ஏத்தர், ஐக்யூப்-ஐ காட்டிலும் டபுள் மடங்காக விற்பனையாகும் ஓலா இ-ஸ்கூட்டர்கள்!! பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை
கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எரிபொருள் அதிகரிப்பு உள்பட சில காரணிகளால் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை நோக்கி நம் நாட்டிலும் மக்கள் அடியெடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டனர். எலக்ட்ரிக் பைக்கிற்கான சந்தை இன்னும் ஆரம்பக்கட்ட நிலையில்தான் உள்ளது என்றாலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதனை வெளிக்காட்டும் விதமாகவே தற்போது கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்கள் விற்பனை செய்து வருகின்றன. ஆனால் நாம் இந்த செய்தியில் ஓலா எஸ்1, டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர், பஜாஜ் சேத்தக் போன்ற முன்னணி நிறுவனங்களது தயாரிப்புகளை பற்றி மட்டுமே பார்க்கவுள்ளோம்.

இவை நான்கும் மொத்தமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 9,295 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே இந்த எண்ணிக்கை கடந்த 2022 ஜனவரி மாதத்தில் 6,724 ஆக பதிவாகி இருந்தது. இந்த வகையில் இவற்றின் விற்பனை மாதம்-மாதம் ஒப்பிடுகையில் 38.24% அதிகரித்துள்ளது. 2022 ஜனவரி மாதமாவது பரவாயில்லை, 2021 பிப்ரவரியில் வெறும் 1,203 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

இத்தகைய குறைவான விற்பனை எண்ணிக்கைக்கு காரணம் அந்த சமயத்தில் ஐக்யூப், ஏத்தர் மற்றும் சேத்தக் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தன. ஓலா எஸ்1 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, டிசம்பரில்தான் டெலிவிரியை துவங்கியது. இவ்வாறு சற்று தாமதமாக வந்திருந்தாலும், மற்ற அனைத்தையும் முந்திக்கொண்டு ஓலா எஸ்1 ஸ்கூட்டர்களே இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளன.

டீலர்ஷிப் மையங்கள் இல்லாமல், இணையத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தொழிற்சாலையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த மாதத்தில் மொத்தம் 3,905 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. அதுவே இதற்கு முந்தைய ஜனவரி மாதத்தில் 1,102 ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, ஜனவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரியில் சுமார் 254.36% அதிக ஓலா இ-ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளன. இதற்கடுத்து டிவிஎஸ் ஐக்யூப் கடந்த மாதத்தில் 2,238 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2022 ஜனவரி மாதத்தை காட்டிலும் 46.37% அதிகமாகும். ஏனெனில் 1,529 ஐக்யூப் ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதுவே, 2021ஆம் ஆண்டு முழுவதும் ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது.

டிவிஎஸ் ஐக்யூப் மட்டுமல்ல, ஏத்தர், பஜாஜ் சேத்தக் மாடல்கள் கூட பெரும்பான்மையான மாதங்களில் ஆயிரத்திற்கும் குறைவான விற்பனை எண்ணிக்கைகளையே பெற்றிருந்தன. ஐக்யூப்பின் 2021 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை 203 ஆகும். இது கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 1,002.46% குறைவாகும். இதில் இருந்து கடந்த ஒரு வருடத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை எந்த அளவிற்கு வளர்ச்சியை கண்டுள்ளது என்பதை அறியலாம்.

மூன்றாவது இடத்தை ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2,042 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. இந்த எண்ணிக்கை 850 ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த 2021 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 140.24% அதிகம் என்றாலும், கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் கிட்டத்தட்ட 27.72% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 2,825 ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டு இருந்தன. அதேபோல் இதற்கடுத்துள்ள பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையும் 2022 ஜனவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரியில் 12.46% சரிந்துள்ளது.

ஜனவரியில் 1,268 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் இதன் விற்பனை எண்ணிக்கை 1,110 ஆக பதிவாகியுள்ளது. அதுவே 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது சேத்தக் ஸ்கூட்டர்களின் விற்பனை சுமார் 640% முன்னேறியுள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 150 சேத்தக் ஸ்கூட்டர்களையே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது.


Click it and Unblock the Notifications








