சட்டப்பூர்வ அனுமதி... ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றலாம்... எவ்ளோ செலவாகும் தெரியுமா?
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கான எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டிற்கு, அராய் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மும்பையை சேர்ந்த நிறுவனங்களில் ஒன்று கோகோ ஏ1 (GoGo A1). ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கிற்கான, எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் (Electric Conversion Kit) ஒன்றை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோகோ ஏ1 நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டிற்கு ஏற்கனவே ஆர்டிஓ (RTO) அனுமதி கிடைத்து விட்டது.

இந்த சூழலில் தற்போது அராய் (ARAI - Automotive Research Association of India) அமைப்பின் அனுமதியையும் இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் பெற்றுள்ளது. உங்கள் ஹீரோ ஸ்பிளெண்ட் பைக்கிற்கு இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டை நீங்கள் பொருத்த விரும்பினால், அந்த நிறுவனத்தின் ஒர்க் ஷாப்பிற்கு உங்கள் பைக்கை கொண்டு செல்ல வேண்டும்.

தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் 36 ஆர்டிஓ அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதியில் கோகோ ஏ1 நிறுவனத்தின் ஒர்க் ஷாப் செயல்பட்டு வருகிறது. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை கோகோ ஏ1 நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமான எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் ஆகும்.

எனவே பெட்ரோலில் இருந்து எலெக்ட்ரிக் மூலம் இயங்க கூடியதாக மாற்றினாலும், அந்த பைக்கின் உரிமையாளர்களுக்கு இன்சூரன்ஸ் பெற முடியும். பெட்ரோலில் இயங்க கூடிய உங்கள் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில், நீங்கள் இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-டை பொருத்தினால், உள்ளூர் ஆர்டிஓ-விடம் மறுபதிவு (Re-registration) செய்ய வேண்டும்.

மறுபதிவு செய்வதால், உங்கள் பைக்கின் பதிவு எண் மாறாது. பழைய பதிவு எண் அப்படியே தொடரும். ஆனால் புதிதாக பச்சை நிற நம்பர் பிளேட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வரும் காலங்களில் இதுபோன்ற எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்கள் இந்திய மக்களிடையே வெகுவாக பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையும், மக்களின் கவனத்தை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பி வருகிறது.

ஆனால் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை காட்டிலும், ஏற்கனவே உள்ள ஐசி இன்ஜின் வாகனங்களை, அதாவது பெட்ரோல், டீசல் வாகனங்களை, எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றி கொள்வது சிக்கனமான நடவடிக்கையாக இருக்கும். எனவே வரும் காலங்களில் இதுபோன்ற எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்களுக்கான தேவை பல மடங்கு உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

தற்போது அராய் அமைப்பின் அனுமதியை பெற்றுள்ள கோகோ ஏ1 நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட், 2 kW எலெக்ட்ரிக் மோட்டாரை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் 2.8 kWh பேட்டரி தொகுப்பையும் இது கொண்டுள்ளது. மேலும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் (Regenerative Braking System) வசதியும் இருக்கிறது.

ஆனால் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். எனினும் பழைய ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளை கூட, எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி கொள்ளலாம். 1997 மாடல் இயரில் இருந்து எந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை வேண்டுமென்றாலும், எலெக்ட்ரிக் பைக்காக மாற்ற முடியும்.

பேட்டரி இல்லாமல் இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டின் விலை 35 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பேட்டரியுடன் கூடிய விலை 95 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 151 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








