நமக்கு பிடிச்ச பைக்க நாம பாத்துக்கலனா எப்படி? இத மட்டும் செஞ்சு பாருங்க வண்டி எப்பவுமே செம்ம ஸ்மூத்தா போகும்!
பைக்கை ரைடை பிடிக்காதவர்களைக் காண்பது அரிதான ஒன்று. நம்மல்ல பல பேருக்கு வாழ்க்கையில் ஓர் அங்கமாக மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன. ஒரு சிலர் தன்னுடைய துணைவியாரைவிட அதிக அக்கறையை இருசக்கர வாகனத்தின்மீது காண்பிப்பதைக்கூட நாம் பார்த்திருப்போம். அந்தளவிற்கு முக்கிய அங்கத்தினை பலரது வாழ்க்கையில் மோட்டார்சைக்கிள்கள் வகித்துக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய மோட்டார்சைக்கிளை மிகவும் ஸ்மூத்தானதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, பைக் எப்போதும் சூப்பரான இயங்கும் திறனில் வைத்திருக்க நாம் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றிய டிப்ஸ்களையே பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பேட்டரி பராமரிப்பு:
பொதுவாக புதிய வாகனங்களில் புதிய பேட்டரியே பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதால் அவற்றை பற்றி நாம் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை. அதேவேலையில், உங்க மோட்டார்சைக்கிள் கொஞ்சம் பழையதாக இருந்தால் இந்த விஷயத்தில் அதிக கவனம் தேவை. பேட்டரி வேலை செய்யவில்லை என்றால், ஒவ்வொரு முறையும் கிக் செய்து ஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும்.

வண்டி ஒரு உதையிலேயே ஸ்டார்ட் ஆகிவிடும் என்றால் இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. சில வண்டிகள் பலமுறை உதைத்தாலும் ஸ்டார்ட் ஆகாமல் இருந்துவிடும். குறிப்பாக சில ஸ்கூட்டர்களில் சென்டர் ஸ்டாண்ட் போட்டால் மட்டுமே கிக் ஸ்டார்ட் செய்ய முடியும். இந்த மாதிரியான சூழலைத் தவிர்க்கும் பொருட்டே பெரும்பாலான இருசக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி வழங்கப்படுகின்றது.

இத்தகைய அம்சத்தை செயலற்றதாக மாற்றிவிடுகின்றது பழுதான பேட்டரி. இந்த பேட்டரிகள் வாகனம் முற்றிலும் இயக்கமே இல்லாததாலும்கூட செயலிழக்க நேரிடலாம். ஆகையால், தினமும் கொஞ்சம் நேரமாவது வாகனத்தை ஸ்டார்ட் செய்து ரன் செய்ய வேண்டும். இதன் வாயிலாக பேட்டரி சார்ஜாகும். இதன் மூலம் பேட்டரியில் இருக்கும் மின்சாரத்தை நிலை நிறுத்த முடியும். மேலும், பேட்டரியின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்க முடியும். உங்கள் வாகனம் புதியதாக இருந்தாலும் இதை செய்வது அவசியம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆயில் மாற்றம் அவசியம்:
இருசக்கர வாகனத்தின் இதயமாக எஞ்ஜின் செயல்படுகின்றது. இதன் சீரான இயக்கத்திற்கு ஆயில் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, 500 மைல் (800 கிமீ) முதல் 1000 மைல் (1500 கிமீ) ஓட்டத்திற்கு பின்னர் ஆயிலை மாற்றுவது அவசியமானது. இதன் வாயிலாக இருசக்கர வாகனத்தின் இதயத்தை (எஞ்ஜினை) சீராக வைத்துக் கொள்ள முடியும். ஆயிலை மாற்றவில்லை என்றால் எஞ்ஜினுக்குள் கார்பன் மற்றும் நுண்ணிய இரும்புகள் அதிகம் சேர்ந்துவிடும்.

இதனால் எஞ்ஜின் விரைவில் தேய்மானம் அடையலாம். மேலும், எஞ்ஜின் குளிர்வதிலும் சிக்கல் ஏற்படும். இதுமாதிரியான சிக்கல்களைத் தவிர்க்க ஆயில் மாற்றம் அவசியமானதாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் ஆயிலை மாற்றி வாகனத்தை இயக்கினால், உங்களுக்கே உங்கள் வாகனத்தின் திறன் வெளிப்பாட்டில் வித்தியாசம் தெரியும்.

பிரேக்:
பிரேக் பராமரிப்பு மிக மிக அவசியமானது. தொடர்ச்சியான பயன்பாட்டின் காரணத்தினால் விரைவில் நலிவடைய கூடிய கருவியாக இது இருக்கின்றது. குறிப்பாக, டிரம் பிரேக் விரைவில் சேதமடையக் கூடியதாக இருக்கின்றது. இதேபோல், டிஸ்க் பிரேக்குகளிலும் வெளிப்புற அழுக்கு மற்றும் அதிக பயன்பாட்டின் காரணத்தினால் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதுமட்டுமில்லைங்க பிரேக் கேபிள்களிலும் கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பிரேக் பிடிக்கும்போது நீங்கள் அதிக இருக்கமாக இருப்பதை உணர்கிறீர்கள் என்றால் பிரேக் கேபிள் ஒயரில் கோளாறு இருப்பது உறுதி. இந்த மாதிரியான சூழலில் பிரேக் கேபிளை மாற்றுவதே நல்லது. இல்லையெனில் அந்த கேபிள் எப்போது துண்டாகும், அல்லது, செயலற்று போகும் என்பதே தெரியாது.

எனவே பிரேக் கேபிளை கையோடு மாற்றுவது நல்லது. இதேபோல், பிரேக் ஆயிலை மாற்றுவதும் நல்லது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒரு முறை இதை மாற்றுவது நல்லது. இதற்கு அடுத்தபடியாக பிரேக் பேட்களை செக் செய்யுங்கள். அது அதிகம் தேய்மானம் அடைந்திருந்தால் அதையும் கையோடு மாற்றிவிடுங்கள். இதன் வாயிலாக பைக் பயன்பாட்டை மிக சிறப்பானதாக மாற்ற முடியும்.

செயின் பராமரிப்பு:
வாகனத்தின் சீரான இயக்கத்திற்கு செயினும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. இதை சரியாக பராமரிக்கப்படவில்லை என்றால் எப்போது அது துண்டாகி விழும் என்பதே தெரியாது. குறிப்பாக, மழைக் காலங்களில் செயினை லூப்ரிகேட் செய்து பராமரித்தல் வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் துருவிற்கு அது இரையாக தொடங்கும்.

ஒவ்வொரு 500 மைல் பயணங்களுக்கு பின்னர் செயினின் டென்ஷனை சரிபார்ப்பது நல்லது. இத்துடன், சங்கிளியில் சேர்ந்திருக்கும் அழுக்கு மற்றும் பிசுக்குகளை அகற்றிவிட்டு அதில் மீண்டும் கிரீஸ் உள்ளிட்டவற்றை சேர்ப்பதனால் மிக சிறப்பான எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டை நம்மால் நம்முடைய பைக்கில் பெற்றுக் கொள்ள முடியும்.

வீல் பராமரிப்பு:
முன்பெல்லாம் கிராப்புறங்களில்தான் சாலைகள் கரடு-முரடாக இருக்கும். ஆனால், இப்போது முக்கிய நகரங்களில்கூட சாலைகள் முறையான பராமரிப்பற்றுக் காட்சியளிக்கின்ரன. குறிப்பாக, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் சாலை பள்ளங்கள் மேடுகள் நிறைந்ததாகக் காட்சியளிக்கின்றன. இதுமாதிரியான பகுதிகளில் பயணிப்பதனால் இருசக்கர வாகனத்தின் வீல் நாஸ்தியடைய நேரிடலாம்.

ஆகையால், உங்கள் வீல் சரியாக அது பொருத்தப்பட வேண்டிய இடத்தில்தான் அமர்ந்துள்ளதா என்பதை ஆராய வேண்டும். இத்துடன், வீல் அலாய்வு இருக்கின்றதா என்பதையும் ஆராய வேண்டும். இதை முறையாக செய்தால் மிக சிறப்பான பைக்கை எப்போதும் நம்மால் பெற முடியும்.

ஏர் ஃபில்டர்:
ஏர் ஃபில்டர் பைக்கிற்குள் நுழையும் காற்றை வடிகட்ட உதவுகின்றது. ஆகையால், விரைவில் அழுக்காகக் கூடிய ஓர் எந்திரமாக இது இருக்கின்றது. இதைக் கவனிக்கவில்லை என்றால் வாகனத்தின் இயக்கத்தில் எக்கசக்க சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக, வாகனம் அடைத்தவாறு பயணித்தல் போன்ற மிகப் பெரிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

இதைத் தவிர்க்க ஏர் ஃபில்டரை சுத்தம் செய்வது மிக மிக அவசியம். அதேபோல், இந்த கருவி திறம்பட இல்லை எனில் அதை உடனடியாக மாற்றிவிடுவது நல்லது. இதன் வாயிலாக உங்களின் பைக்கிற்கு எல்லா நேரங்களிலும் சீரான காற்று உட் செல்வதை உறுதிப்படுத்த முடியும். அதேநேரத்தில், ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை உங்கள் பைக்கின் ஏர்-ஃபில்டரை மிக தாராளமாக சுத்தம் செய்யலாம். இதனால், மிக சிறப்பான இயக்கத்தை நம்மால் பெற முடியும்.

எரிபொருள் கசிவு இருக்கிறதா என ஆராயவும்:
வாகனம் கொஞ்சம் பழையதாக மாறிவிட்டால் அதில் எப்போது என்ன மாதிரியான பிரச்னை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எனவே முன்கூட்டியே செய்யக் கூடிய ஆய்வுகளில் ஒன்றாக எரிபொருள் கசிவு உள்ளது. நமக்கே தெரியாமல் எரிபொருள் தொட்டி, பைப் லைன் போன்றவற்றில் இருந்து எரிபொருள் கசிய நேரிடலாம். இதனால், மைலேஜ் அடி வாங்குவதுடன் எஞ்ஜின் செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படும். ஆகையால், உங்கள் பைக்கின் செயல்திறனில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் இதை ஒரு முறை சாரி பார்த்துடுங்க.

டயர் பிரஷ்ஷர்:
டயரில் எப்போதும் போதுமான காற்றை நிரப்பிவிடுங்கள். போதுமான காற்று இல்லாத வாகனங்களே விரைவில் பஞ்சர் ஆகிவிடுகின்றன. இதுமட்டுமில்லைங்க காற்று போதியளவு நிரப்பப்படவில்லை எனில் டயரின் சுற்றுச் சுவர் விரைவில் பாதிக்கப்படலாம். ஆம், போதியளவு காற்று நிரப்பாமல் பயன்படுத்துவதனாலும் டயரின் சுற்று சுவரில் கிராக் ஏற்படும். எனவே எப்போதும் போதிய அளவு காற்றை நிரப்பி விடுவதே மிக மிக நல்லது.

அதேவேலையில், அதிகளவில் காற்றை நிரப்பும் பழக்கம் கொண்டிருப்பவராக இருந்தால் அதை உடனடியாக கைவிட்டுவிடுங்கள். நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி காற்று நிரப்பப்படுமானால், அந்த டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகையால், டயர் விஷயத்தில் அதிக கவனத்துடன் செயல்படுவது மிக மிக சிறந்தது.

க்ளீனிங் வேலை:
இருசக்கர வாகனத்தை அவ்வப்போது சுத்தம் செய்வதும் அதன் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவியாக இருக்கும். வாகனங்களுக்கு மிகப் பெரிய எதிரியாக துரு இருக்கின்றது. பெரியளவில் சுத்தம் செய்யப்படாத வாகனங்களே விரைவில் துருவிற்கு இரையாகின்றன. ஆகையால், முறையான சுத்தம் செய்யும் ரசாயனங்களைக் கொண்டு வாகனங்களை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம் ஆகும்.
மேலே பார்த்த இந்த வழிக்காட்டுதல்களைப் பின்பற்றினால் போதும், எப்போதும் நம்முடைய இருசக்கர வாகனம் நல்ல இயக்க நிலையில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








