பெட்ரோல் ஸ்கூட்டர் சந்தை அவ்வளவு சீக்கிரமாலாம் கல்லறைக்கு போகாது! 2022ல் அறிமுகமாகிய டாப்பான 5 ஸ்கூட்டர்கள்...
இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. குறிப்பாக நகரங்களில் மிகப் பெரிய பட்டாளம் ஸ்கூட்டர்களுக்கு உள்ளது. அதிக நெரிசல் மிகுந்த சாலையில் பைக்குகளை இயக்குவதைவிட மிக எளிதானதாக ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. கியர் பொசிஷனை அடிக்கடி உயர்த்துவது, குறைப்பது போன்ற பெரிய வேலையில் இருந்து தப்பிக்க வைக்கக் கூடியதாக ஸ்கூட்டர்கள் உள்ளன. இதன் காரணத்தினாலேயே ஸ்கூட்டர்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு அதிகம் என்கிற காரணத்தினாலேயே இந்தியாவில் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் அதிக எண்ணிக்கையில் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், நடப்பாண்டை அதிர வைக்கும் வகையில் விற்பனைக்கு வந்த ஸ்கூட்டர்கள் மாடல்கள் ஏராளாம். அவற்றில் ஒரு சிலவற்றின் முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது, இந்தியர்களின் கவனத்தையும், மனதையும் கவரும் வகையில் 2022 இல் விற்பனைக்கு வந்த டாப் 5 பெட்ரோல் ஸ்கூட்டர் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டிவிஎஸ் என்டார்க் 125 எக்ஸ்டி:
இந்தியாவில் நடப்பாண்டில் அறிமுகமாகிய சூப்பரான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக டிவிஎஸ் என்டார்க் 125 எக்ஸ்டி உள்ளது. இது ஓர் 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடலாகும். வழக்கமான என்டார்க் 125 மாடலைக் காட்டிலும் மிக அதிக சிறப்பு வசதிகள் நிறைந்த தேர்வாக என்டார்க் 125 எக்ஸ்டி இருக்கின்றது. இதன் விளைவாகவே வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் ரூ. 23 ஆயிரம் அதிக விலையைக் கொண்டதாக என்டார்க் 125 எக்ஸ்டி வேரியண்ட் உள்ளது. இதன் விலை ரூ. 1 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிஜிட்டல் கன்சோல், சூப்பரான கிராஃபிக், கவர்ச்சியான அலாய் வீல் என எக்கசக்க அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் டிஎஃப்டி ரக திரை மூலம் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, வானிலை அறிவிப்பு, செய்திகள், கிரிக்கெட் ஸ்கோர் போன்றவற்றை பற்றியும் அறிந்துக் கொள்ள முடியும். இதுமட்டுமில்லைங்க, இன்டலிகோ ஸ்டார்ட்/ ஸ்டாப் டெக்னாலஜியும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இது சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டத்தும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது மாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த ஸ்கூட்டர் 2022 ஆம் ஆண்டின் மிக சிறந்த வரவாக பார்க்கப்படுகின்றது.
கீவே வீஸ்டே 300:
கீவே நிறுவனம் அதன் இந்திய கால் தட பதிப்பை முன்னிட்டு நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்த மிக சிறப்பான தயாரிப்பாக வீஸ்டே 300 இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டரில் மோட்டார்சைக்கிள்களக்கு இணையான சிசி திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. 278 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 18.4 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இதுமட்டுமில்லைங்க இது ஓர் பிரீமியம் தர இருசக்கர வாகனம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், டூயல் சேனல் ஏபிஎஸ், சாவியே இல்லாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் வசதி உள்ளிட்ட பன்முக அம்சங்கள் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூப்பரான அம்சங்களை இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இதன் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ரூ. 2.99 லட்சம் விலையிலேயே அது விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
கீவே சிக்ஸ்டீஸ் 300ஐ
கீவே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் தரமான பெட்ரோல் ஸ்கூட்டர் மாடலாக சிக்ஸ்டீஸ் 300ஐ உள்ளது. இந்த ஸ்கூட்டரை 1960களில் உருவாக்கிய தனது பிரபல மாடல் இருசக்கர வாகனத்தை தழுவியே கீவே நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே அதன் பெயருடன் சிக்ஸ்டீஸ் சேர்க்கப்பட்டுள்ளது. பழங்கால இருசக்கர வாகன மாடலை தழுவி இது உருவாக்கப்பட்டிருந்தாலும் கண் கவரும் இருசக்கர வாகனமாகவே அது காட்சியளிக்கின்றது. இந்த வாகனத்திலும் வீஸ்டே பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 278 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் எக்கசக்க பிரீமியம் தர அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலையும் ரூ. 2.99 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் 110 எக்ஸ்டெக்:
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த பெட்ரோல் ஸ்கூட்டர் மாடலே இந்த பிளஷ்ஷர் பிளஸ் 110 எக்ஸ்டெக் ஆகும். இது விலை குறைவான அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட தயாரிப்பு ஆகும். புதிய டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர எல்இடி ஹெட்லைட், புதிய குரோம் அக்செண்டுகள், பில்லியன் ரைடருக்கான பேக் ரெஸ்ட் போன்ற அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன் பக்க ஃபெண்டர் மெட்டலில் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால பயன்பாட்டிற்காக இது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 70,982 ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ்:
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் சுஸுகியும் ஒன்று. இந்த நிறுவனத்தின் புகழ்மிக்க டூ-வீலர் மாடல்களில் பர்க்மேனும் ஒன்று. இதன் சூப்பரான எடிசனே பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ். இதன் வழக்கமான வெர்ஷனைக் காட்டிலும் ஸ்ட்ரீட் இஎக்ஸ் சற்று அதிக விலையில் விற்கப்படுகின்றது. ரூ. 19 ஆயிரம் அதிக விலைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. ரூ. 1.12 லட்சம் விலையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிக விலைக்கு அலங்கார அம்சங்கள் இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதே காரணமாக உள்ளது. ஆமாங்க, வழக்கமான சுஸுகி பர்க்மேனைக் காட்டிலும் இந்த எடிசன் கண் கவர் தோற்றம் கொண்டதாகக் காட்சியளிக்கும். முற்றிலும் கவர்ச்சிகரமான பெயிண்ட் ஸ்கீம், பெரிய டயர் என பன்முக அம்சங்கள் பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ்-இல் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஓர் 124 சிசி திறனை வெளியேற்றும் ஸ்கூட்டர் ஆகும். அதேவேளையில் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








