பெருத்த அடியை கொடுக்க தயாரான இந்திய நிறுவனம்! ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமா 6 இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செஞ்சிருக்கு
இந்திய மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று ஒரே நேரத்தில் ஆறு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், ஒற்றை புரோட்டோடைப் இ-பைக்கையும் வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு நிறுவனங்களில் எனிக்மா (Enigma)-வும் ஒன்று. இந்நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஐந்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் உபி மாநிலம், நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தில் நடைபெற்ற 'இவி இந்தியா எக்ஸ்போ 2022' (EV India Expo 2022)-வில் அதன் ஆறு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஓர் ப்ரோடோடாப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்திருக்கின்றது.

இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக எனிக்மா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனிக்மா க்ரிங்க் பிளஸ் (Enigma Crink+), எனிக்மா க்ரிங் ப்ரோ (Enigma Crink Pro), எனிக்மா ஜிடி 450 (Enigma GT450), எனிக்மா ஜிடி 450 ப்ரோ (Enigma GT450 Pro), எனிக்மா ஆம்பியர் (Enigma Ambier), எனிக்மா என்8 தண்டர்ஸ்டோர்ம் (Enigma N8 Thunderstorm) மற்றும் எனிக்மா சிஆர்22 ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (Enigma CR22 - Prototype electric motorcycle) ஆகியவற்றயே எக்ஸ்போவில் நிறுவனம் காட்சிப்படுத்தியிருக்கின்றது.

க்ரிங்க் பிளஸ் (Crink+):
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜ் தரும் திறனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். லித்தியன் அயன் பேட்டரி பேக்கே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். மொத்தம் ஐந்து விதமான நிற தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மஞ்சள், வெள்ளை, நீலம், கிரே மற்றும் பிரவுண் ஆகிய நிற தேர்வுகளிலேயே க்ரிங்க் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

க்ரிங் ப்ரோ (Crink Pro):
க்ரிங்க் ப்ரோ, இது க்ரிங்க் பிளஸ் மாடலின் அதி-வேக திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகக் காட்சியளிக்கின்றது. இது மணிக்கு 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. அதேநேரத்தில், இதன் ரேஞ்ஜ் திறன் க்ரிங்க் பிளஸ் மாடலைக் காட்டிலும் சற்று குறைவானதாகக் காட்சியளிக்கின்றது. ஆம், ஓர் முழு சார்ஜில் 110 கிமீ வரையில் மட்டுமே க்ரிங்க் ப்ரோ செல்லும்.

இந்த ரேஞ்ஜ் திறனுக்காக எல்,எஃப்,பி., பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்களே போதுமானது. இந்த மாடலையும் எனிக்மா நிறுவனம் ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. மேட் பிளாக், கோல்டு, வெள்ளை, ராயல் ப்ளூ மற்றும் கிரே ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

ஜிடி450 (GT450):
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. எல்இடி ஆசிட் மற்றும் லித்தியம் அயன் ஆகிய இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலேயே அது விற்பனைக்கு வழங்க திட்டமிட்டிருக்கின்றது. இதில், எல்இடி ஆசிட் பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும் எனில் 7 முதல் 8 மணி நேரங்கள் வரை தேவைப்படும்.

லித்தியம் அயன் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 3 முதல் 5 மணி நேரங்களே போதுமானது. இவற்றை முழுமையாக சார்ஜ் செய்வதன் வாயிலாக 135 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை நிறுவனம் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. அவை, கோல்டு, சில்வர், ஸ்கை ப்ளூ மற்றும் கிரே ஆகும்.

ஜிடி450 ப்ரோ (GT 450 Pro)
இது மேலே பார்த்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹை-ஸ்பீடு வெர்ஷன் ஆகும். மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இது ஓர் முழு சார்ஜில் 120 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.4 கிலோவாட் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிடி 450 ப்ரோ நான்கு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். கோல்டு, சில்வர், ஸ்கை ப்ளூ மற்றும் கிரே ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும். இந்த இருசக்கர வாகனத்தை ரூ. 36 ஆயிரம் என்கிற குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆம்பியர் (Ambier):
இது ஓர் குறைந்த வேக ஓடும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த இருசக்கர வாகனம் ஓர் முழு சார்ஜில் 160 கிமீ தூரம் வரை பயணிக்கும். ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். சிவப்பு, நீலம், ஆரஞ்சு, சில்வர் மற்றும் கிரே ஆகிய நிற தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த வாகனத்திற்கு நிறுவனம் ரூ. 52,250 விலை நிர்ணயித்துள்ளது.

என்8 தண்டர்ஸ்டோர்ம் (N8 Thunderstorm)
நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஆறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் என்8 தண்டர்ஸ்டோர்ம்-ம் ஒன்று. இந்த வாகனத்தில் நிறுவனம் 36ஏஎச் பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். இதனை ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவை, ஹோண்டா கிரே, ராயல் ப்ளூ, பிஎம்டபிள்யூ கோல்டு, வெள்ளை மற்றும் சில்வர் ஆகும்.

எனிக்மா சிஆர்22 (Enigma CR22)
மிக மிக அதிக வேகத்தில் இயங்கும் திறனில் இந்த எலெக்ட்ரிக் பைக்கை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். இது விற்பனைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நிறுவனம் இந்த பைக்கை சோதனை முறையிலேயே உருவாக்கியிருக்கின்றது. விரைவில் இப்பைக்கை விற்பனைக்காக உற்பத்தி செய்யத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக்கில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்கும் ரேஞ்ஜை வழங்கக் கூடிய பேட்டரி பேக்கையே எனிக்மா பயன்படுத்தியிருக்கின்றது. இது விற்பனைக்கு வரும் சற்று வேகம் குறைக்கப்பட்ட வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. அப்போது அதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100கிமீட்டராக குறைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ரேஞ்ஜில் எந்த வித மாற்றமும் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








