இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை நோட் புக் மாதிரி மடிச்சு வச்சிக்கலாம்... பிரபல நிறுவனத்தின் சூப்பரான தயாரிப்பு!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று எளிதில் மடித்து வைத்துக் கொள்ளும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் மிதிவண்டியை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த இ-சைக்கிளின் முக்கிய அம்சங்கள்குறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இருசக்கர வாகன உற்பத்தியில் உலகளவில் ஃபேமஸாக விளங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் டுகாட்டி (Ducati)-யும் ஒன்று. இந்நிறுவனம் மிக சூப்பரான வசதிகள் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் சைக்கிளை வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டுகாட்டி எம்ஜி 20 எனும் மின் மோட்டாரால் இயங்கக் கூடிய புதுமுக இ-மிதிவண்டியையே நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.

இதில் சிறப்பு வசதியாக மடித்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. சைக்கிளை நிறுத்தி வைக்க பெரியளவில் இடம் தேவைப்படாது. இருப்பினும், ஒரு சிலர் சைக்கிள் நிறுத்தி வைப்பதை பெரும் இடையூறாக எண்ணுகின்றனர். குறிப்பாக, பாதுகாப்பு காரணமாக வீட்டுக்குள்ளேயே நிறுத்துபவர்கள் அது அதிக இடத்தை அடைத்துக் கொள்ளுவதாக நினைக்கின்றனர். இதன் விளைவாக சைக்கிளை பயன்படுத்துவோரின் சற்றேக் குறைந்துக் காணப்படுகின்றது.

இத்தகையோரைக் கவரும் வகையிலேயே டுகாட்டி நிறுவனம் எம்ஜி 20 (MG 20) இ-சைக்கிளை உருவாக்கியிருக்கின்றது. இதனை பயன்படாத நேரங்களில் புத்தகத்தை மடித்து வைப்பதைப்போல் எளிதில் மடித்து வைத்துக் கொள்ள முடியும். ஆகையால், இதனை வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். அதை நிறுத்தி வைக்க பெரியளவில் இடம் தேவைப்படாது. குறிப்பாக இ-சைக்கிளை மடித்த பிறகு மிக சிறிய இடைவெளியே அதை நிறுத்த போதுமானதாக உள்ளது.

இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட இ-சைக்கிளையே டுகாட்டி நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே எம்ஜி20 இ-சைக்கிளை டுகாட்டி நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. 1,663 அமெரிக்க டாலர்களுக்கு அது விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 1.29 லட்சம் ஆகும். இத்தகைய உச்சபட்ச விலையிலேயே உலக நாடுகள் சிலவற்றில் டுகாட்டி எம்ஜி 20 விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது. இதன் இந்திய வருகை பற்றிய எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

டுகாட்டி நிறுவனம் எலெக்ட்ரிக் சைக்கிளை வெறும் மடித்து வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட வாகனமாக மட்டுமே தயாரிக்கவில்லை. அதனை அதி-நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வாகனமாகவும் உருவாக்கியிருக்கின்றது. அந்தவகையில், எல்சிடி பேனல், எல்இடி லைட்டுகள், வீலில் ரெஃப்ளக்ட் ஆகக் கூடிய ஸ்ட்ரிப்புகள், 3 டிகிரி பெடல் அசிஸ்டன்ஸ் போன்ற பன்முக சிறப்பு வசதிகளை இ-சைக்கிளில் டுகாட்டி வழங்கியுள்ளது.

எலெக்ட்ரிக் சைக்கிளை மிகவும் மெல்லியதாக டுகாட்டி உருவாக்கியிருக்கின்றது. அதேவேலையில், அது அதிக உறுதியானதாக இருக்கும். இதேபோல் மிக உறுதியான ரிம்களே சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது அதிக எடையைத் தாங்கக் கூடியது. இந்த வீல்கள் மோட்டார்சைக்கிள்களின் வீலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த அனைத்து உபகரணங்களும் மிக எடைக் குறைவானதாகக் காட்சியளிக்கின்றன. இ-சைக்கிளின் எடை குறைவு தன்மைக்காக மக்னீசியம் கலவையால் உருவாக்கப்பட்ட ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே மிகக் குறைவான எடைக் குறைவிற்கு காரணமாக உள்ளது. இதன் வீல்கள் 20 அங்குலம் கொண்டது. இதில், 2.125 இன்ச் க்ராஸ் செக்சன் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டுகாட்டி எம்ஜி20 எலெக்ட்ரிக் சைக்கிளில் 36c 10.5 Ah 378 Wh திறன் கொண்ட சாம்சங் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இ-சைக்கிளின் உச்சபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த சூப்பரான இயக்க திறனுக்காக 250W எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளின் பின் வீல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரி பேக்கை தனியாக கழட்டி சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. வாடிக்கையாளர்கள் இ-சைக்கிளை எளிமையாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இதுமாதிரியான பன்முக சிறப்பு வசதிகளை எம்ஜி20 இல் டுகாட்டி நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது.
குறிப்பு: முதல் இரு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








