2022 டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக் இந்தியாவில் அறிமுகம்!! புதியதாக ஏகப்பட்ட அப்டேட்கள்!
அப்டேட் செய்யப்பட்ட 2022 மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கினை இந்தியாவில் டுகாட்டி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டுகாட்டி அட்வென்ச்சர் பைக்கை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டி நிறுவனத்தின் உலகளவில் பிரபலமான அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்றாக மல்டிஸ்ட்ராடா வி4 விளங்குகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2021ஆம் ஆண்டில் சிறப்பாக விற்பனையான டுகாட்டி பைக்காகும் இது. இந்த வகையில் இந்திய சந்தையிலும் கடந்த சில மாதங்களாக இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், 2022ஆம் ஆண்டிற்காக மல்டிஸ்ட்ராடா வி4 -க்கு அப்டேட்களை டுகாட்டி நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த அப்டேட்களில், புதிய பெயிண்ட் தேர்வு, எலக்ட்ரானிக் அப்கிரேட்கள் மற்றும் ஆக்ஸஸரீகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்தியாவில் மல்டிஸ்ட்ராடா வி4 மற்றும் மல்டிஸ்ட்ராடா வி4 எஸ் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் இந்த டுகாட்டி அட்வென்ச்சர் பைக் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் டாப் வேரியண்ட்டான வி4 எஸ் -க்கு புதிய பனிக்கட்டி வெள்ளை நிறத்தேர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறத்தேர்வில் அடுத்த 2022 மார்ச் மாதத்தில் இருந்து இந்த பைக் விற்பனைக்கு கிடைக்குமாம். புதுமையாக மெட்டாலிக் ஷேடில் இந்த புதிய பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளதால், பைக் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த புதிய நிறத்தேர்வுடன் வழக்கமான டுகாட்டி சிவப்பு மற்றும் மாடர்ன் அவியேட்டர் க்ரே நிறத்தேர்வுகளிலும் மல்டிஸ்ட்ராடா வி4 எஸ் பைக் கிடைக்கும்.

இந்த டாப் வேரியண்ட்டில் எலக்ட்ரானிக் அப்டேட்டாக, குறைந்த ப்ரீலோடு செயல்பாட்டுடன் பைக்கின் செமி-ஆட்டோமேட்டிக் சஸ்பென்ஷன் யூனிட் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்கிரேடின் மூலமாக ஓட்டுனர் தங்களுக்கு பொருத்தமான உயரத்தில் மல்டிஸ்ட்ராடா வி4 எஸ் பைக்கின் ரைடர் இருக்கையின் உயரத்தினை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.

அட்வென்ச்சர் பைக்குகள் என்றாலே பொதுவாக ஓட்டுனர் இருக்கை ஆனது சற்று உயரத்தில் வழங்கப்படுவதுண்டு. அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸிற்காக இவ்வாறு தரையில் இருந்து நன்கு உயரத்தில் ஓட்டுனர் இருக்கை வழங்கப்படுகிறது. ஆனால் இது சாதாரண சாலைகளில் பயணங்களின்போது, உயரம் குறைவான ரைடர்களுக்கு அசவுகரியமாக விளங்குகிறது. இதனை களையும் விதமாகவே இத்தகைய சஸ்பென்ஷன் அப்டேட் மல்டிஸ்ட்ராடா வி4 எஸ் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பைக்கின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் டுகாட்டி அப்டேட் செய்துள்ளது. இதனால் கூடுதல் செயல்பாட்டுடன் ஓட்டுனர் தனது மொபைல் போனை பைக்குடன் இணைந்து கொள்ளலாம். நீங்கள் ஏற்கனவே டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 எஸ் பைக்கிற்கு உரிமையாளராக இருந்தாலும் மேற்கூறப்பட்டுள்ள அப்டேட்களை பெற முடியும். இதில் ஹைலைட் என்னவென்றால், இதற்காக நீங்கள் எந்தவொரு கூடுதல் கட்டணமும் செலுத்த தேவை இல்லையாம்.

கூடுதல் ஆக்ஸஸரீகளாக 2022 மல்டிஸ்ட்ராடா பைக் தாழ்வான சஸ்பென்ஷன் தொகுப்பு மற்றும் அலுமினியத்திலான பெட்டகம் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. இந்த சஸ்பென்ஷன் தொகுப்பில் ஃபோர்க் சுருள்கள், ஷாக் அப்சார்பர் சுருள்கள் மற்றும் சைடு ஸ்டாண்ட் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை ஒவ்வொரு அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கும் 20மிமீ-க்கு இருக்கையை தாழ்த்தவோ அல்லது உயர்த்தவோ செய்யும்.

இதனால் இந்த டுகாட்டி அட்வென்ச்சர் பைக்கில் ஓட்டுனர் இருக்கையை தரையில் 790மிமீ-895மிமீ ரேஞ்சில் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். அலுமினியத்திலான பின் பெட்டகம் ஆனது தொலைத்தூர பயணங்களின்போது பொருட்களை வைத்து செல்ல உதவியாக இருக்கும். இவை தவிர்த்து 2022 மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கில் வேறெந்த மாற்றமும் இல்லை.

இந்தியாவில் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.18.99 லட்சங்களில் இருந்து ரூ.23.30 லட்சங்கள் வரையில் உள்ளன. இந்த அட்வென்ச்சர் பைக்கில் 1158சிசி வி4 க்ராண்டூரிஸ்மோ என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-இல் 170 பிஎஸ் மற்றும் 8750 ஆர்பிஎம்-இல் 125 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் அமைப்பில் வழங்கப்படும் பின்பக்க சிலிண்டர்களை ஓய்வு நேரங்களின்போது அணைத்து வைத்து கொள்ளவும் முடியும். எலக்ட்ரானிக் தொகுப்புகளாக இந்த பைகில் 6-அச்சு IMU, கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி வீலிங் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் வாகனத்தை ஒரே இடத்தில் வைத்திருக்கும் கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








