ஓலாவுக்கு ஆப்பு வைக்கக் களம் இறங்கும் புதிய நிறுவனம்... விலை ரொம்ப கம்மியா?
ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் கொடிகட்டிப் பறந்து வரும் நிலையில் தற்போது அதற்குப் போட்டியாகத் தைவான் நாட்டைச் சேர்ந்த கோகோரோ நிறுவனம் இந்தியாவிற்குள் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை சூடுபிடித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரும் புரட்சியே செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலக நாடுகள் முழுவதும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் இந்தியாவைக் குறித்து வைத்து இந்தியாவிற்குள் களம் இறங்கத் தயாராகி வருகின்றனர். குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் விற்பனை எதிர்பாராத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் கோகோரோ. இந்நிறுவனம் தற்போது வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி முதல் இந்தியாவிற்குள் தனது ஸ்கூட்டரைவிற்பனைக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் சந்தையில் இருக்கும், ஓலா, ஒகினாவா, ஏத்தர் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களம் இறங்குகிறது.

இதுவரை கோகோரோ நிறுவனம் இந்தியாவில் தனது தனது எந்த தயாரிப்பை வெளியிடப்போகிறது என்ற தகவலை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் தனது ஒரு ஸ்கூட்டரை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கும், மற்றொரு ஸ்கூட்டரை தொழிற்பயன்பாட்டிற்கும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக வாடிக்கையாளர்களுக்குத் தனது எஸ்1 ஸ்கூட்டரையும், தொழிற்பயன்பாட்டிற்கு விவா ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோகோரோ எஸ்1 ஸ்கூட்டரை பொருத்தவரை மிட்-மவுண்ட் சிங்கிள் மோட்டார் செட்டப் கொண்டது. இந்த ஸ்கூட்டர் 9.6 பிஎச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரில் ஸ்வாப் செய்யக்கூடிய லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 150 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 30 கி.மீ வேகத்தில் தான் செல்லும், இதற்கு அதிகமான சார்ஜிங் ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த கோகோரோ எஸ்1 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாகும் போது ரூ1.5 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம் ஓலா எஸ்1 ப்ரோ, ஏத்தர் 450எக்ஸ், டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி, ஹீரோ விடா வி1 ப்ரோ, மற்றும் சிம்பிள் 1 ஸ்கூட்டர் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஸ்கூட்டர் அலுமினியம் மோனோக்யூ சேசிஸில் உருவாக்கப்பட்டுள்ளது. சன்பென்ஸனாக சிங்கிள் ஆர்ம் ஃபோர்க் பின்பக்கம் மோனாஷாக் சன்ஸ்பென்சன்களை கொண்டுள்ளது.

அடுத்ததாக கோகோரோ விவா ஸ்கூட்டரை பொருத்தவரை 4 பிஎச்பி மோட்டாரை கொண்டது. இது 85 என்எம் டார்க் திறனை மேம்படுத்தும், இது முழு சார்ஜில் 85 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இது நீண்ட நேரப் பயன்பாடு மற்றும் கரடு முரடான பாதைகளில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்சன்னை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் ரூ80,000 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் தொழிற் பயன்பாடு, அதாவது லாஸ்ட் மைல் டெலிவரிக்காக பயன்படுத்தப்படும். இந்த செக்மெண்டில் ஏற்கனவே இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் என்ஒய்எக்ஸ் எச் எக்ஸ், ஓகினாவா நிறுவனத்தின் டுயல் 100 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன.

தற்போது ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் தற்போது அதற்குப் போட்டியாகத் தைவான் நிறுவனம் களம் இறங்கவுள்ளது. போட்டியாளர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் பல ஸ்கூட்டர்களில் இல்லாத முக்கிய அம்சமாக பேட்டரி ஸ்வாப்பிங் தொழிற்நுட்பம் இருப்பது மிக முக்கியமான ப்ளஸாக பார்க்கப்படுகிறது.

இந்த தொழிற்நுட்பம் சாதாரண பயன்பாட்டாளர்களை ஈர்க்குமோ இல்லையோ ஆனால் லாஸ்ட் மைல் டெலிவரி, உள்ளிட்ட தொழிற்பயன்பாட்டிற்கு இது பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கலாம். அதன் விலையும் மிகவும் குறைவாக இருப்பதால் பலர் இந்த ஸ்கூட்டரைவாங்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








