கிஃப்ட் பாக்ஸில் வரும் எலெக்ட்ரிக் பைக்... ஹோம் டெலிவரியை வேற லெவலில் கையாளும் டார்க் மோட்டார்ஸ்!
டார்க் மோட்டார்ஸ் (Tork Motors) அதன் எலெக்ட்ரிக் பைக்கை ஹோம் டெலிவரி செய்யும் விதம் பற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட்டார்ஸ் (Tork Motors) நிறுவனத்தின் க்ரடோஸ் (Tork Kratos) எலெக்ட்ரிக் பைக்கின் டெலிவரி பணிகள் அண்மையில் தொடங்கின. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மின்சார பைக்கின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் நிறுவனம் தற்போது டெலிவரி பணியைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது.

வாடிக்கையாளர்கள் சிலர் தங்களுக்கு அருகில் இருக்கும் டார்க் மோட்டார்ஸ் ஷோரூம்களுக்கு சென்று தங்களுக்கான க்ரடோஸ் இ-பைக்கை டெலிவரி பெற்று வரும்நிலையில், ஒரு சிலர் தங்களுக்கான க்ரடோஸை டோர் டெலிவரி பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதில், டோர் டெலிவரி பெறுபவர்களுக்கு டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இ-பைக்கை எந்த மாதிரியான அணுகுமுறையில் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கான எலெக்ட்ரிக் பைக்கை கிஃப்ட் பாக்ஸில் போட்டு அனுப்பி வைப்பதைப் போல் மிகவும் பிரத்யேகமாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவின் வாயிலாக நிறுவனம் எவ்வளவு பாதுகாப்பாக பைக்குகளை அனுப்பி வைக்கின்றது என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

வீடியோவை டார்க் மோட்டார்ஸே அதன் அதிகாரப்பூர்வ யுட்யூப் சேனல் வாயிலாக வெளியிட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இருசக்கர வாகனத்தை மூடப்பட்டிருக்கும் பெட்டகம் ஃபைபர் கிளாஸால் ஆனது. இது உள்ளே இருக்கும் இருசக்கர வாகனத்தை மிக தெளிவாக வெளிக்காட்டும் வகையில் உள்ளது.

இதுமட்டுமின்றி, இருசக்கர வாகனத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வாக்கியங்கள் பெட்டகத்தின் மேற்பகுதியில் எழுத்தப்பட்டுள்ளன. அதாவது, எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ஜ் திறன், உச்சபட்ச வேகம், எத்தனை நிற தேர்வுகளில் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றும் என்ன மாதிரியான தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது போன்ற முக்கிய தகவல்களே இடம் பெற்றிருக்கின்றன.

இருசக்கர வாகனத்தின் முக்கிய தகவல்கள் மட்டுமின்றி பிராண்ட் பற்றிய சில முக்கிய குறிப்புகளும் பெட்டகத்தின்மேல் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பெட்டகம் சிறு கீரல்கூட இல்லாமல் க்ரடோஸ் ஆர் பைக்கை டெலிவரி வழங்க உதவியாக இருக்கும். நிறுவனத்தின் சிஇஓ-வே தன்னுடைய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரை பயன்படுத்தி க்ரடோஸ் ஆர் எலெக்ட்ரிக் பைக்கை டெலிவரி கொடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டார்க் க்ரோடோஸ் ஆர் இதுவே இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக்காகும். மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் அட்டகாசமான ஸ்டைல் ஆகியவற்றை இந்த பைக் கொண்டிருக்கின்றது. நிறுவனம் இப்பைக்கை ட்ரெல்லிஸ் ஃப்ரேமைக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது.

தொடர்ந்து தொழில்நுட்ப வசதிகளாக 4.3 அங்குல டிஎஃப்டி திரை, இணைப்பு வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. டார்க் க்ரடோஸ் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. க்ரடோஸ் மற்றும் க்ரடோஸ் ஆர் ஆகிய இரு விதமான தேர்வுகளே அவை ஆகும். இதில், க்ரடோஸ் 1.92 லட்சத்திற்கும், க்ரடோஸ் ஆர் 2.07 லட்ச ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது.

இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். இந்த சூப்பரான திறன்களுக்காக இ-பைக்கில் 4 kWh பேட்டரி பேக்கும், 9 kW மற்றும் 38 என்எம் வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் ஆக்ஸியல் ஃப்ளக்ஸ் மோட்டார் ஆகும்.
இவ்வளவு சூப்பரான அம்சங்கள் கொண்ட பைக்கையே டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் பிரத்யேகமாக முறையில் டெலிவரி வழங்கியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. டார்க் க்ரடோஸ் இ-பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ரூ. 999 என்ற முன் கட்டணத்தில் இப்போதும் க்ரடோஸ் பைக்கிற்கான புக்கிங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








