வடிவமைத்து க்ரேயான் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

என்வி இ-ஸ்கூட்டரின் இயக்க செலவானது கிமீ-க்கு 14 பைசா மட்டுமே ஆகும். தொழிற்நுட்ப அம்சங்களாக ஜியோ டேக்கிங் மற்றும் மைய லாக்கிங் உள்ளிட்டவற்றை க்ரேயான் என்வி ஏற்றுள்ளது. இவற்றுடன் டிஜிட்டல் வேகமானி மற்றும் மொபைல் சார்ஜிங் வசதியும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், முன்பக்கத்தில் இந்த ஸ்கூட்டர் இரட்டை ஹெட்லைட்களை பெற்றுள்ளது.

என்வி இ-ஸ்கூட்டரின் ஸ்டைலினை க்ரேயான் மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே வரியில், ‘சிங்கம் போன்றதான கட்டமைப்பு' என்கிறது. சவுகரியமான இருக்கை அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள க்ரேயான் என்வி-இன் டாப்-ஸ்பீடு 25kmph ஆகும். ஆதலால் அவசரமில்லாத வேலைகளுக்கும், அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தலாம்.
மேலும் இதன் அதிகப்பட்ச வேகம் 25kmph என்பதால், இதனை இயக்க ஓட்டுனர் உரிமம் எதுவும் தேவை கிடையாது. புதிய க்ரேயான் என்வி-யில் 250-வாட் BLDC எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ட்யுப்-லெஸ் டயர்களுடன் வழங்கப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரேக்கிங் பணியை கவனிக்க டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்கூட்டரின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 150மிமீ ஆகும்.

என்வி இ-ஸ்கூட்டர் பல்வேறு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் ரேஞ்ச் 160கிமீ வரையில் உள்ளன. அதாவது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்து அதிகப்பட்சமாக 160கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். புதிய க்ரேயான் என்வி-யின் விலை அரசாங்கங்கள் வழங்கும் மானியங்களை பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படும்.
பஜாஜ் ஃபின்சேர்வ், மனப்புரம் ஃபைனஸ், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஜெஸ்ட் மனி, ஷாப்சே மற்றும் பேடெயில் என பல்வேறு நிதி நிறுவனங்களுடன் க்ரேயான் மோட்டார்ஸ் நிறுவனம் கூட்டணியில் உள்ளது. ஆதலால் என்வி எலக்ட்ரிக் ஸ்கூட்டரினை வாங்குவோர் மேற்கூறப்பட்ட நிதி நிறுவனங்களின் வாயிலாக கவர்ச்சிக்கரமான நிதி தேர்வுகளை பெறலாம்.

என்வி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து க்ரேயான் மோட்டார்ஸின் துணை நிறுவனரும், இயக்குனருமான மயங்க் ஜெயின் கருத்து தெரிவிக்கையில், "இத்தகைய சுற்றுச்சூழலுக்கு-உகந்த பைக்குகள் எங்கள் உள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு குழுவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. தயாரிப்பின் தரம் மற்றும் செயல்பாடு ஆகியவை சிறந்த-இன்-கிளாஸ் இவி இயக்க தீர்வுகள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கான எங்கள் பிராண்டின் இலக்கிற்கு சான்றாகும்" என்றார்.


Click it and Unblock the Notifications








