இந்தியாவில் அறிமுகமாகின அரபு நாட்டு நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள்! அனைத்துமே மேட்-இன் இந்திய தயாரிப்புகள்!
மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஈவியம் (EVeium), அதன் மூன்று புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஈவியம் (EVeium), கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி அன்று இன்னும் 30 நாட்களில் இந்தியாவில் மூன்று புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் அதன் மூன்று புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை வெளியீடு செய்திருக்கின்றது.

காஸ்மோ (Cosmo), காமெட் (Comet) மற்றும் சிஸார் (Czar) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையே ஈவியம் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. மூன்றுமே ரெட்ரோ - கிளாசிக் தோற்றத்தைக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. இருப்பினும், அவற்றின் ஸ்டைல் மற்றும் அம்சங்கள் மாறுபட்டவையாகக் காட்சியளிக்கின்றன.

விலை விபரம்:
ஈவியம் நிறுவனம் காஸ்மோ மாடலுக்கு ரூ. 1.44 லட்சத்தையும், காமெட் மாடலுக்கு ரூ. 1.92 லட்சத்தையும், உயர்நிலை மாடலான சிஸாருக்கு ரூ. 2.16 லட்சமும் விலை நிர்ணயித்துள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. உருவத்திலும், ஸ்டைலிலும் மாறுபட்டு காணப்படும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒரே மாதிரியான தொழில்நுட்ப வசதிகளையே நிறுவனம் வழங்கியிருக்கின்றது. அதேவேலையில், பேட்டரி பேக், மின் மோட்டார் ஆகிய விஷயங்களில் அவை மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன.

மாடல் வாரியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு வசதிகளின் விபரம்:
காஸ்மோ:
ஈவியம் நிறுவனம் இந்த மாடலில் மேலே கூறியதைப் போல் 72V 30 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக்கையே பயன்படுத்தியிருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் வரை தேவைப்படும். முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 80 கிமீ தூரம் வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்க முடியும். இதில், 2000 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆறு விதமான நிற தேர்வுகளில் நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். பிரைட் பிளாக் (Bright Black), செர்ரி ரெட் (Cherry Red), லெமன் யெல்லோ (Lemon Yellow), வெள்ளை (White), நீலம் (Blue) மற்றும் சாம்பல் (Grey) ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

காமெட்:
இந்த மாடலில் 72V மற்றும் 50Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் தேர்வு வழங்கப்படுகின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்யவும் நான்கு மணி நேரங்கள் தேவைப்படுகின்றது. அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் சுமார் 150 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். இதில், அதிக வேக திறனுக்காக 3000 வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த மோட்டாரின் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். இந்த மாடலையும் பன்முக தேர்வில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஈவியம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஷைனி பிளாக் (Shiny Black), மேட் பிளாக் (Matt Black), ஒயின் ரெட் (Wine Red), ராயல் ப்ளூ (Royal Blue), வெள்ளை (White) மற்றும் பழுப்பு நிறம் (Beige) ஆகிய தேர்வுகளிலேயே காமெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்க இருக்கின்றது.

சிஸார்:
காமெட் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் போலவே அதிக ரேஞ்ஜ் மற்றும் அதிக வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக சிஸார் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் 72V 42Ah திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்களே போதுமானது. முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதில், 4000 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். கிளாஸ்ஸி பிளாக் (Glossy Black), மேட் பிளாக் (Matt Black), கிளாஸ்ஸி சிவப்பு (Glossy Red), லைட் ப்ளூ (Light Blue), மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் வெள்ளை (White) ஆகிய நிற தேர்வுகளில் சிஸாரை வாங்கிக் கொள்ள முடியும்.

இதுதவிர, அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் கூடுதல் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக சாவியில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, ஆன்டி-தெஃப்ட் அலாரம், எல்சிடி திரை, ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங், மொபைல் இணைப்பு வசதி, ஃபைண்டு மை வெயிக்கிள், ரியல் டைம் டிராக்கிங், ஓவர் ஸ்பீடு அலர்ட், ஜியோ ஃபென்சிங், எல்சிடி திரை என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன்.

கூடுதல் சிறப்பு வசதிகளாக காமெட் மற்றும் சிஸார் ஆகியவற்றில் ரிவர்ஸ் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய ரைடிங் மோட்கள் அனைத்து மாடல்களிலும் ஈவியம் வழங்கியிருக்கின்றது.
அரபு நாட்டைச் சார்ந்த மெட்டா4 குழுத்தின் (META4 Group), வாகன உற்பத்தி நிறுவனமாக எல்லிசியம் ஆட்டோமோட்டிவ்ஸ் (Ellysium Automotives) இருக்கின்றது. இந்த நிறுவனத்தின்கீழ் இயங்கும் துணை பிராண்டே இந்த ஈவியம். இந்த பிராண்ட் அதன் மின் வாகனங்களை உற்பத்தி செய்ய தெலங்கானா மாநிலத்தில் ஆலை ஒன்றை அமைத்திருக்கின்றது.

மெட்டா4 குழுமத்திற்கு சொந்தமான வோல்ட்லி எனெர்ஜி உற்பத்தி ஆலையிலேயே ஈவியம் பிராண்டின் அனைத்து மின்சார வாகனங்களும் தயாரிக்கப்பட இருக்கின்றன. அண்மையில்தான் இதற்கான 15 ஏக்கர் லேண்ட் கையகப்படுத்தப்பட்டது. ஜஹிராபாத் எனும் பகுதியிலேயே நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இங்கு ரூ. 250 கோடி முதலீட்டில் நிறுவனம் மின் வாகன உற்பத்தியில் ஈடுபட தொடங்கியிருக்கின்றது. இதன்வாயிலாக ஈவியம் நிறுவனம் இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே வைத்து அதன் அனைத்து மின்வாகனங்களையும் தயாரிக்க இருப்பது தெரிகின்றது. இந்த நிலையிலேயே மூன்று அட்டகாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








