ஒரு முறை சார்ஜ் பண்ணினா 120 கிமீ பயணிக்கலாம்... ஆகஸ்டு மாசம் அறிமுகமாகிறது ஸ்விட்ச் இ-பைக்! லுக் வேற லெவல்!
ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ பயணிக்கக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் பைக்கை ஸ்விட்ச் நிறுவனம் ஆகஸ்டு மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

குஜராத் மாநிலம், அஹமதாபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஸ்விட்ச் மோட்டோகார்ப் பிரைவேட் லிமிடெட் (Svitch MotoCorp Pvt. Ltd.). இந்நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் குறிப்பிட்ட சில எலெக்ட்ரிக்க இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இந்த நிலையில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சில இருசக்கர வாகனங்களுடன் சேர்த்து ஓர் புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தையும் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிறுவனம் சிஎஸ்ஆர் 762 (Svitch CSR 762) என்றழைக்கப்படும் எலெக்ட்ரிக் பைக்கையே விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்திய இளம் தலைமுறையினரைக் கவரும் நோக்கில் அப்பைக்கை நிறுவனம் தயாரித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இதன் அறிமுகம் பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது. ஜூலை-ஆகஸ்டு 2022 ஆகிய இடைப்பட்ட காலத்திற்குள் அது வெளியீட்டைப் பெறலாம் என வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் அதிக திறன் வாய்ந்தது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக 10 கிலோவாட் பவரை வெளியேற்றக் கூடிய 3kW மின் மோட்டார் இ-பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திறனை 1,300 ஆர்பிஎம்மிலேயே அது வெளிப்படுத்தும். இத்துடன், நிக்கல் மக்னீசியம் கோபால்டால் உருவாக்கப்பட்ட லித்தியம் அயன் பேட்டரி பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி 3.7kWh திறன் கொண்டதாகும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, சிஎஸ்ஆர் 762 மணிக்கு 110 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனையும் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, 1430 மிமீ வீல் பேஸ், 780 மிமீ இருக்கை உயரம், 155-200 கிலோ எடை ஆகிய சிறப்புகளையும் இந்த பைக் கொண்டுள்ளது.

மேலும், ஸ்விட்ச் நிறுவனம் இந்த பைக்கில் பன்முக ரைடிங் மோட்களை வழங்கியிருக்கின்றது. பார்க்கிங் மோட், ரிவர்ஸ் மோட் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்ட மோட்களே சிஎஸ்ஆர் 762 எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இன்னும் பல அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளும் அதில் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேவேலையில், எல்இடி லைட், நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட திரை மற்றும் டிராக்கிங் வசதி உள்ளிட்டவை இ-பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. இப்பைக்கின் ஸ்டைலும் அட்டகாசமானதாகக் காட்சியளிக்கின்றது.

நவீன-கால ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே தோற்கடிக்கும் வகையில் மிக சூப்பரான ஸ்டைலில் அது காட்சியளிக்கின்றது. தற்போது நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, சிஎஸ்ஆர் 762 எலெக்ட்ரிக் பைக் குஜராத் மாநிலத்தில் உயிர்வாழும் ஆசிய சிங்கத்தின் உருவத்தை தழுவி உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சிங்கங்களின் உருவத்திற்கு இணையான கம்பீரமான தோற்றம் அதற்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. எலெக்ட்ரிக் பைக் சுமார் 1.65 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசின் மின்வாகன திட்டத்தின்கீழ் ரூ. 1.25 லட்சம் ரூபாய் வரை குறைவான விலையில் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும் வாய்ப்பும் இருக்கின்றது.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக கடந்த காலங்களைக் காட்டிலும் நடப்பாண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்துள்ளது. இத்தகைய சூழல் இந்தியாவில் நிலவுகின்ற காரணத்தினால் வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டுகின்றன. அந்தவகையில், ஸ்விட்ச் நிறுவனம் புதிய சிஎஸ்ஆர் 762 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வருவதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: 3, 4, 5 ஆகிய படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








