தொடர் மின்சார இருசக்கர வாகன தீ விபத்து நிகழ்வுகளுக்கு இதுதான் காரணமா?.. பரபரப்பு தகவலை வெளியிட்ட மத்திய குழு!
தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தீ விபத்தில் சிக்கியதற்கான காரணங்களை மத்திய அரசு அமைத்த குழு கண்டறிந்துள்ளது. இதுகுறித்து அக்குழு வெளியிட்டிருக்கும் பரபரப்பு தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின் வாகனங்கள் சார்ந்து நடைபெறும் தீ விபத்து சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இது, தொடர் கதையாகி வருவதால் மக்கள் மின் வாகன பயன்பாட்டிற்கு மாறுவதற்கே தயக்கம் காட்ட தொடங்கியுள்ளனர். இந்திய அரசு பல கட்ட முயற்சிகளைக் கொண்டு மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மின்சார இருசக்கர வாகன தீ விபத்து நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

நாட்டில் அரங்கேறிய அனைத்து தீ விபத்து நிகழ்வுகளும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சார்ந்தே நடைபெற்றிருக்கின்றன. சில இடங்களில் அவை உயிர் பலியைகூட வாங்கியுள்ளன. இது மக்களை மேலும் பல மடங்கு அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்தது. அனைத்து தரப்பு மக்களும் மிக வேகமாக மின் வாகன பயன்பாட்டிற்கு மாறிக் கொண்டிருக்கின்ற சூழலில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் தீ விபத்து நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இதன் வீரியத்தை உணர்ந்த மத்திய அரசு தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓர் குழுவை அமைத்தது. தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டிருக்கும் அந்த குழு தற்போது அதன் முதல் கட்ட ஆய்வின் வாயிலாக சில அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது, மின்சார இருசக்கர வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்ததற்கான முக்கிய காரணத்தை அது வெளியிட்டிருக்கின்றது.

பேட்டரி செல்கள் வடிவமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணத்தினாலேயே மின்சார இருசக்கர வாகனங்கள் தீ பிடித்திருப்பதாக ஆரம்பகட்ட ஆய்வின் வாயிலாக அக்குழு கண்டுபிடித்துள்ளது. கிட்டதட்ட இதுவே அனைத்து எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் தீ விபத்து நிகழ்விற்கும் காரணம் என அது தெரிவித்துள்ளது.

ஒகினவா ஆட்டோடெக் (Okinawa Autotech), பூம் மோட்டார் (Boom Motor), ப்யூர் இவி (Pure EV), ஜிதேந்திரா இவி (Jitendra EV) மற்றும் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களே கடந்த காலங்களில் தீ விபத்தில் சிக்கின. அடுத்தடுத்தாக அவை தீ விபத்தில் சிக்கின.

இதனைத் தொடர்ந்தே மத்திய அரசு சென்ற மாதம் ஓர் குழுவை அமைத்தது. இந்த குழு பேட்டரி செல்கள் மற்றும் பேட்டரி வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளின் காரணத்தினால் தீ விபத்து நிகழ்ந்திருப்பதை தற்போது கண்டறிந்திருக்கின்றது. தெலுங்கானா மாநிலத்தில் ஓர் 80 வயது முதியவரும், தமிழகத்தில் தந்தை-மகளும் எலெக்ட்ரிக் வாகன தீ விபத்தால் பலியாகிய சம்பம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கும் வகையில் அமைந்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்தே அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட தொடங்கியது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் வாகனங்கள்கூட திடீரென வெடித்து சிதறி தீயிற்கு இரையாகியதாக சம்பவங்கள்கூட நாட்டில் பதிவாகியுள்ளன. ஏன், கன்டெய்னரில் ஏற்றி வரப்பட்ட மின் வாகனங்களும்கூட தீ விபத்தில் சிக்கியிருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களே மக்களை பெருத்த அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது.

குறிப்பாக, மின் வாகன பயன்பாட்டாளர்களை வெடிகுண்டின் மீது அமர்ந்து பயணிப்பதைபோல் அது உணர வைத்துள்ளது. பலர் தொடர் தீ விபத்தைக் காரணம் காட்டி மின் வாகன பயன்பாட்டிற்கு மாற போட்டிருந்த பிளானை தற்போது தள்ளி போட்டுள்ளனர். ஆகையால், அரசின் நோக்கம் தற்போது கேள்விக் குறியாக மாறியுள்ளது. நாட்டை முழுமையாக பசுமை இயக்கத்தை நோக்கி நகர்த்தும் முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்காக மக்களுக்கு மானியம் மற்றும் வரி சலுகை போன்றவற்றை அரசுகள் வழங்கி வருகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அரசின் மின் வாகன ஊக்குவிப்பிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அவை சார்ந்து தொடர் அவல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் இதுமாதிரியான நிகழ்வுகளுக்கு அரசு ஓர் முடிவு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், விரைவில் மத்திய அரசு மின் வாகன உற்பத்திக்கான வழிகாட்டுதல்களை வெளியட இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் உறுதிப்படுத்தியிருக்கின்றார். அரசு காட்டும் வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








